உள்நாடு

2022 ஆம் ஆண்டில் இருந்ததை விடவும் இன்று பொருட்களின் விலை குறைந்துள்ளன; பொருளாதார நிலைத்தன்மை சீர்குலையாத வகையில் மக்களின் சுமைகள் குறைக்கப்படும்       – பொலன்னறுவையில் ஜனாதிபதி தெரிவிப்பு

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், இலங்கையின் நிலையானதும் செழுமையானதுமான எதிர்காலத்திற்கு வாக்களிப்பதா அல்லது குழப்பமான ஸ்தீரமற்ற நிலைக்குச் செல்ல வாக்களிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் செழுமைக்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதென தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022 ஆம் ஆண்டை விடவும் தற்போது பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்ட நிலைத்தன்மை சீர்குலையாத வகையில் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (13) நடைபெற்ற “இயலும் ஸ்ரீ லங்கா” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததோடு இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, வளர்ந்த நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வரிகளைக் குறைப்பதாக சஜித்தும் அநுரவும் பொய் வாக்குறுதிகளை அளித்து இரவில் விழுந்த குழியில் பகலிலும் தள்ளத் தயாராகின்றனர். வரிகளைக் குறைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்று எடுத்த நடவடிக்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த கூட்டத்துக்கு முன்னர் திம்புலாகல விகாரைக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திம்புலாகல ராஹுலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

இதன்போது திம்புலாக நாயக்க தேரரினால் செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டதோடு, விகாரையின் அபிவிருத்தி பணிகள் குறித்தும் கேட்டறிந்துக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

”எனது பாட்டனார் தான் இந்த பிரதேசத்தில் மக்களை குடியமர்த்தினார். காணிகளை விற்கலாம் என அன்று பேர்மிட் முறைக்கே காணி வழங்கப்பட்டது. முன்னைய காலத்தைப் போன்று அன்றி, இன்று கல்வி கற்றோர் உள்ளனர். அதனால் அவர்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும் என முடிவு செய்தேன்.2003 இல் இருந்து இந்த உரிமையை வழங்க நான் முயன்றேன். ஜனாதிபதியான பின்னர் எனது அதிகாரத்தை பயன்படுத்தி, ‘உறுமய’ திட்டத்தை ஆரம்பித்தேன். தற்பொழுது இந்தத் திட்டம் தேர்தல் காலம் என்பதால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 19 இலட்சம் பேருக்கு காணி உரித்து வழங்க வேண்டும். இதற்கென சட்டமொன்றை கொண்டு வந்து 3 வருடங்களில் அதனை நிறைவு செய்ய இருக்கிறேன்.

நாம் ஆரம்பித்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே மக்களின் ஆணையை கோருகிறோம். நாட்டில் ஸ்தீரநிலையை ஏற்படுத்தியுள்ளோம். அஸ்வெசும வழங்கினோம். சம்பள உயர்வு வழங்கினோம். வங்குரோத்து இல்லாத காலத்தில் இதனை யாராவது செய்தார்களா? வங்குரோத்து அடைந்த சமயத்தில் இந்த சேவைகளை வழங்கியதாக என்னைத் திட்டுகின்றனர். இந்தப் பிரதேசங்களில் விவசாயத்தை நவீனமயப்படுத்தவுள்ளோம். ஹெக்டயாருக்கு 8 மெற்றிக் தொன் அறுவடையைப் பெற முடியும். அதற்குத் தேவையான உபகரணங்களையும் உதவிகளையும் வழங்கவுள்ளோம். உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும். உரத்திற்கு நிவாரணம் வழங்க முடியும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் நிவாரணம் வழங்க முடியும். வாழ்க்கை செலவை குறைக்க வேண்டும். தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வரிச் சுமையை குறைத்தல், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறுதல், ‘உறுமய’, ‘அஸ்வெசு’ திட்டங்களைப் பலப்படுத்துல் ஆகிய 5 அம்சங்கள் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

2022 இல் 76 பில்லியன்டொலர்களாக இருந்த மொத்தத் தேசிய உற்பத்தி 2024 இல் 84 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளோம். இதனால் அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்தது. இதனால் அரச ஊழியர்களுக்கு 10 ஆயரம் ரூபா வழங்கினோம். 2025 இல் மேலும் வருமானம் உயரும் .மேலும் சலுகைகள் வழங்கப்படும். நாடு முன்னேறினால் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவு மேலும் குறைக்கப்படும்.

வரியைக் குறைப்பதாக சிலர் கூறுகின்றனர். அதனால் தான் பின்னடைவு ஏற்பட்டது. கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் வற் வரியைக் குறைத்தார். அதனோடு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அநுரவும் சஜித்தும் அதே போன்று வற் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளனர். இரவில் விழுந்த குழியில் பகலில் விழுமாறு சொல்கிறார்கள். நாம் முட்டாள்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களா,?

ஒரு இலட்சம் சுயதொழில்களை உருவாக்க இருக்கிறோம். அது தவிர மேலும் 50 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் பயிற்சி பெற நிதியுதவி வழங்கப்படும். கடந்த 4 வருடங்களாக தொழில் வாய்ப்புகள் வழங்க முடியவில்லை. அதனால் இளைஞர் யுவுதிகளுக்கு வருமான வழிகளை அதிகரிக்க இருக்கிறோம்.

புதிதாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவோம். மொத்தத் தேசிய உற்பத்தியை 2 அல்லது 3 மடங்காக உயர்த்துவோம். அடுத்து ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உயர்த்துவோம். அத்தோடு ‘உறுமய’, ‘அஸ்வெசு’ திட்டங்களைப் பாதுகாப்போம். ‘அஸ்வெசும’ என்பது சமுர்த்தி முறையை இல்லாது செய்யும் திட்டமல்ல. அது குறித்து அஞ்சத் தேவையில்லை.

ஜே.ஆர் ஜெயவர்தன, பிரேமதாஸ ஆகியோருடன் இப்பகுதிகளுக்கு வந்து பணியாற்றியுள்ளேன். அவர்கள் தலைமை வகித்த ஐ.தே.கவிற்குத் தான் நான் இன்று தலைமைத்துவம் வழங்குகிறேன். டி.எஸ்.சேனாநாயக்க,ஜே.ஆர் ஜெயவர்தன மற்றும் பிரேமதாஸவின் ஐ.தே.க கட்சியை நான் பாதுகாக்கிறேன். ஐ.தே.கவினருக்கு வேறு கட்சி கிடையாது. தரம் குறைந்த இன்னொரு ஐ.தே.க கிடையாது.1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தன இந்த நாட்டை முன்னெற்றினார்.1989 இல் கைத்தொழில் மூலோபாயத்தை ஆரம்பித்தேன். அதனை ஆர். பிரேமதாஸ அதனைத் தொடர்ந்து முன்னெடுத்து ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். எனவே நாம் கடந்த 2 வருடங்களில் ஆரம்பித்த திட்டங்களை முன்னெடுப்பதற்காக கேஸ் சிலிண்டருக்கு வாக்களிப்போம்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன ;

”சஜித் பிரேமதாஸவுடன் 54 எம்.பிகள் இருந்தனர். ஜே.வி.பியிடம் 3 எம்.பிகள் இருந்தனர். ஆனால் அவர்கள் நாட்டை ஏற்கவில்லை. ஆனால் தனியொரு எம்.பியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றார். நாடு மீட்சியடைந்துள்ள நிலையில் தற்பொழுது நாட்டை ஏற்பதாக பலர் கூறுகின்றனர். வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்களில் மக்களை அழைத்து வந்து பெரிய கூட்டம் திரண்டிருப்பதாக காண்பிக்க எதிரணி முயல்கிறது. ஆனால், பொலன்னருவை மாவட்டத்தில் பெருவெற்றியை பெற்றுக் கொடுப்போம்” என்றார்.

ஆளுநர் மஹிபால ஹேரத்:
”இந்த மேடையில் பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி, ஐ.தே.க என அனைத்து கட்சிகளும் இணைந்துள்ளன. உலகம் அங்கீகரிக்கும் நாடாக இலங்கையை மாற்றியவர் ரணில் விக்ரமசிங்க. நாம் 40-45 வருடங்களாக அரசியல் செய்கிறோம். உலகில் அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் அனுபவம் வாய்ந்த திறமையான தலைவர் ரணில் விக்ரமசிங்க. அவரை உலகத் தலைவர்கள் அனைவரும் மதிக்கின்றனர். 2 வருடத்தில் மூச்செடுக்க ஒக்சிஷன் வழங்கியது போன்று எதிர்கால சந்ததித்காக மேலும் 4 வருடங்கள் அவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். எமது எதிர்கால சந்ததியை உலகில் தலை சிறந்தவர்களாக மாற்ற ரணில் விக்ரமசிங்கவினால் தான் முடியும்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசானாயக்க:
”அனைவரும் நாட்டின் எதிர்காலத்தை பலப்படுத்துவதற்காக பேதங்களை மறந்து இணைந்துள்ளோம். தன்னால் நிறைவேற்றக் கூடிய விடயங்களை மாத்திரமே ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியாக முன்வைத்துள்ளார். ஏனைய வேட்பாளர்கள் நிறைவேற்ற முடியாத பலவற்றை முன்வைத்துள்ளனர். சிலர் வழமையாக வாக்களிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கவுள்ளனர். குரோதத்திற்காக ஜே.வி.பிக்கு வாக்களித்து எந்த நன்மையும் கிடைக்காது. பரீட்சார்த்தமாக வழங்கும் வாக்குகளினால் நாட்டுக்கு பலன் கிடைக்காது. நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்திற்காகவே கட்சி பேதமின்றி கைகோர்த்துள்ளோம்.” என்றார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி :

”அநுர குமாரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. நேரடி வரியையும் மறைமுக வரியையும் குறைப்பதாக அநுர கூறியுள்ளார். அவ்வாறு செய்யப் போனதால் தான் கஷ்டப்பட்டு அமைத்த பொதுஜன பெரமுன அரசாங்கம் வீழ்ந்தது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அநுரவும் சஜித்தும் மாறி மாறி பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். காலவதியான பொருளாதார கொள்கைகளினால் எந்தப் பயனும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் திறமையினால் தான் பிரச்சினையில் இருந்து மீண்டோம். மகாவலி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவெலி பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி வழங்க வேண்டும் என்று எனக்கு பணித்தார். இவ்வாறான கொள்கை முடிவு எடுத்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. விவசாயிகளை எழுச்சிப் பெறச் செய்ய விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும். அதனால் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.” என்றார்.

அமைச்சர் அலி சப்ரி:

”நாம் எடுக்கும் முடிவில் தான் நாம் முன்னோக்கிச் செல்வதா அல்லது 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிச் செல்வதா என்பது அடங்கியுள்ளது. விவசாயிகளை பாதுகாக்க எப்படியாவது உரத்தை வழங்க வேண்டும் என்று எனக்கு பணித்தார். வெளிநாட்டு உதவி பெற்று விவசாயிகளுக்கு உரத்தை வழங்கியதால் தான் கடந்த போகங்களில் சிறந்ந அறுவடை கிடைத்தது. மாற்றம் என்பது மீள வீழ்வதற்காக அல்ல. எழுச்சி பெறுவதற்காகவே என்பதை உணர்ந்து முடிவு செய்ய வேண்டும்.

எமது நாட்டில் 5 ஆயிரம் ரூபா பணநோட்டு இருப்பது போல லெபனானில் ஒரு இலட்சம் ரூபா பணநோட்டு பயன்படுத்தப்படுகிறது. கிரீஸிற்கு எழுச்சி பெற 12 வருடங்கள் சென்றது. IMFஇன் ஆதரவைப் பெற வேண்டுமா? இல்லையா? என்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியதில் தேவையில்லை என மக்கள் வாக்களித்தனர். அதன் காரணமாக நாடு மீண்டும் வீழ்ந்தது. எழுச்சி பெற நீண்ட காலம் பிடித்தது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க ரணில் விக்ரமசிங்கவின் கரத்தை பலப்படுத்துவோம். 3 பிரதான வேட்பாளர்களில் யார் தகுதியானவர் என்பது உங்களுக்குத் தெரியும். ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே சர்வதேச தொடர்புகள் இருக்கிறது” என்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான பி.ஹெரிசன்,சந்ரசிரி சூரியாரச்சி, முன்னாள் ஆளுநர் பேசல ஜெயரத்ன,பிரதேச அரசியல் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். .

ஊடகப் பிரிவு
ரணில் 2024 – இயலும் ஶ்ரீலங்கா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *