மஹிந்தவை ஆட்சியில் அமர்த்த பிரசாரம் செய்தமை அநுரவுக்கு ஹலாலா? -கேள்வி எழுப்பும் முஜீபுர் ரஹ்மான்
“ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ கேஸில் மஹிந்த ஊழல் செய்தமை தெரிந்தும், 2005 இல் அவரோடு கூட்டு அமைக்கும் போது, அநுரவுக்கு அது ஹராம் எனத் தெரியவில்லையா ?” என, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
தெஹிவளையில் இன்று (31) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
“இன்று, அநுர குமார முஸ்லிம்களிடம் ஹராம் ஹலால் பற்றிப் பேசுகிறார். திருடர்களுக்கு வாக்களிப்பது ஹராம் என்கிறார். திருடர்களைப் பிடிக்க வந்துள்ள அவருக்கு வாக்களிப்பது ஹலால் என்கிறார். ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ கேஸில் மஹிந்த ஊழல் செய்தமை தெரிந்தும், 2005 இல் அவரோடு கூட்டு அமைக்கும் போது, அநுரவுக்கு அது ஹராம் என விளங்கவில்லையா ? என நான் அவரிடம் கேட்கின்றேன்.
1995 இல் சந்திரிக்காவோடு ‘டீல்’ வைத்த அவர், ‘மஹிந்த ஊழல்வாதி’ எனத் தெரிந்திருந்தும் கூட, 2005 இல் அவரை வெற்றிபெறச் செய்ய பிரசாரம் செய்தார். மஹிந்தவை ‘துட்டு கெமுனு அரசன்’ என்று கூறியவரும் இந்த அநுர குமார திஸாநாயக்க என்பதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
அநுரவிடம் உள்ள ‘ஊழல் பைல்கள்’ அனைத்துமே, ராஜபக்ஷ குடும்பத்தினரதும், அவரது கட்சிக்காரர்களுடையதே.
ராஜபக்ஷாக்களை ஆட்சிக்குக் கொண்டு வர, நான் கைகளில் மை பூசிக்கொள்ளவில்லை. அநுரவே அத்திருடர்களை ஆட்சிக்குக் கொண்டு வர அவரது கைகளிலேயே மை பூசிக்கொண்ட தலைவராவர்” என்று சுட்டிக் காட்டினார்.
( ஐ. ஏ. காதிர் கான் )