உள்நாடு

நபி பிறந்த மாதத்தை கண்ணியப்படுத்துவோம்.ஜெம்மியது ல் உலமா அறிக்கை

கௌரவ மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு

ரபீஉனில் அவ்வல், இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு, இம்மாதத்தின் விஷேட அம்சங்களில் ஒன்றாகும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினூடாக 30.01.2022ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘இலங்கை முஸ்லிம்களுக்கான நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்’ என்ற மன்ஹஜ் அறிக்கையில் 7.3ஆம் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமை, கீர்த்தி, வாழ்க்கை வரலாறு, குணாதிசயம் மற்றும் ஸுன்னா என்பவற்றை மார்க்க வரையறைகளைப் பேணி முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் எடுத்துச் சொல்வது, அதுபற்றி பிரஸ்தாபம் செய்வது, அவர்களது நேசத்தை உள்ளங்களில் வேரூன்றச் செய்வது முஸ்லிம்களின் மீது கடமையாகும். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதம் பொன்னான சந்தர்ப்பமாகும். அம்மாதத்தில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் ஏற்றமானதாகும்.’

அந்தவகையில் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸீராவை வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதும் அவர்களது ஸுன்னாவை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில் விருப்பத்தை உண்டுபண்ணுவதும் அவர்கள் மீதான எல்லையற்ற அன்பை மனிதர்களின் உள்ளங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் எமது கடமையும் காலத்தின் தேவையுமாகும்.

அதனடிப்படையில், மஸ்ஜித்களை மையப்படுத்தி ஐவேளை தொழுகைகளில் மக்கள் அதிகம் வருகை தரும் தொழுகைகளை கருத்திற்கொண்டும் மக்களது ஏனைய அமல் இபாதத்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையிலும் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ அறிமுகம் செய்து மக்கள் மயப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(ஷமாஇலுத் திர்மிதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.) மேலும், இதுதொடர்பான மேலதிக வழிகாட்டல்களை ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹு தஆலா எம்மனைவரையும் அவனது தீனுடைய பணியில் பொருந்திக் கொள்வானாக!

** முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

** அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் – பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *