உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் சுற்றாடல் கொள்கை வெளியீடு: இலங்கை மன்றக் கல்லூரி -தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க

ஒரு தேசம் என்ற வகையில் இந்த சுற்றாடல் துறையை மையமாகக் கொண்ட மேலும் பல சட்டங்களால் இந்த துறை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அண்ணளவாக எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சட்டங்களால் நேரடியாக சுற்றாடல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, ஏனைய துறைகள் அமுலாக்கப்படும்போதும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இற்றைப்படுத்த வேண்டிய சட்டங்களை அவ்வாறு திருத்தியமைக்கலாம். ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் நாங்கள் சுற்றாடல் சம்பந்தமான பல்வேறு சமவாயங்களில் கைச்சாத்திட்டு இருக்கிறோம். எனவே, சர்வதேச ரீதியாகவும் நாங்கள் ஒருசில உடன்பாடுகளை செய்திருக்கிறோம். அதுமாத்திரமன்றி எங்களுடைய உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு சில வழக்கு தீர்ப்புகளில் எமது சுற்றாடலை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, கொள்கைகள், சட்டங்கள், சர்வதேச சமவாயங்கள் இவை அனைத்தும் எமக்கு இந்த சூழற்றொகுதியின் பாதுகாப்பினை உறுதி செய்கின்றன.

சட்டங்கள், சமவாயங்கள், வழக்குத் தீர்ப்புகளால் தரப்பட்டுள்ள காப்பீடு எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும்.

1998 இல் பொஸ்பேட் படிவு பற்றிய வழக்கு தீர்ப்பில் எமது நாட்டில் இருந்து பொஸ்பேட் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுப்பதற்காக வழி சமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால், நான் சுற்றிவளைத்து விற்க ஆரம்பித்தேன் என அமைச்சர் கூறினார். அதாவது, தற்போது இருக்கின்ற சட்டங்களின் ஓட்டைகளுக்குள் நுழைந்து அந்த வழக்குத் தீர்ப்பினை தவிர்த்து அதில் அகப்பட்டுக் கொள்ளாமல் நான் மீண்டும் அதனை தனியார் கம்பனியின் ஊடாக விற்பனை செய்வதில் வெற்றியடைந்தேன் என அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். அதை அவர் ஒரு வெற்றியென கருதுகிறார். எனவே, இந்த சட்டங்கள், சமவாயங்கள், வழக்குத் தீர்ப்புகளால் தரப்பட்டுள்ள காப்பீடு எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும். அது எங்களுடைய அரசியல் அதிகாரத்துவத்தின் கையிலேயே இருக்கிறது. எனவே, அரசியல்வாதிகள் செயலாற்றுகின்ற விதம் மற்றும் சுற்றாடல் ஆர்வலர்கள் அதை நோக்குகின்ற விதம் என்பவற்றுக்கு இடையில் எமது நாட்டில் முரண்பாடு நிலவுகிறது. அதாவது, சுற்றாடலை பாதுகாப்பதற்கான பணியை சுற்றாடல் ஆர்வலர்கள் புரிந்து வருகின்ற அதேவேளையில் சுற்றாடல் நாசமாக்குகின்ற முன்னோடிப் பணியை அரசாங்கம் செய்வதால்தான் இந்த முரண்பாடு தோன்றுகிறது. எனவே, கடிதங்களை பார்த்தாலும், ஆர்ப்பாட்டங்களை பார்த்தாலும், தாக்கல் செய்த வழக்குகளை பார்த்தாலும் அவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு எதிரானவை ஆகும்.

சுற்றாடல் என்பது தொழிலையும் வாழ்க்கையையும் ஒருங்கிணைத்த துறையென நான் நினைக்கிறேன்.

எனவே, நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விடயங்களை கவனித்து பார்த்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சுற்றாடலை பாதுகாக்க சார்பானவையா? எதிரானவையா? என்பதில் தான் இந்தப் பிரச்சினை தங்கியிருக்கிறது. முரண்பாடு இங்குதான் நிலவுகிறது. எனவே, எமது நாட்டில் எங்கேயாவது பாரியளவிலான மணல் கரைசேர்த்தல், சுற்றாடலை நாசமாக்கும் வகையில் சுரங்க அகழ்வு, அப்படியும் இல்லாவிட்டால் சுற்றாடலை அழிக்கின்ற கருத்திட்டங்கள், சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் கற்குழிகள் இவற்றை பற்றி கவனம் செலுத்தினால் இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அரசியல் அதிகாரத்துடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பு நிலவுகிறது. சற்று சிந்தித்து பாருங்கள், முத்துராஜவெல காணிகள் பற்றிய பிரச்சினையை. அதன் பின்னணியில் அரசியலும் பணத்தை ஈட்டிக்கொள்கின்ற நோக்கமுமே இருக்கின்றது. எனவே, நீங்கள் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருக்கையில் உங்களுக்கு எதிரானவர்களாக ஆட்சியாளர்களே செயலாற்றி வருகிறார்கள். நாங்கள் அரசியல்வாதிகள். நீங்கள் சுற்றாடல் துறை சார்ந்த சிறப்பறிஞர்கள். ஒரு சில தொழில்கள் இருக்கின்றன. அவர்களின் தொழில் ஒன்று, வாழ்க்கை இன்னொன்று. பொறியியலாளரை எடுத்துக்கொண்டால் அவரது தொழில் நிர்மாணத் தொழிற்றுறை. அவருடைய வாழ்க்கை அதைவிட வித்தியாசமாக நிலவுகிறது. ஆனால், சுற்றாடல் என்பது தொழிலையும் வாழ்க்கையையும் ஒருங்கிணைத்த துறையென நான் நினைக்கிறேன். அது அவர்களின் கல்வியின் ஒரு பகுதியோ, கடமையின் ஒரு பகுதியோ அல்லது சுற்றாடல் மீதான ஈடுபாடு பற்றியது மாத்திரமல்லாமல், தமது வாழ்க்கையுடன் கணிசமான தொடர்பினை கொண்டிருக்கிறது. ஆகவே, சுற்றாடல் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ள பணிக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு நிலவுகிறது. அதனால், ஒரு சிலர் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கி, அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து, சில வேளைகளில் அவமதிப்புக்களை எதிர்நோக்கி தாக்குதல்களுக்கு இலக்காகி இதனை பாதுகாகத்துக் கொள்வதற்காக அரும்பணியாற்றி வருகிறார்கள். எனவே, எங்களுடைய வகிபாகம் என்ன? நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்குகிறோம். அது எதற்காகவென்றால் சுற்றாடலை பாதுகாப்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சிக்கு உறுதுணையாக அமைவதற்காகும்.

இப்போது மிக அதிகமான தண்ணீர் கடைகள் அநுராதபுரத்தில் தான் இருக்கின்றன.
நாங்கள் எமது வாழ்நாள் பூராவிலும் அனுபவிக்கின்ற விடயங்கள் இருக்கின்றன. நீங்கள் அதனை சுற்றாடல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் கற்று இருப்பீர்கள். என்னை எடுத்துக்கொண்டால், நான் அநுராதபுரத்தை சேர்ந்தவன். நாங்கள் சிறுபராயத்தில் காணிகளில் சிறிது ஆழத்திற்கு தோன்றினால் தண்ணீர் கிடைக்கும். ஆனால், இன்று அதைவிட பலமடங்குகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதென்பதை நாங்கள் உணர்கிறோம். அதை நாங்கள் இப்போது அனுபவித்து வருகிறோம். முன்னர் எங்களுடைய ஊர்களுக்கு அருகில் யானைகள் சஞ்சரித்தன. ஆனால், ஊருக்குள் நுழையவில்லை. இப்பொழுது நாங்கள் கேள்விப்படுகின்ற விடயம்தான் எங்களுடைய நகரங்களுக்கே யானைகள் வந்துவிட்டன. எனவே, ஏதோவொன்று நடந்துவிட்டதை நாங்கள் உணர்கிறோம். எமது வாழ்நாளில் அநுராதபுரத்தில் தண்ணீரை விற்பனை செய்யும் கடைகளைத் திறப்பார்கள் என நாங்கள் நினைக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் வக்கடையில் தண்ணீர் பருகியவர்கள். குளத்து நீரை நாங்கள் கைகளால் ஏந்திப் பருகியிருக்கிறோம். கிணறு வெட்டியும் தண்ணீர் குடித்திருக்கிறோம். அதனால், நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் அநுராதபுரத்தில் தண்ணீர் கடையை திறப்பார்கள் என நினைக்கவில்லை. இப்போது, மிக அதிகமான தண்ணீர் கடைகள் அநுராதபுரத்தில் தான் இருக்கின்றன.

எங்களுடைய எதிர்கால சந்ததியினர் இதைவிட பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டி நேரிடும்

அதைப்போலவே, மக்கள் பலவிதமான நோய்களுக்கு இலக்காகி வருகின்றார்கள். நாங்கள் கண்டிராத சிறுநீரகக் கோளாறு வியாபித்து வருகிறது. சுவாச நோய்களை எதிர்நோக்கி வருகிறார்கள். ஒரு வாரம் மழை பொழிந்தால் குளங்கள் கரைமேவிப் பாய்கின்றன. இரண்டு வாரம் வெய்யில் அடித்தால் குளங்கள் வற்றிப் போகின்றன. எனவே, இங்கு ஏதோவொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கிறோம். அதாவது, எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்டிராத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள், பாரிய வரட்சி, மண்ணரிப்பு இவை எல்லாவற்றையும் இப்பொழுது நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். எனவே, இவை தொடர்பில் விஞ்ஞான ரீதியான முற்றாய்வுகளை செய்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதென நாங்கள் நினைக்கிறோம். ஒட்டுமொத்தமாக நோக்கினால் இது எமது நாட்டில் சுற்றாடல் துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் அழிவையே வெளிக்காட்டுகிறது. அதனை அனுபவிக்கின்ற தலைமுறையாக நாங்கள் மாறியிருக்கிறோம். எங்களுடைய எதிர்கால சந்ததியினர் இதைவிட பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டி நேரிடும். எனவே, ஒரு நல்லெண்ணம் கொண்ட தேவை எமக்கு இருக்கின்றது. நான் நினைக்கிறேன், இந்த நிலைமை 80ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் துரிதமாகியதென. அந்தக் காலத்திலே 1977 தேர்தல் காலமென நினைக்கிறேன், அப்போது மஹிந்த சோம தேர்தலில் போட்டியிட்டார். ஹபரண வீதியில் மரத்தண்டுகளில் அந்தக் காலத்திலே “வளர்ந்த பின்னர் நாங்களும் மஹிந்த சோமவிற்கே” என காட்போர்டில் எழுதியொட்டி இருந்தார்கள். எனவே, ஹபரண காட்டினை அழித்தவர்கள் அவர்களே என்பது ஒரு பிரபல்யமான விடயமாகும்.

உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் இணையாக பயணிக்கின்ற ஓர் அரசாங்கமே எமக்குத் தேவை.

எனவே, சுற்றாடலை பாதுகாத்து அதனை அனுபவித்த வாழ்க்கையை போன்றே அதனை அழித்ததன் பாதகவிளைவுகளை அனுபவிக்கின்ற வாழ்க்கையும் இப்போது எங்களுக்கு உரித்தாகியிருக்கிறது. இந்த மாற்றம் இரண்டு, மூன்று தசாப்தங்களில் ஏற்பட்டதென்றால் மேலும் சில தசாப்தங்கள் சென்றால் என்ன கதியேற்படும். எனவே, அரசியல் அதிகாரிகள் என்ற வகையில் எங்களுடைய அரசாங்கம் இந்த துறை பற்றி உங்களால் முன்வைக்கப்படுகின்ற திட்டங்களையும் அவசியப்பாடுகளையும் எங்களுடை தேவைகளாக கருதி இந்த சுற்றாடல் துறையில் ஏற்பட்டுள்ள அழிவை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எனவே, எங்களுக்குத் தேவையான அரசாங்கம் முரண்பாட்டு அரசாங்கம் அல்ல. உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் இணையாக பயணிக்கின்ற ஓர் அரசாங்கமாகும். இதற்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் உங்களுக்கு உங்கள் கடமையை சரிவர ஆற்றமுடியாத நிலைமை இருந்தது. அரசியல் அதிகாரத்துவம் தன்னால் தயாரித்துக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்துவதற்காக ஒன்றில் அரச அலுவலர்கள் அடிபணிய வேண்டும் அல்லது அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். அதனால், பெரும்பாலான சுற்றாடல் துறையைச் சேர்ந்தவர்கள் சரிவர கடமையை ஆற்றமுடியாமல் அதிலிருந்து விலகிச் சென்றுள்ளார்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறோம். உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் சமமாக பயணிக்கின்ற அரசாங்கத்தைத்தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். அதுப்போலவே, எங்களுக்கு ஒரு சில துரித தேவைகள் அவசியமாகின்றன. தோழர் ரவீந்திர தொடர்படு அருவி முறைமை பற்றி சுட்டிக்காட்டினார். அரசியல்வாதிகள் உரத்த குரலில் அரசியல் மேடைகளில் அநுர திசாநாயக்க எத்தனை குளங்களை அமைத்தார் என கேட்கிறார்கள். நான் பண்டுகாபய மன்னன் அல்ல. எமது நாட்டிலே 32 ஆயிரம் குளங்கள் இருந்தன. தற்போது அதில் 14 ஆயிரம் குளங்களே எஞ்சியிருக்கின்றன. அதில் 12 ஆயிரம் குளங்கள் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளன. எங்களுடைய முயற்சி எப்படிபட்டதாக அமைந்தது. ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்ற இந்த குளத்தொகுதியை புனரமைப்பதாகும். இவை பலவிதமான அபாயங்களை எதிர்நோக்கியிருந்தன. ஒன்று, அவற்றின் நீரேந்து பரப்புகள் அழிவடைந்திருந்தமை. அதன் காரணமாக குளங்களில் வண்டல் நிரம்பியிருந்தன. குளக்கட்டு சிதைவடைந்திருந்தன. அணைக்கட்டின் மடை அழிவடைந்திருந்தன. வாய்க்கால் தொகுதி சீரழிந்திருந்தன. எனவே, எங்களுடைய முயற்சி குளங்களை கட்டுவதல்ல. இவர்களுக்கு விளங்கவில்லை. பாவம்! எத்தனை குளங்களை அமைத்தீர்கள் என கேட்கிறார்கள். இந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிளாக குளங்களை புனரமைப்பது எமது முயற்சியாக விளங்கியது. சிலவற்றை பழைய நிலைமைக்கே எங்களால் கொண்டுவர முடியதாது. ஏனென்றால், நீரேந்து பரப்பில் ஏற்படுத்திய அழிவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியாது. அந்தப் பிரச்சினையை நாங்கள் எதிர்நோக்கினோம். ஆனால், இயலுமான உச்ச அளவில் நாங்கள் இந்தக் குளங்களின் தொகுதியை புனரமைத்தேயாகவேண்டும்.

ஒட்டுமொத்த குளங்களின் தொகுதிக்கும் புத்துயிர் அளிப்பதே எமது நோக்கமாகும்.

எங்களுக்கு இரண்டு பருவங்களில் பருவ மழை கிடைக்கின்றது. இடைப்பட்ட காலத்திலும் மழை வீழ்ச்சி கிடைக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் எமது நாடு மிகச் சிறந்த மழைவீழ்ச்சியை கொண்ட நாடாகும். உலர் வலயத்தை எடுத்துக்கொண்டால் அங்குதான் மிக அதிகமான குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏனென்றால், பருவகால மழைநீரை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மிக உயர்வான வெப்பநிலை நிலவுகிறது. எனவே, அவற்றில் சில தொடர்படு அருவி முறைமையாக விளங்கின. எனவே, அதுவொரு தனியான குளம் அல்ல. குளங்களின் தொகுதியாகும். நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் மதவாச்சி தொகுதியில் நாங்கள் ஒரு தொடர்படு அருவி முறைமையையே மீண்டும் புனரமைத்தோம். அதாவது, தனியொரு குளத்தை அமைப்பதல்ல, ஒட்டுமொத்த குளங்களின் தொகுதிக்கும் புத்துயிர் அளிப்பதாகும். அதுதான் எங்களுடைய தேவையாக அமைந்தது. எனவே, அந்த துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டுமென நாங்கள் நம்புகிறோம். மழைநீரை சேமித்துக்கொள்ள வேண்டும். நீர்மட்டத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிளான குளங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

ஒருவருடத்திற்கு 470 யானைகள் என்பதை ஒரு குவியலாக எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? அது வேதனை மிகுந்தது

அடுத்ததாக யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலை எடுத்துக்கொண்டால் 2023 ஆம் ஆண்டில் யானைகள் 139 பேரை கொன்றிருக்கின்றன. மனிதர்கள் 470 இற்கு கிட்டிய யானைகளை கொன்றிருக்கிறார்கள். எனவே, இந்த மோதல் ஒன்றிற்கு மூன்று என்ற விகிதத்திலேயே நிலவுகிறது. ஒருவருடத்திற்கு 470 யானைகள் என்பதை ஒரு குவியலாக எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? நாங்கள் தனியாகத்தானே யானைகளை பார்க்கிறோம். ஆனால், 470 யானைகளை குவித்துப் பார்த்தால் அந்தக் காட்சியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதனை நாங்கள் நிறுத்தியாக வேண்டும். எனவே, நாங்கள் இந்த யானைக் கடவைகளை மீள்நிறுவ வேண்டும். அவைகளின் சஞ்சரிப்பு மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். துரிதமாக விஞ்ஞான ரீதியான யானை வேலிக்கு நாங்கள் செல்ல வேண்டும். நீண்டகால ரீதியாக அவற்றுக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதற்கான சூழற்றொகுதியை எவ்வாறு அமைத்துக்கொடுக்கப் போகிறோம். நீரைப் பெற்றுக்கொள்வதற்கான காட்டுக் குளங்கள் தொகுதியை காடுகளில் புனரமைக்க வேண்டும். ஆகவே, இந்த யானைக் கடவைகள் பற்றியும், காட்டுக்குளங்கள் பற்றியும் நாங்கள் மீளவும் கவனம் செலுத்தவேண்டும். மேலும் பல விடயங்கள் இதில் இருக்கின்றன. இயற்கையான தாவரங்களால் இதனை கட்டுப்படுத்த முடியுமா என நீண்டகால ரீதியில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், இது சம்பந்தமான முன்மொழிவுகள் எங்களிடம் இருந்தால் அதனை முன்வையுங்கள். அதுபற்றியும் நாங்கள் பரிசீலனை செய்யத் தயார்.

எமது நாட்டில் அண்ணளவாக ஒரு நாளுக்கு 7000 மெற்றிக் தொன் குப்பைகள் குவிகின்றன.

அடுத்தவிடயம், ஒரு நாளில் எமது நாட்டிலே பெருந்தொகையான குப்பைக் கூளங்கள் குவிகின்றன. அண்ணளவாக ஒரு நாளுக்கு 7000 மெற்றிக் தொன்கள். நாங்கள் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள், மீள்பாவனை போன்ற திட்டங்களைத் தயாரித்தால் 7000 மெற்றிக் தொன் குப்பைக் கூளங்கள் ஒரு நாளில் குவிவதை கட்டுப்படுத்த முடியும். சரியான திட்டத்தை வகுத்தால் எங்களால் இதனை குறைத்துக்கொள்ள முடியும். சேர்கின்ற குப்பைகளின் கணிசமான பகுதியை மீள்சுழற்சி செய்ய முடியும். கனடாவில் இருக்கிறார், இலங்கையைச் சேர்ந்த ஒருவர். உங்களுக்குத் தெரியுமென் நினைக்கிறேன். நீண்ட தலைமயிரை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். சுதத் என்பது அவரது பெயர். அவர் கனடாவில் குப்பைக்கூள மீள்சுழற்சியில் மிகவும் உயர் மட்ட நிலையில் இருக்கிறார். நான் அவருடைய தொழிற்சாலைகளை பார்க்கப் போயிருக்கிறேன். அவர் தனது தொழில்நுட்பத்தையும் அறிவையும் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வர தயார். அதாவது, கொலன்னாவ குப்பை மேடு தொடர்பானதாகும். நான் வந்தேன், ஆனால், ஒரு கம்பனியை உருவாக்கி கம்பனியில் நூற்றுக்கு ஐம்பது வீதமான பங்குகளை அவருக்குத் தருமாறு அமைச்சர் கூறினார். அதனால், நான் திரும்பிப் போனேன். நீங்கள் அரசாங்கத்தை அமைத்த நாளில் நான் பணத்தையும் எடுத்துக்கொண்டு, தொழில்நுட்பத்தையும் எடுத்துக்கொண்டு, அறிவையும் எடுத்துக்கொண்டு வருகிறேன். எனது பணத்திற்கு வட்டிக்கூட தேவையில்லை. உங்களுக்கு இயலுமான வரியை வருடந்தோறும் அந்த தொகையை எனக்கு மீளச்செலுத்துங்கள் என கூறினார். அவர்கள் வரத்தயார். எனவே, அரசியல் காரணமாகவே இவை தடைப்பட்டுள்ளன.

சுற்றாடலை பாதுகாப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக கிடைக்க வேண்டும்

அடுத்ததாக, வெலிகம பக்கத்தில் கடற்கரை பிரதேசத்திலே நடந்தால் கால்களில் சொப்பின் பேக் சிக்கும். பெம்பஸ் சிக்கும். நான் கண்டிருக்கிறேன். ஏனென்றால், அவற்றை கடலில் எறிந்தால் அவை மீண்டும் கரையை வந்துசேரும். ரிவஸ்டன் பக்கத்திற்கு சென்று பார்த்தாலும் அப்படித்தான். பொலித்தீன் பைகள். பிளாஸ்டிக் போத்தல்கள் நிறைந்திருக்கும். ஆகவே, மக்களிடம் மனோபாவ ரீதியான மாற்றமும் சுற்றாடல் தொடர்பில் தேவை. ஒரு சட்டம் போட்டே எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. சட்டங்கள் இருக்க வேண்டும். மரபுகள் நிலவ வேண்டும். சமூக விதிகள் நிலவ வேண்டும். அப்படித்தானே ஒரு சமூகம் நிலவவேண்டும். எனவே, சுற்றாடலை பாதுகாப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக கிடைக்க வேண்டும். ஏனென்றால், பொது மக்களின் அன்றாட செயற்பாடுகள் சுற்றாடலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தப் பணியை வெற்றியீட்டச் செய்ய வேண்டுமானால், பொதுமக்களின் பாரிய ஒத்துழைப்பு தேவையென நாங்கள் நினைக்கிறோம். ஆகவே, உலகில் சுற்றாடல் ரீதியாக பல்வேறு வளங்களைக்கொண்ட ஒரு நாடு தான் இலங்கை. ஆனால், எங்களுடைய அரசியல் தலைவர்களால் அழிக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு இழக்காக்கப்பட்ட நாடாக மாறியிருக்கிறோம். எனவே, முதலாவது பணி இவற்றை நிறுத்துவது. அடுத்தது படிப்படியாக மீள்நிறுவுவது.

உங்களுடைய அறிவையும் எங்களுடைய தேவையையும் ஒன்றுசேர்த்து நாங்கள் சுற்றாடலை பேணுவோம்

இதற்கு முன்னர் ஒரு தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்று மொனராகலையில் உரையாற்றியபோது, கடல்நீரை சுத்திகரித்து மொனராகலை மக்களுக்கு பருக கொடுப்பதற்கான கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதாக கூறினார். நான் கேட்கிறேன், மொனராகல கடல் நீரை சுத்திகரித்து பருக வேண்டிய ஒரு பிரதேசமா? அது ஒரு சில உலக நாடுகளுக்கு ஏற்புடையதாகும். அவர்களே சுற்றாடல் மீது பாரிய சேதங்களை ஏற்படுத்தி அவர்களே அதிலிருந்து மீட்புப் பெறுதவற்கான வழிவகைகளையும் முன்வைக்கிறார்கள். அவை பாலைவனங்கள் இருக்கின்ற நாட்டுக்கான தீர்வுகள் ஆகும். எமது நாட்டுக்கு அவை பொருத்தமானவை அல்ல. எனவே, இதுதொடர்பான அறிவும் அனுபவமும் வாய்ந்தவர்களே நீங்கள். உங்களில் ஒரு சிலருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. என்னைவிட இதுபற்றிய அறிவுமிக்கவர்கள் நீங்களே. எனவே, உங்களுடைய அறிவையும் எங்களுடைய தேவையையும் ஒன்றுசேர்த்து நாங்கள் இதனை சாதிப்போம். அதற்காக அணித்திரள்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன்.

நன்றி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *