ஜோ ரூட்டின் அசத்தல் சதத்துடன் முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்
உலகப் புகழ் பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்த இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது ஜோ ரூட் பெற்றுக் கொடுத்த அசத்தல் சதத்தின் உதவியுடன் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான நிலையில் உள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி நேற்று (29) லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்திருந்தது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதற்கமைய தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது குஸ் அட்டிங்ஸன் மற்றும் மெத்திவ் பொட்ஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து பெற்றுக் கொண்ட 74 மற்றும் 20 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இவ்விருரும் தமக்கிடையில் பிரிக்கப்படாத 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தனர்.
முதலில் களம் நுழைந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான டென் லாரன்ஸ் (9) மற்றும் அணித்தலைவரான ஒலிவ் பொப் (1) என ஏமாற்றம் கொடுத்த போதிலும், மற்றைய ஆரம்ப வீரரான பென் டுகெட் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து ஓரளவிற்கு அணிக்கு வலுச்சேர்த்தார். இருப்பினும் 4ஆம் இலக்க வீரரான களம் நுழைந்த நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது சர்தேச டெஸ்ட் அரங்கில் 33 ஆவது சதத்தினை பதிவு செய்து 143 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார, மிலான் ரத்னாயக்க மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர். இன்று போட்டியின் 2ஆவது நாள் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)