உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார ஆற்றிய உரை (பெருவெற்றிக்கான கந்தளாய் கூட்டம்)

நீங்கள் நீண்டகாலமாக வாக்களித்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்த தேர்தல்தான் தேர்தல் தினம் வரும்வரை மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற தேர்தல். முன்பெல்லாம் தேர்தல் என்றால் வேட்பாளரின் கட்சியை சேர்ந்தவர்கள் அழைப்பார்கள், சப்பாடு, சாராயம், பணம் போன்றவற்றை கொடுப்பார்கள். அம்மாவுக்கு சில் புடவைகளை கொடுப்பார்கள். அப்பாவுக்கு சாராய போத்தல் கிடைக்கும். இது எல்லாமே வாக்காளர்களுக்கு கொடுக்கும் இலஞ்சம் ஆகும். ஆனால், இது மக்கள் முதல் தடவையாக சுயமாக முன்வந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக உழைக்கின்ற தேர்தலாகும். கடைகள், முச்சக்கர வண்டிகள், சமூக வலைத்தளங்கள் எல்லாமே திசைகாட்டியின் சார்பில் தோற்றி வருகின்றன. நாங்கள் அவர்களை ஒருபோதுமே சந்தித்ததில்லை. மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் இந்த எழுச்சியை ரணிலுக்கோ, சஜித்துக்கோ என்ன செய்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆனால், ரணில் விக்ரமசிங்க இறுதி நேரத்தில் ஏதாவது திருகுதாளம் போடுவார் என மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாடு நிலவுகிறது. தேர்தலில் ஊழல்களை நடாத்த தேர்தல் பணியாளர்களின் உதவி தேவை. ஆனால், அரச அலுவலர்கள் எல்லோரும் திசைகாட்டிக்கே சார்பானவர்கள். எனவே, அந்த அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க உதவ மாட்டார்கள். அடுத்ததாக, அதுபோன்ற விசமத்தனமான வேலைகளை செய்ய பொலிசாரின் ஒத்துழைப்பு அவசியம். பொலிசாரும் ஒத்துழைக்க மாட்டார்கள். அவர்கள் வந்து இந்தக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள். அது அவர்களின் கடமை. ஆனால், அவர்கள் செயலாற்றுகின்ற விதத்தை பார்த்தால் அவர்கள் ஒரே மூச்சுடன் திசைகாட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது தெளிவாகின்றது. அடுத்ததாக, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவை. இராணுவத்தை பற்றி நினைத்துப்பார்க்க கூட ரணிலுக்கு முடியாது. அவர்களின் ஒத்துழைப்பும் தேசிய மக்கள் சக்திக்கே. எனவே, மக்களின் இந்த எதிர்பார்ப்பு மிகுந்த பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களுக்குத் தேவை சாதாரண வெற்றியல்ல. பலம்பொருந்திய வெற்றியாகும். எனவே, நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுப்பது செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை வெற்றிக்காக உழைப்பது மாத்திரமல்ல, அதன்பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அயராது உழைக்க அர்ப்பணிப்புடன் முன்வர வேண்டும்.

செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஏனைய கட்சியை சேர்ந்தவர்களை எந்தவிதத்திலும் நோகடிக்க வேண்டாம். அந்த அரசியல் கலாசாரம்தான் எமக்கு தேவை. நாங்கள் பிரிந்து சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமா? ஊர் பிளவுபட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் என்பார்கள். அவர்கள் தேர்தலுக்குப் பின் ஏனைய தரப்பினரை தாக்கினார்கள், கொடுமைப்படுத்தினார்கள். இறுதியில் மஹிந்தவும் ரணிலும் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்தை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையில் கோபதாபங்கள் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஸ, சஜித் பிரேமதாசவின் தங்கையை முன்னாள் ஜனாதிபதியின் மகள் என்பதற்காக கள்ளப்பணம் சம்மந்தமான பிரச்சினையில் இருந்து விடுவித்தார். ரணில் விக்ரமசிங்க ஷிரந்தி ராஜபக்ஸவை 350 இலட்சம் ரூபாவை கொடுத்து டொரின்டனில் ஒரு வீடு வாங்கிய வேளையில் பணம் எங்கே இருந்து வந்தது என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறக்கூடாது என தீர்மானித்தார். அவர்கள் அப்படித்தான்.

திருடியிருந்தால், மோசடி செய்திருந்தால் செப். 22 ஆம் திகதிக்கு பின்னர் கட்டாயமாக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவோம். அது ஒரு பழிவாங்கல் அல்ல. தற்போது வைத்தியசாலையில் மருந்து கிடையாது, பிள்ளைக்கு உணவு கிடையாது, கல்வி கற்பதற்கான வசதி கிடையாது. அதற்கான காரணம் என்ன? பொதுப்பணத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கபளீகரம் செய்துவிட்டார்கள். எனவே, அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்லவா? எங்களுடைய அயல்நாடான இந்தியாவை பாருங்கள். 80இன் பின்பகுதியில் இந்திய அமைதிப்படை வந்ததல்லவா உங்களுடைய பிரதேசத்திற்கு? அவர்கள் கடைக்குப்போய் சவர்க்காரத்தை சேகரித்தார்கள். சாப்பிடுவதற்காகவா? இல்லை. ஏனென்றால், அந்தக் காலத்திலே ஒரு சில பிரதேசங்களில் அந்த சவர்க்காரம் இல்லை. அவர்கள் விடுமுறைக்கு போகும்போது அவற்றை எடுத்துச் செல்வார்கள். தேங்காய் எண்ணெயும் அப்படித்தான். மல்வத்த அனுநாயக்க தேரர் என்னிடம் கூறினார், அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு ஒரு குடையை எடுத்துச் சென்றாலும் அதை வாங்கிக் கொள்வார்களாம். அந்த இந்தியா இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது. சந்திரனுக்கு போகிறது. இந்த பிராந்தியத்துக்கு மருந்து வகைகளை, துணிமணிகளை, பைசிக்களை, முச்சக்கர வண்டிகளை, மோட்டார் வாகனங்களை, விதையினங்களை, உணவுப் பொருட்களை வழங்குகின்ற நாடாக இப்போது மாறியிருக்கிறது. அந்த தலைவர்களுக்கு இந்தியாவை எவ்வாறு உற்பத்தியில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற தூரநோக்கு இருந்தது.

எங்கள் ஆட்சியாளர்கள் கந்தளாய் சீனி ஆலையை மூடினார்கள். வாழைச்சேனை கடதாசி ஆலையை மூடினார்கள். பால்மா தொழிற்சாலையை மூடினார்கள். துல்ஹிரிய, மத்தேகொட, பூகொட நெசவாலைகளை மூடிவிட்டார்கள். உங்களுடைய ஊரில் இருந்த கைத்தறி நெசவாலைகள் எங்கே? அதற்குப் பதிலாக Buying and Selling பொருளாதாரமொன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்தியா உற்பத்தி செய்கிறது. நாங்கள் விலைக்கு வாங்குகிறோம். இந்தியா முட்டை உற்பத்தி செய்கிறது. நாங்கள் முட்டை வாங்கி பொரிக்கிறோம். இந்தியா உற்பத்திக்கு உயிர் கொடுத்ததால்தான் முன்னேற்றம் அடைந்தது. எமது நாட்டில் உற்பத்தி சீரழிக்கப்பட்டது. ஏனென்றால், இறக்குமதி செய்தால் சட்டை பைகள் நிறைகின்றன. சீனி வரி மோசடி ஞாபகமிருக்கிறதா? 1500 கோடி ரூபாய் வரி மோசடி. ஒரு கப்பல் நிறைய பசளை கொண்டுவந்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒரு மூடையைக் கூட தரையிறக்கவில்லை. 60 இலட்சம் டொலரை செலுத்தினார்கள். அதாவது, 1800 மில்லின் ரூபாய். இந்தியாவில் இருந்து நெனோ உரத்தை கொண்டுவந்தார்கள். அதனை வயலுக்கு போட்டால் குண்டு வெடிப்பதை போல விளைச்சல் கிடைப்பதாக கூறினார்கள். இப்பொழுது மறுக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பொருளாதாரத்தை சீராக்க வேண்டுமென்ற உண்மையாக தேவை இருக்கவில்லை. நாடு வறுமைபட்டது. ஆனால், ஆட்சியாளர்கள் தனவந்தர் ஆகினார்கள். மஹிந்த வறியவரா? ரணில் வறியவரா? நாட்டின் உற்பத்தி அதிகரித்தால் அவர்களுக்கு கொமிசன் கிடைக்காது. ஆகவே, இந்த பொருளாதார பயணத்தை முழுமையாக திசைத்திருப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். வெங்காயம், மிளகாய் அங்கிருந்து கொண்டுவந்து சாப்பிட வேண்டுமென்றால், ரணிலின் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த நாட்டில் உற்பத்தி செய்து நாட்டை வளமுடையதாக்க வேண்டும் என்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

 

எமது ஊர்களில் வறுமை தாண்டவமாடுகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெற்றோர்கள் வறியவர்கள். அதனால் பிள்ளைகளும் வறியவர்கள். அதாவது, பரம்பரை வறுமையாகும். மற்றுமொரு வறுமை இருக்கிறது. நல்ல பயிர்ச்செய்கை இருந்தது. நல்லவொரு கடை இருந்தது. திடீரென பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. வயலுக்கு சேதமேற்பட்டது. வருமானத்தை இழந்தார்கள். கடனை மீளச் செலுத்த முடியவில்லை. அதனால், வறுமைபட்டார்கள். வீட்டில் வருமானத்தை ஈட்டுகின்ற கணவர் இருக்கின்றார். பிள்ளை இருக்கிறது. திடீர் அனர்த்தம் ஏற்பட்டு வருமான வழிவகை தடைப்படுகிறது. அதனால், வறுமையடைகிறார்கள். அதனால், எங்களுடைய கிராமப்புற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கழுத்தில் போட்டிருந்தா தங்கச்சங்கிலி எங்கே? வங்கியில். திருமண மோதிரம் எங்கே? வங்கியில். வங்கியைத்தான் திருமணம் முடித்தீர்களா? சின்னவனுக்கு கழுத்தில் போட்ட பஞ்சாயுதம் எங்கே? வங்கியில். கையில் போட்ட வளையல் எங்கே? வங்கியில். அதுதான் வறுமை.

எனவே, எங்களுடைய முதலாவது முக்கியமான வேலைத்திட்டம் வறிய மக்களை பொருளாதார வறுமையில் இருந்து மீட்டெடுப்பது. அதில் பிரதான இடம் வகிப்பது கல்வியாகும். வறுமைக்கோடும் கல்வியறிவற்ற நிலையின் கோடும் சமச்சீராகவே பயனிக்கிறது. கல்வியறிவு இல்லா விட்டால் வறுமை. வறுமை: என்றால் கல்வியறிவு இல்லை. எனவே, கிராமிய மக்கள் வறுமையில் இருந்து வெளியில் வர வேண்டுமானால் பிள்ளைகளுக்கு நன்றாக கல்வி புகட்ட வேண்டும். எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டின் கல்விக்கு முதன்மைதானம் வழங்கும். இப்பொழுது கல்வி பெற்றோருக்கு சுமையானதாக மாறியுள்ளது. பிள்ளை சாதாரண தரம் படித்தால், உயர்தரம் படித்தால் அது பெற்றோருக்கு சுமையாகும். உலகில் எந்தவொரு நாட்டிலும் அப்படியில்லை. ஆனால், எங்களுடைய தாய்மார்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை கல்வி புகட்டுவதற்காகவே செலவழிக்கிறார்கள். அதனால், வசிக்கின்ற இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டருக்குள் பாடசால கிடைக்கத்தக்க வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம். அதேபோல் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்திசெய்வோம். ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற பாடத்தையே போதிக்க வேண்டும். அழகியல் துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அருகில் உள்ள பாடசாலைக்கு ஆசியரியர்களையும் வசதிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும். பாடசாலைக்கு வருகின்ற ஒவ்வொரு பிள்ளையும் ஒன்று கல்வியில் முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கைத் தொழிலில் முன்னேறிச் செல்ல வேண்டும். ஒரு பிள்ளை கூட இடைநடுவில் பாடசாலையில் இருந்து விலகிவிடக் கூடாது. அதற்கான கல்வி முறைமையை அமுல்படுத்துவோம். கல்வி கற்ற பிள்ளை இருக்கின்ற ஒரு குடும்பம் நிச்சயமாக கரைசேரும்.

 

அடுத்தது, கிராமப்புற மக்கள் ஈடுபடுகின்ற பொருளாதாரம். பெரும்பாலானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். திருகோணமலையின் கரையோர பகுதிகளில் மீன்பிடித் தொழில். கந்தளாய் குளத்தை சார்ந்த பகுதிகளில் நன்னீர் மீன்பிடி. மகாவலி ஆற்றின் மருங்கில் மணல் கரை சேர்க்கிறார்கள். இவைதானே தொழில்கள். விவசாயத்தை கைவிட முடியுமா? முடியாது. ஆனால், விவசாயம் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழில்துறையாக மாறவேண்டும். இன்றைய நிலைமை என்ன? வயலை விதைக்கிறார்கள். அது கடனுக்காகவே. உழுவதும் கடன் வாங்கியே. விதைநெல், உரம், விளைச்சல் பெறும் வரை கடையில் சமான் வாங்க வேண்டும். எல்லாமே கடனுக்குத்தான். நெல் மணிகள் விளையும் பருவத்தில் வயலுக்குப் போய் பார்த்தால் நெற்கதிர்கள் செழிப்பாக நிலத்தை நோக்கி வளைந்திருக்கும். விவசாயிகள் முகத்தில் சிரிப்பு தோன்றும். ஆனால், முன்னர்போல் அறுவடையை வீட்டுக்கு எடுத்து வருவதில்லை. முன்பெல்லாம் வீடுகளில் நெல் மூடைகளை குவித்து வைத்திருப்பார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிறிய வயதில் எங்களுக்கு நெல் மூடைகள் மீது படுத்துறங்குவதில் அலாதி பிரியம். அந்த அளவுக்கு நெல் இருந்தது.

இப்போதைய நிலைமை என்ன? களத்து மேட்டிலேயே நெல் உலர்வதற்கு முன்பே விற்பனை செய்யப்படுகிறது. பணம் கைக்கு வருகிறது. வரும் வழியில் உரம் வாங்கிய கடைக்கு கடனை கொடுக்க வேண்டும். பொருட்கள் வாங்கிய கடைக்கு கொடுக்க வேண்டும். கிருமிநாசினி கடைக்கு கொடுக்க வேண்டும். விதை நெல் கடைக்கு கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும்போது வேதனையை தாங்க முடியாமல் மூக்கு முட்ட குடித்துவிட்டு வருவார்கள். அறுவடை செய்த நாளில் இது கட்டாயமாக நடக்கும். இதற்கான காரணம் என்ன? கவலையின் வெளிப்பாடு அதுதான்.

எனவே, விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்ததொரு ஆய்வினை மேற்கொண்டு கமக்காரர்களை இந்த கடன் சுமையில் இருந்து விடுவிக்கும். வங்கியில் இருந்து பெற்றுள்ள கடன்களில் ஓரளவினை வெட்டிவிடும். மீண்டும் கடன் பெறாது இருப்பதற்காக நாங்கள் அபிவிருத்தி வங்கியொன்றை உருவாக்குவோம். இப்பொழுது ஊரிலே கடன் வாங்கினால் 20 வீத மாதாந்த வட்டி செலுத்த வேண்டும். வங்கியில் இருந்து பெற்றால் வருடத்துக்கு நூற்றுக்கு 20 வீதம். நுண்கடனிடம் இருந்து வாங்கினால் ஒரு வாரத்திற்கு 1000 ரூபா. அதனால், கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் அபிவிருத்தி வங்கி இருக்கிறது. கமக்காரர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குகிறார்கள். எனவே, கடன்மேடு குவிய மாட்டாது. நாங்கள் கமக்காரர்களை கடன் சுமையில் இருந்து அகற்றிக் கொள்ளலாம். எங்களுடைய ஊர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். கடன் வாங்க வெட்கப்படுவார். கடன்காரன் என்பதை அவப்பெயராக கருதுவார்கள். இப்போதைய நிலைமை என்ன? கடன்படாத ஒருவரை தேடி கண்டுபிடிக்க முடியுமா? எனவே, கமக்காரரை கடன் பொறியில் இருந்து மீட்டெடுப்பதற்கான திட்டமொன்றை நாங்கள் வகுத்திருக்கிறோம்.

 

அடுத்ததாக, விவசாயத் தொழில் இலாபகரமானதாக அமைய வேண்டும். பாருங்கள் இந்தியாவின் முட்டை இலங்கைக்கு வரும்போதும் இலங்கையின் குளியாப்பிட்டிய முட்டை கந்தளாய்க்கு வரும்போதும் இலாபகரமானது எது? இந்திய முட்டை தான். அப்படியானால் இந்தியாவில் ஒரு கோழி இரண்டு முட்டைகள் வீதம் போடுகிறதா? அவர்கள் உற்பத்திக்கான செலவை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, விளைச்சலை அதிகரித்தால் ஏக்கருக்கான செலவினை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எனவே, விளைச்சலை அதிகரிப்பதற்கான திட்டம் இருக்க வேண்டும். அதற்காக நல்ல விதை நெல் இருக்க வேண்டும். எங்களுடைய விதை உற்பத்தி செய்யும் விவசாய பண்ணைகள் அனைத்துமே மூடப்பட்டு விட்டன. நாங்கள் அந்த பண்ணைகளுக்கும் விதை ஆராய்ச்சி நிலையங்களுக்கம் மீண்டும் புத்துயிர் அழிப்போம். இந்தக் கந்தளாய் விவசாய செயற் திட்டத்தின் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். அவர்கள் விதை நெல்லை உற்பத்தி செய்வார்கள். கால்வாயின் ஒரு பக்கத்திலே விதை நெல்லை உற்பத்தி செய்வார்கள். ஆகவே, அவர்களிடம் இருந்து நியாயமான விலைக்கு விதை நெல்லை பெற்றுக்கொள்ள முடியும். இன்று ஒரு கிலோ விதை நெல் 500 ரூபாவை விட அதிகரித்துவிட்டது. விதை நெல் மாத்திரம் இருந்தால் போதாது. தண்ணீரும் தேவை. எங்களிடம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பல குளங்கள் இருக்கின்றன. இவற்றை புனரமைக்க வேண்டும். எங்களுடைய பண்டைய மன்னர்கள் 32 ஆயிரம் குளங்களை அமைத்தார்கள். இப்பொழுது எஞ்சியிருப்பது 14 ஆயிரம் மாத்திரமே. ஒரு வாரம் மழை பெய்தால் குளங்கள் கரை மேவிப் பாயும். இரண்டு வாரம் வரட்சி என்றால் குளங்கள் வற்றிப் போய்விடும். குளங்களில் தண்ணீரை விட சேறும் வண்டல் படிவுகளுமே இருக்கும். குளத்து மேடுகளை நாசமாக்கினார்கள். ஹோட்டல்களை அமைத்தார்கள். ஆகவே, நாங்கள் இந்த குளங்களை புனரமைத்து இரு போகங்களிலும் தங்குதடையின்றி தண்ணீரை வழங்குவோம். இடைப்பட்ட போகமொன்று பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டும். முன்பெல்லாம் இடைபட்ட போகத்தில் பாசிப்பயறு பயிரிட்டோம். அவை அவரையினத் தாவரங்கள் என்பதால் அந்தப் பயிர்கள் மூலமாக மீண்டும் நிலத்துக்கு நைதரசன் கிடைக்கும். அதனால், மீண்டும் சிறுபோகத்தில் நன்றாக பயிர் செய்யலாம்.

அடுத்ததாக கிருமிநாசினிகளின் விலைகளை குறைப்போம். இப்பொழுது அறுவடை பெற்று மது அருந்தி தள்ளாடித்தள்ளாடி வீட்டுக்கு வருகின்றவர் இனிமேல் களத்து மேட்டில் நெல்லை விற்பனை செய்து மது அருந்தி மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வருவார். ஆனால், இந்த தேவை எங்களது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அது மாத்திரம் போதாது. அதற்கான நல்லவொரு இடம்தான் கந்தளாய் சீனி ஆலை. மீண்டும் நாங்கள் அதை ஆரம்பிப்போம். நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் அந்த காணி உரிமை கமத்தொழில் அமைச்சிடமே இருந்த்து. தொழிற்சாலை கைத்தொழில் அமைச்சரான அநுர பண்டார நாயக்கவிடமே இருந்த்து. சீன முதலீட்டாளர் ஒருவர் வந்தார். நான் அநுர பண்டார நாயக்கவை சந்தித்தேன். அநுர பண்டார நாயக்க திருடன் அல்ல. அநுர நீ விரும்பிதை செய் என்று எனக்கு கூறினார். லங்கா தீப செய்தித்தாளில் தலைப்புச் செய்தி “அநுரவும் அநுரவும் இணைந்து விட்டார்கள்” என வந்தது. எங்களுக்கு உங்களிடமிருந்து எதுவுமே வேண்டாம். நீங்கள் களு கங்கையில் இருந்து தண்ணீரை பெற்று கந்தளாய் வேலையை செய்யுங்கள் என சீன முதலீட்டாளரிடம் கோரிக்கை விடுத்தேன். இறுதியில் நான் அமைச்சு கைவிட்டு வந்தேன். சீன முதலீட்டாளர் சீனாவுக்கு திரும்பிச் சென்றார். காரணம் என்ன? வந்தவர்கள் பகா கேட்கத் தொடங்கினார்கள். அதனால், நாங்கள் கந்தளாய் சீனி ஆலையை ஆரம்பித்து கமக்கார்ர்களுக்கு புதிய வருமான வழியை சேர்ப்போம்.

மற்றுமொரு விடயம் திருகோணமலையில் 99 எண்ணெய் குதங்கள் இருக்கின்றன. ஒரு குதத்தின் கொள்ளளவு 10 ஆயிரம் மெற்றிக் தொன் ஆகும். அண்ணளவாக 1 இலட்சம் மெற்றிக் தொன்னை களஞ்சியப்படுத்த முடியும். எங்களுக்கு அது அளவுக்கு அதிகமானதாகும். அங்கே எண்ணெயை களஞ்சியப்படுத்தினால் எங்களால் எண்ணெயை குளிக்கவும் எடுக்க முடியும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? திருகோணமலை துறைமுகம் வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்கின்ற நாடாக இலங்கையை மாற்ற முடியும். திருகோணமலையில் தூய்மையகம் ஒன்றை தொடங்கி வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்ப முடியும். அதை எமது நாட்டின் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மாத்திரம் சாதித்துவிட முடியாது. அந்தப் பணியை செய்யக்கூடிய சர்வதேச கம்பனியொன்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஒருங்கிணைந்து இப்போது இற்றுப்போய்க்கொண்டிருக்கின்ற இந்த எண்ணெய்க் குதங்களுக்கு புத்துயிர் அளிப்போம்.

புல்மோட்டையில் கனிய மணல் இருக்கிறது. அவை அலைகளால் கொண்டுவந்து கரைசேர்க்கப்படுகின்றது. ஆனால், நாங்கள் மூலப்பொருளாகவே அதனை பகுத்தெடுக்காமல் ஏற்றுமதி செய்கிறோம். தேசிய மக்கள் சக்தி அந்த இடத்துக்கு புதியவொரு இரசாயன தொழிற்சாலையை கொண்டுவந்து பெறுமதி சேர்த்த கனிம உற்பத்தியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். எனவே, அப்போது இங்குள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். கந்தளாய் இருக்கின்ற பிள்ளை தொழில் தேடி கொழும்புக்கு செல்ல வேண்டியதில்லை. ஊர் மக்கள் ஊரிலேயே இருந்து கொண்டு பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *