பாராளுமன்ற உறுப்பினர்களை பரித்தெடுத்த ரணிலுக்கும் தண்டனை கிடைக்கும்
முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் கோத்தபாயாவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. இதனால் ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிவதற்கு முன் கோத்தபாய நாட்டை விட்டுத் தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது போல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை பரித்தெடுத்த ரணிலுக்கும் தண்டனை கிடைக்கும். என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் தலைமையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
இலங்கை அரசியல் வரலாற்றில் பெரிய கட்சிகள் எல்லாம் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் சமூகத்திடம் வந்து வாக்குகளைப் பெற்றுவிட்டு அதிகாரங்களைப் பெற்ற பின் முஸ்லிம்
சமூகத்தை கறிவேப்பிலையாகப் பாவித்தன. மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு நமது சமூகத்தின் வாக்குப் பலத்தை அடையாளப்படுத்திக் காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதிகளான ரனசிங்க பிரமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகியோர் ஜனாதிபதிப் பதவிக்கு வருவதற்கு முஸ்லிம் சமுகத்தினுடைய வாக்குப்பலத்தைப் பயன்படுத்தினார். இதனூடாக முஸ்லிம் சமுகத்தினுடைய விடயங்களை மாத்திரமன்றி இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாத்தார். இதே போல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசியத் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் நமது நாட்டின் நலன் கருதியும், நமது நாட்டின் வாழும் சகல இன மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்படுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து அவரின் வெற்றிக்காக நாடு பூராகவும் செயற்பட்டு
வருகிறார். அதேபோல் அகில இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவின் வெற்றிக்காக செயற்பட்டு வருகிறார்.
முஸ்லிம் சமுகத்தின் பெரும்பாண்மையினரின் அங்கிகாரத்தை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் சமுகத்தில் இரண்டாவது அங்கிகாரம் பெற்றுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் நமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்கின்றமை முஸ்லிம் சமுகத்தின் அங்கிகாரம் சஜித் பிரமதாசவுக்கு கிடைத்துள்ளது என்பது யதார்த்தமாகும். ஜனநாயக ரீதியில் அரசியல் கட்சிகளும் நமது மக்களும், நமக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திக்கு அனுப்பி வைக்கின்றோம். நமது கட்சிகளின் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக நமது பாராளுமன்ற உறுப்பினர்களை பறித்து எடுப்பதில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசிக் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க மட்டும் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் ரணில் விக்கிரமவிங்கவை ஜனாதிபதியாக ஆக்கினார். இன்று என்ன நடந்துள்ளது? மஹித்தவின் கட்சியை சேர்ந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்து எடுத்துள்ளார். ஏறாவூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், தலைவர் ரவூப் ஹக்கிமையும் தனது மரணம் வரை ஆதரிப்பேன் என்று வாக்குறுதி அளித்த
அலிஸாஹிர் மௌலானா (MP) இன்று ரணில் விக்கிரமசிங்கவோடு சேர்ந்து அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார். அலிஸாஹிர் மௌலானாவை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமனம் செய்வதற்கு கட்சியும், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கிமும், கட்சியின் உச்சபீடம் வழங்கிய அர்ப்பணிப்பான ஒத்துழைப்புகளையும் அற்ப செற்ப நலனுக்கான மறந்து சென்றுள்ளார்.
முஸ்லிம் சமுகத்தின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்காமல் கடந்த காலங்களில் செயற்பட்ட இனவாத சிந்தனையுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். நமது வேட்பாளர் சஜித் பிரமதாசா எல்லா இன மக்களின்
உனர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படும் ஒரு தலைவராக உள்ளார். என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பின் முக்கிய பங்காளியாக இருந்து கடந்த 5 வருட காலமாக தேசிய மட்டத்தில் நமது நாட்டில் ஜனநாயகத்திற்காகவும் நமது நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சஜித் பிரமதாசாவை நாட்டின் தலைவராக வருவதற்கு பெரும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றார். நமது நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்கள, தமிழ், பிரதேசமெல்லாம் சென்று இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் தலைவரான சஜித் பிரமதாசா அவர்களின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் என்பது நமது நாட்டின் தலைவரை எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு தெரிவு செய்யும் தேர்தலாகும். இது நமது தேர்தலாக எண்ணி எல்லோரும் ஒன்றினைந்து சஜித் பிரமதாசா அவர்களை வெற்றி அடைய செய்வோம். நமது நாட்டில் இன ஐக்கியம் ஏற்படவும்
நாட்டின் எதிர்காலம் சுபீட்சமுடையதாக அமைவதற்கும் நமது கட்சிகளின் பராளுமன்ற உறுப்பினர்களை பரித்தெடுக்கும் அரசியல் கலாச்சாரத்திற்கும் நாம் ஜனாதிபதி தேர்தல் ஊடாகமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எமது முஸ்லிம்களை பொருத்தவரை மரணம் அடையும் ஜனாஸாக்களை நோகாமல் மிகவும் கவனமாக குளிப்பாட்டி நல்லடக்கம் செய்ய வேண்டும் என எமது இஸ்லாம் மதம் சொல்கிறது. இந்த ரீதியில் எமது உணர்புகளை மதிக்காமல் அநீதியான முறையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அநீதியான ஆட்சியாளர்களுக்கு எப்போதும் இறைவனின் அருள் கிடைப்பதில்லை என்ற யதார்த்தத்தினை நாம் நமது நாட்டில் நடந்த கொடுற சம்பவங்கள் ஊடாக கண்டுள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆதரவு வழங்கி வருவது நமது சமுக ரீதியில் நன்மையான விடயமாகும். நான் அன்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட
போது தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாவுல்லா அவர்களிடம் முஸ்லிம் சமுகத்தின் நலன் கருதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதால் நமது சமுகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் எனவும் இது சாத்தியப்படாவிட்டால் இரண்டு முஸ்லிம் கட்சிகளாவது இணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திதேன்.
எனவே ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயற்படுவது போல் எதிர் காலத்தில் நடைபெறும் தேர்தல்களிலும் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை முன்னடுப்பதனால் நமது முஸ்லிம் சமுகத்தின் பாராளுமன்ற, மாகாண சபை பிரதிநிதித்துவங்களை பெற்று பலமான சக்தியாக இயக்கலாம் எனத் தெரிவித்தார்.
(கே எ ஹமீட்)