உள்நாடு

விருந்துபசாரங்கள் வழங்குவது சட்டப்படி குற்றம்; மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

“ஜனாதிபதி வேட்பாளர்களால் உணவு வகைகள், பானங்கள் மற்றும் சிற்றுண்டி வகைகள் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக விருந்துபசாரங்களை நடத்துவது, ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்” என, மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) பி.பீ.சி. குலரத்ன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால், அப்பகுதியைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுக்காக நடத்தப்படவிருந்த விருந்துபசாரமொன்றை, தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதையடுத்து, அங்கு புதிய பொது விவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்கு உணவு விருந்துபசாரங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) பி.பீ.சி. குலரத்ன தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு விருந்துபசாரங்களை நடத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நேரங்களில் இந்த விடயம் பெரிதாகக் கவனத்திற் கொள்ளப்படாத நிலையில், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் இது விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

அவ்வாறு நடத்துவது ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில், ஆதரவாளர்களுக்குத் தூண்டுதலாக அமையும்” என்றும், “அவ்வாறான செயல்களை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொள்ளக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எவரேனும் ஒரு வேட்பாளர், உணவு வகைகள், பானங்கள், குளிர்பானங்கள் அல்லது பரிசுகள் போன்றவற்றை, தமது ஆதரவாளர்களுக்கு அல்லது மக்களுக்கு வழங்குவது, ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ( சட்டத்தின் 77ஆவது பிரிவின்படி ) குற்றமாகும்” என்றும், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *