கொரோனா ஜனாஸாக்களை எரித்ததை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க ஜனாதிபதி முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது..! -ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையை இன்று (28) சந்தித்துபோது கொரோனா தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நீதியை நிலைநாட்டி அவர்களின் குடும்பத்தினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் விதமாக அனைத்து தரப்பினரையும் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதாக தெரிவித்த கருத்தை வரவேற்பதுடன் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ள அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது ஊடக அறிக்கையில் மேலும், கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முஸ்லிங்களின் உயரிய மரியாதைக்குரிய உலமா சபையினரிடம் தெரிவிதுள்ள இந்த உறுதிமொழியானது வரவேற்கத்தக்கது.
மேலும், கொரோனா தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்க கோரி ஜனாதிபதி மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தின் பதிலை இலங்கை முஸ்லிம்களின் உயர் சபையான அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் முன்னிலையில் உறுதியளித்துள்ளமையானது தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மரியாதையாக கருதுகின்றேன்.
தேர்தலுக்கு முன் பாராளுமன்றம் கூடும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் இந்த தெரிவுக்குழுவை நியமிப்பதன் மூலம் கொரானா தகனம் தொடர்பாக அரசியல் மேடைகளில் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் வாயில் பூட்டு போட்டு அடைக்க முடியும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு, கொரோனா தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களை வைத்து பிச்சைகாரனின் காயம் போல், அதனை வைத்து மட்டமான அரசியலை செய்தார்களே ஒழியே அர்த்தமுள்ள முறையில் கொரோனா தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் தெரிவுக்குழுவைக் கூட கோராமல் தமது கீழ்தரமான அரசியல் இலாபங்களுக்காக ஜனாசா எரிப்பை பயன்படுத்திக் கொண்டிருப்பதை இட்டு வருத்தமடைகிறேன்.
எனவே, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கொரோனா சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகளை விடுத்து இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு நீதி வழங்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முஸ்லிம் சமுகம் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்