உள்நாடு

விவசாயிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி, வறுமையை போக்குவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுப்போம்..! – வெல்லவாய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பிரபஞ்சம் மூச்சு போன்ற வேலை திட்டங்களின் ஊடாக ஒரு பில்லியன் பெறுமதியான வேலைகளை செய்திருப்பதோடு, 76 வருட கால ஜனநாயக காலத்திற்குள் எதிர்க்கட்சி ஒன்று இவ்வாறான பாரிய சேவைகளை செய்யவில்லை. இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் தாம் முன்வைக்கின்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 76 வருட ஜனநாயக காலத்திற்குள் இவ்வாறான பாரிய சேவைகளை எந்த அதிகாரமும் இல்லாமல் நாம் செய்திருப்பதாக இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு சமூர்த்தி, ஜனசவிய, அஸ்வெசும போன்ற வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கபடும். வறுமையான குடும்பங்களுக்கு 20000 ரூபா விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை முற்றாக ஒழிப்போம். தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கும் யுகத்தை நிறைவு செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 23 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி வெல்லவாய நகரில் எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. உயர்தரத்திலான 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றே 5000 ரூபாவிற்கு நியாயமான விலையில் இரசாயன மருந்து மற்றும் திரவ உரங்களை கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக வழங்குவதோடு, எரிபொருள் நிவாரணமும் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். அத்தோடு நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குவதோடு, விவசாயிகளையும் நுகர்வோர்களையும் பாதுகாக்கின்ற வகையிலான விலை சூத்திரம் ஒன்றை முன்னெடுத்து அரிசி மாபியாவை இல்லாது செய்யும் செயற்பாட்டை முன்னெடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச வங்கிகளின் ஊடாக செல்வந்தர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை இரத்துச் செய்திருக்கின்றார்கள். அவர்களின் பெயர் பட்டியலை கூறியிருந்த போதும் அரசாங்கம் அவற்றை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சர் அவை இரகசியமானவை என்று மறைத்துக் கொண்டிருக்கிறார். நட்புறவாளர்கள் பெற்றுக்கொண்ட கடனை அரசாங்கத்தால் இரத்து செய்ய முடியும் என்றால், விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனையும் இரத்து செய்ய வேண்டும். நண்பர்களுக்கும் நட்புறவாளர்களுக்கும் அவ்வாறான சலுகைகளை வழங்க முடியும் என்றால், நாட்டுக்கு உணவு கொடுக்கின்ற விவசாயிகளுக்கும், அந்த சலுகைகளை வழங்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக விவசாய கடன்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெலவத்த, செவனகல ஆகிய இரண்டு சீனி தொழிற்சாலைகளும் தேசிய வளங்களாகும். முறையான முகாமைத்துவம், நிர்வாகம் என்பனவற்றின் ஊடாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியுமாக இருந்தாலும், அரச நிறுவனங்களை விற்பனை செய்யவும், தனியார் மயப்படுத்தவும் முயற்சிக்கின்றார்கள். ஸ்ரீலங்கா டெலிகோம், லிட்ரோ கேஸ், இலங்கை காப்பர்தி கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா கேட்டரிங் என்பவற்றை தனியார் மயப்படுத்த முற்படுகின்றனர். தற்பொழுது எமது நாடு சொத்துக்களை விற்கும் ஏல நிலையமாக மாறி இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக பெலவத்த, செவனகல ஆகிய இரண்டு தொழிற்சாலைகளையும் விற்பனை செய்கின்ற முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய திட்டங்களின் ஊடாக மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் ஒவ்வொரு விடயங்களையும் செய்வதாக கூறிக் கொண்டு திரிந்தாலும், இதுவரையும் கடவுச்சீட்டுக்களை வழங்க முடியாமல் இருக்கின்றது. கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றார்கள். இவற்றையே சரியாக செய்ய முடியாத அரசாங்கத்தால் நாட்டையும் முன்னேற்றமடையச் செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அரச சேவையில் காணப்படுகின்ற முரண்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து அதற்கு வலுவூட்டுவதோடு, ஆசிரியர் சேவை உள்ளிட்ட அரச சேவையில் காணப்படுகின்ற சிக்கல்களையும் நிவர்த்தி செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு காட்டு யானை தாக்குதலை நிறுத்துவதற்காக தேசிய காணி பயன்பாட்டு திட்டம் ஒன்றை தயாரித்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை குறைப்பதோடு, இரண்டு போகங்களையும் செய்யக்கூடிய விவசாயப் பின்புலத்தை ஏற்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *