அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது கொழும்பு மாவட்ட நீதி மன்றம்..!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான (28) இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முறைப்பாட்டாளர் அலி சாகிர் மௌலானா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் சந்தக ஜயசுந்தர முன்வைத்த வாதத்தை பரிசீலித்த மாவட்ட நீதிபதி இந்த தடை உத்தரவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஆதரவாளர்களதும் பொது மக்களதும் வேண்டுகோளுக்கு இணங்க
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார். நாட்டின் எதிர்காலம் கருதி தாம் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்திருந்தார்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பக்கம் சேர்ந்துள்ளோம் என்று அதற்கு முன்னரே அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும் கட்சியின் முடிவை மீறியதாக தெரிவித்து அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் விளக்கம் கொடுக்க அலி சாஹிர் மௌலானாவுக்கு 01 வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது தொடர்பான கடிதம் கடந்த 21 ஆம் திகதி பதிவுத் தபால் மூலம் மௌலானா தரப்புக்கு கிடைத்துள்ளது.
அந்த ஒரு வார காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் இன்றைய தினமே முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மருதமுனை பிரதேசத்தில் ஒன்று கூடி அலி சாஹிர் மௌலானா அவர்களை கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்க நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் கூட்டம் கூடும் முன்பே நீக்கும் தீர்மானத்தை எடுக்க தலைவர் , செயலாளர் , அடங்கலான உயர்பீட உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவை மாவட்ட நீதி மன்றம் விதித்துள்ளது.