ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை; அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி
“பால் நிலை சமத்துவ அடையாளங்கள் மற்றும் பாலியல் நோக்கு நிலைகள் என்பது, பல்வேறு உயிரியல் மற்றும் சமூகவியல் காரணங்களால் ஏற்படும் வேறுபாடுகள் ஆகும். எனினும், இலங்கையில் அக்குழுக்கள் சமூகத்தின் பல இடங்களில் வன்முறை, பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலுக்கு உள்ளாகின்றன.
அத்துடன், சில காலனித்துவச் சட்டங்கள், சில நிறுவனக் கட்டமைப்புகள், சில சமூக நிறுவனங்களின் பிற்போக்குவாதச் சிந்தனைகள் மற்றும் பிற்போக்கு கலாசாரக் கருத்துக்கள் காரணமாக, ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால் நிலை மாற்றம் கொண்ட சமூகக் குழுக்களின் நீதிக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஒரே சமமாக நடாத்தப்படும் ஒரு நீதியான சமூகத்தில், எந்த ஒரு குழுவும் அவர்களின் அடையாளம் அல்லது பாலியல் நோக்கு நிலை காரணமாக ஓரங்கட்டப்படலாகாது” என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (26 ஆம் திகதி) வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் விஞ்ஞாபனக் கோட்பாடுகளில் ‘பால் நிலை சமத்துவத்திற்கான பொருளாதார நீதி’ என்ற ஒரு கோட்பாடும் முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கோட்பாட்டின் செயற்பாடாக, பால் நிலை சமத்துவத்தில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளது. “பால் நிலை சமத்துவ தேவைப்பாடுகளில் கவனம் செலுத்தி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதனூடாக, பெண்கள் முகம் கொடுக்கும் கஷ்டங்களைக் குறைத்தல்.
அரசியலமைப்பில் சமத்துவம் தொடர்பிலான உரிமைகளை விரிவாக்கஞ் செய்து, பால் நிலை மற்றும் பாலியல் நோக்கு நிலையின் அடிப்படையில், ஓரங்கட்டப்படாதிருப்பதனை உறுதி செய்தல். ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால் நிலை மாற்றம் கொண்ட சமூகக் குழுக்களுக்கான விசேடமான சுகாதாரச் சேவைகள், சட்டச் சேவைகள், சமூகப் பாதுகாப்பு போன்ற அரச சேவைகளையும், நீதிக்கான அணுகலையும் அதிகரித்தல்” என்ற கோட்பாடும், இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )