அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்துள்ளதா?
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம், கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால், கொழும்பில் (26) வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தேர்தல் விஞ்ஞாபனத்தை மதத் தலைவர்களுக்கு வழங்கினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக, மாற்று முறைமையைச் செயற்படுத்தும் திட்டங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நீக்கப்படும், இலவச வாகன அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு நிறுத்தப்படும், ஜனாதிபதிக்குரிய உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை ஒன்றாக மட்டுப்படுத்தப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும், அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம், விசேட கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகவும் மட்டுப்படுத்தப்படுவதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவிகள் நீக்கப்படும்.
மேலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், புதிய பாராளுமன்ற தேர்தல் முறைமை என்பன உள்ளிட்ட விடயங்கள் புதிய அரசியலமைப்பு ஊடாக இடம்பெறும் என்றும், சர்வஜன வாக்கெடுப்புடன், புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய உறுதி மொழியும், இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )