உள்நாடு

தேர்தல் பிரசாரங்களுக்கு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தத் தடை..!

தேர்தல் பிரசாரங்களுக்கு பயணம் செய்வதற்கு, அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்த, ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதாயின், அதற்குரிய கட்டணத்தை நிச்சயம் செலுத்த வேண்டும்” என, தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துக்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள 1,052 முறைப்பாடுகள் குறித்து உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்கு விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் அல்லாத பிறிதொரு கடமைகளுக்காக ஹெலிக்கொப்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, அரச ஹெலிகொப்டர்களை வழங்குவதில் பாதிப்பில்லை எனவும், ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் செயற்பாடுகளுக்காக, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், புகையிரதங்களைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, 2024.07.31 ஆம் திகதி முதல் 2024.08.25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 4 வன்முறைச் சம்பவங்களும், தேர்தல் சட்டத்தை மீறிய 1,006 முறைப்பாடுகளும், 42 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய, இக்காலப்பகுதியில் 1,052 முறைப்பாடுகள், ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தும் போது, அது தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றதா? அல்லது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை வேறுபடுத்திப் பார்ப்பது சிக்கலாக உள்ளதாக, ஜனநாயக சீர்த்திருத்தங்கள் மற்றும் தேர்தல்கள் ஆய்வுகளுக்கான நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *