பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு..!
அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால், வீதிகளில் மக்கள் கொல்லப்பட்டு, மதத் தலங்கள் தாக்கப்பட்டு, நீதிமன்றங்கள் மூடப்பட்டு, அரசியலமைப்பு எரிக்கப்பட்டு, இரத்தம் நிறைந்த மற்றொரு பங்களாதேஷாக இலங்கை மாறுமென தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, உலகின் அழிவடைந்த நாடுகள் வரிசையில் இணைந்துகொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அதனால் தனது தனிப்பட்ட நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உஹன பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உபுல் பிரியந்த, முன்னாள் உப தலைவர் ஜகத் தேசப்பிரிய, தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுகத் ஜாதுங்கராச்சி, மஹஓயா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக்க நிலந்த உட்பட உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலருடன் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்திற்கு இன்று (26) பிற்பகல் வருகைத் தந்தனர்.இதன் போதே பாராளுமன்ற விமலவீர திஸாநாயக்க எம்.பி ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விமலவீர திஸாநாயக்க எம்.பி, இது தனது கட்சியை விட்டு விலகும் நடவடிக்கையல்ல எனவும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இந்த நேரத்தில் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த விமலவீர திஸாநாயக்க கூறியதாவது:
“இந்த நாட்டில் ஜனநாயகம், மனிதாபிமானம், நீதி, சட்டம், நியாயம் புதைந்து கிடக்கும் இறுதித் தருணத்தில் ஜனநாயகச் சுடரும் அணையவிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தையும் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சட்டத்தையும் பாதுகாத்தார்.
எனது வாழ்நாள் முழுவதும் அவருடன் அரசியல் ரீதியாக முரண்பாடுகளை கொண்டிருந்த போதும் 2022 இல் ரணில் விக்ரமசிங்கவை இந்நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க பாராளுமன்ற உறுப்பினராக வாக்களித்தேன். அன்று மொட்டுக் கட்சியில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தி அவரை வெற்றிபெறச் செய்தனர். ஜனநாயகச் சுடர் அணையவிருந்த இக்கட்டான நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க முடியும் என்பதை நாம் அறிந்திருந்தோம்.
அன்று அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்காமல் இருந்திருந்தால், அடுத்த 24 மணி நேரத்தில், ஜனநாயகத்தின் உச்சமாக விளங்கும் பாராளுமன்ற எரிக்கப்பட்டு, இன்று பங்களாதேஷ் எதிர்கொள்ளும் நிலைக்கு இலங்கை வந்திருக்கும். ஆனால் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் கட்டுப்படுத்தி ஜனநாயகத்தையும் சட்டத்தையும் பாதுகாத்தார்.
நெருக்கடியான தருணத்தில் இந்த நாட்டை காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவருக்கான மரியாதையை நாம் அனைவரும் கொடுக்க வேண்டும். அவர் ஜனாதிபதியாக இல்லாவிடில் இன்று நான் உட்பட எவரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள். எங்கள் வீடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்மை அழிக்க நினைத்தார்கள். அந்தக் கொடூரத்தை இல்லாதொழித்து எங்களைக் காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
இரண்டாம் யுத்தத்தின் போது ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பாதுகாத்தார். அத்துடன் எண்ணெய் வரிசைகள், எரிவாயு வரிசைகள், போன்றவற்றிலிருந்து நாட்டை விடுவித்து,பொருளாதாரப் பிரச்சினைகளையெல்லாம் இல்லாதொழித்தார்.
முதலில் நாட்டையும் மக்களையும் பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டைக் காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கவினால் முடியுமானால் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாவிட்டால் பங்களாதேஷ் போன்று இரத்தம் சிந்தி, வீதியில் மக்கள் கொல்லப்படும், இந்து கோவில்கள், பௌத்த விகாரைகள் அழிக்கப்படும், நீதித்துறை முடங்கிப்போகும், அரசியலமைப்பு எரிக்கப்படும் நாடாக இலங்கை மாறியிருக்கும் என்பதோடு உலகின் அழிந்த நாடுகளில் இலங்கையும் இணைந்திருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்றார்.
ஊடகப் பிரிவு
Ranil 2024 – இயலும் ஸ்ரீலங்கா