10 விக்கெட்டுக்களால் பாகிஸ்தானை வெற்றி கொண்டு வரலாற்றைய மாற்றியது வங்கதேசம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீம் பெற்றுக் கொடுத்த 191 ஓட்டங்களின் உதவியுடன் 10 விக்கெட்டுக்களால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றதுடன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தமது முதல் சர்வதேச டெஸ்ட் வெற்றியையும் பதிவு செய்து வரலாறு படைத்தது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் இடம்பெற்றுவருகின்றது. அதில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணிக்கு கொடுத்திருந்தது.
இதற்கமைய தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முஹம்மது ரிஸ்வான் மற்றும் ஷவுத் ஷகீல் ஆகியோரின் 240 ஓட்ட இணைப்பாட்டம் கைகொடுக்க 6 விக்கெட்டுக்களை இழந்து 448 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸை நிறைவு செய்தது. துடுப்பாட்டத்தில் ரிஸ்வான் 171 ஓட்டங்களையும், ஷகீல் 141 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஹசன் மற்றும் ஷரீபுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு அனுபமிக்க வீரரான முஸ்பிகுர் ரஹீம் சதம் கடந்து 191 ஓட்டங்களையும், ஆரம்ப இளம் வீரரான சட்மன் இஸ்லாம் (93), மொஹ்மீனுல் ஹக் (50), லிட்டன் தாஸ் (56) மற்றும் மெஹ்தி ஹசன் மிராஸ் (77) ஆகியோர்அரைச்சதம் கடந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க சகல விக்கெட்டுக்களையும் இழந்த பங்களாதேஷ் அணி 565 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் நஷீம் ஷா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து 117 முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் பின்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 5ஆவதும் இறுதியுமான நாள் ஆட்டமான நேற்று (25) முஹம்மது ரிஹ்வானை தவிற மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் நிலைக்காமல் 55.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இறுதி வரை போராடிய ரிஸ்வான் 51 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் மெஹ்தி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
பின்னர் 30 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பின்றி 6.3 ஓவர்களில் 30 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்டுக்களால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதுவரையில் பாகிஸ்தான் அணியை பங்களாதேஷ் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வெற்றதில்லை என்ற சொல்லை இப்போட்டியில் வென்று மாற்றி எழுதியது ஹதுருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் விளையாடிவரும் பங்களாதேஷ் அணி.
(அரபாத் பஹர்தீன்)