தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்பது அத்தனை பிரஜைகளையும் நியாயமான வகையில் நடத்துகின்ற அரசாங்கமாகும். மனிதம் நிறைந்த அரசாங்கமாகும்..! -தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க
(“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய மக்கள் சக்தியின் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடன வெளியீடு – ஸ்ரீ ஜயவர்தனபுர மொனாக் இம்பீரியல் ஹோட்டல் வளாகம் – 26.08.2024)
குறிப்பாக இன்று இங்கு உருவாகியுள்ள தருணம் நாங்கள் ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் பல துறைகளில் செயலாற்றி வந்தவிடயமாகும். முதலாவதாக சீரழிந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒரு சக்தியை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். அது பற்றி எமது நாட்டிலே பல்வேறு துறைகளில் பிரதிநிதித்துவம் செய்கின்றவர்களை சோ்த்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்தோம். ஆனால் அது மாத்திரம் எங்களுக்கு போதுமானதாக அமையமாட்டாது. நாங்கள் பலம்பொருந்திய கருத்தியலொன்றை எங்கள் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம் பற்றி அந்த அனர்த்தத்திற்கான காரணங்கள் பற்றி அதிலிருந்து கரைசேர்வது எப்படி? என்கின்ற விடயங்கள் பற்றி நீண்ட காலமாக இந்த நாட்டின் பொதுமக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தோம். அவை அனைத்தையும் சுருக்கமாக தொகுத்து ஒழுங்கமைந்த வேலைத்திட்டமொன்றை எமது நாட்டுக்கு முன்வைப்பதுதான் அடுத்தக்கட்டமென நான் நினைக்கிறேன்.
அதனைத்தான் நாங்கள் இப்போது நிறைவுசெய்து கொண்டிருக்கிறோம். அப்படியானால் எம்மிடம் பலம் பொருந்திய ஒரு கருத்தியல் இருக்கிறது. பலம்பொருந்திய சக்தியொன்று இருக்கிறது. அதற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய தலைமைத்துவ குழாமொன்று இருக்கிறது. அதைபோலவே எமது நாட்டை கட்டியெழுப்ப அவசியமான பாதை இருக்கிறது. எனவே இதுதான் எமது நாட்டின் வெற்றிக்கான பாதை. அது செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி உதயமாகிறது. குறிப்பாக இந்த வேலைத்திட்டத்தை வகுத்துக்கொள்வதற்காக இரண்டு வருடங்களுக்கு கிட்டிய காலமாக 34 துறைகளை மையமாகக் கொண்டு பலவிதமான உரையாடல்களை நடத்தினோம். எனக்கு தெரியும் நேரம், அறிவு என்பவற்றை இந்த முயற்சிக்காக கஞ்சத்தனமின்றி அள்ளித்தந்தார்கள். அந்த அனைவருக்கும் இத்தருணத்திலே நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுடைய பங்களிப்பு இடையீடு இத்தகைய வேலைத்திட்டத்தை அமைத்துக் கொள்வதில் பலம்பொருந்திய பக்கபலமாக விளங்கியது.
இதைப்போலவே விவசாயத்துறை என்றால் அடிமட்டத்திலுள்ள மக்களுடன் இது பற்றிய உரையாடலில் ஈடுபட்டோம். அந்தந்த துறைசார்ந்த குழுக்களுடன் பல்வேறு காலக்கட்டங்களில் கலந்துரையாடல்களை நடத்தினோம். ஆகவே நாங்கள் மேலிருந்து கீழ்நோக்கி பார்க்கின்ற அனுகுமுறைக்கு பதிலாக அந்தந்தத்துறைச் சோ்ந்த மக்களின் அறிவு அனுபவம் அவர்களின் தேவைகள் முதலியவற்றை உள்ளடக்கவேண்டுமென நினைத்தோம். ஆகவே இந்த வேலைத்திட்டத்தை வெற்றியீட்ட செய்விப்பதற்காக நாங்கள் அவ்வாறான முயற்சியையும் மேற்கொண்டோம். எனவே அந்த முயற்சியின் இறுதி விளைவாகத்தான் இத்தகைய பலம்பொருந்திய வேலைத்திட்டமொன்றை எம்மால் சமர்ப்பிக்க இயலுமாயிற்று. வளமான நாடு அழகான வாழ்க்கை என்பது இதன் தொனிப்பொருளாகும்.
பேசப்படவேண்டிய விடயங்கள் பற்றியும் அந்தந்த துறைகளை சார்ந்ததாக ஆராய்ந்திருக்கிறோம். சுற்றுலா தொழிற்றுறை பற்றி ஆழமான விரிவான விபரமொன்றை இன்று மாலை நாங்கள் வெளியிட இருக்கிறோம். அதைப்போலவே R & D துறை பற்றி வலுச்சக்திதுறை பற்றி பொறியியல்துறை பற்றி IT துறை பற்றி சமூக பாதுகாப்பு பற்றி பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். அதன் ஒரு பொழிப்புதான் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான விடயத்துறைகளுக்கு நாங்கள் தனிவேறான வேலைத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். கடந்த காலத்தில் எங்களுடைய வேலைத்திட்டம் பற்றியும் எம்மை பற்றியும் எம்மைவிட பிறர் தான் அதிகமாக பேசி வந்தார்கள். அப்படித்தானே? இன்றும் எமது பொருளாதாரக் கொள்கை பற்றி எங்களுடைய அரசாளுகைப் பற்றி அதிகமாக மற்றவர்களே பேசி வருகிறார்கள். நாங்கள் அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கப் போவதில்லை.
நாங்கள் அனாவசியமான உரையாடல் அனாவசியமான முரண்பாடுகளில் இடையீடு செய்ய போவதில்லை. ஆனால் நாங்கள் இன்று அந்த குறைகூறல்கள் அனைத்திற்கும் பொய்கள் அனைத்திற்கும் திரிபுபடுத்தல்கள் அனைத்திற்கும் பொய்யான தகவல்கள் அனைத்திற்கும் வலிமைமிக்க பதிலை அளித்திருக்கிறோம். அவர்களின் நடைமுறை அதுதான். அதற்கான பதிலே வளமான நாடு அழகான வாழ்க்கை என்கின்ற இந்த புத்தகம். இது தான் எங்களுடைய நடைமுறை. அவர்களின் நடைமுறைதான் குறைகூறல்கள், பொய், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை பிரச்சாரம் செய்வது. அது அவர்கள் தெரிவு செய்கின்ற பாதையாகும். இது நாங்கள் தெரிவு செய்த பாதையாகும்.
குறிப்பாக இந்த வேலைத்திட்டத்தின் ஒரு சில விடயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எனக்கு தெரியும் எமது நாடு ஒரு முறைமை என்ற வகையில் சீர்குலைந்திருக்கிறது. நாங்கள் எந்தவொரு துறையிலும் ஈடுபட்டிருக்கிற ஒருவரை சந்தித்தால் அவருக்கு அந்த துறை பற்றி கூறுவதற்கு ஒரு கதை இருக்கிறது. கவலைக்குரிய ஒரு கதையாகும். நாங்கள் சட்டத்தின் ஆதிக்கம் பற்றிய பொறுப்பு வகிக்கின்ற நிறுவனங்களைச் சோ்ந்தவர்களை சந்தித்தால் அந்த நிறுவன முறைமையின் சீர்குலைவு, சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்வதில் நிலவுகின்ற தடைகள், சீர்குலைந்துள்ள விதத்தை அவர்கள் கூறுவார்கள். சுற்றுலாத்துறையைச் சோ்ந்த குழுவினரை சந்தித்தால் அவர்கள் அவர்களுக்கே உரித்தான ஒரு கதையை கூறுவார்கள். இந்நாட்டின் கைத்தொழில் முனைவோரை சந்தித்தால் அவர்களுடைய துறையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளை அவர்கள் எடுத்துரைப்பார்கள்.
நாங்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகள், கணக்காளர்களைச் சந்தித்தால் அவர்கள் எங்களுடைய கணக்காய்வு பேரிடர் நிலைமைகள் பற்றி கூறுவார்கள். நாங்கள் மார்க்க அறிஞர்களை சந்தித்தால் அவர்களின் துறைகளில் இடம்பெற்றுள்ள பேரழிவுகள் பற்றி கூறுவதற்கான கதைகள் அவர்களிடம் இருக்கின்றன. அதன் அர்த்தமென்ன? எங்களுடைய நெருக்கடி ஒரு சிலவற்றில் மாத்திரமல்ல. எங்களுடைய ஒட்டுமொத்த முறைமையுமே சீர்குலைந்து விட்டது. நாங்கள் இருப்பது ஒட்டுமொத்த முறையினதும் நெருக்கடியிலாகும். எனவே இந்த நாட்டின் ஒட்டுமொத்த முறைமையும் சீர்குலைந்து விட்டது. எந்தவொருதுறை பற்றியும் சாதகமான உணர்வு எஞ்சியதாக இல்லை. ஒட்டுமொத்த முறைமையுமே முற்றாகவே சீரழிந்துவிட்டது. எனவே எங்களிடம் கையளிக்கப்படுகின்ற பொறுப்பு நாங்கள் கையேற்கின்ற பொறுப்பு சீரழிந்துள்ள இந்த தேசத்தை மீண்டும் மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதாகும். மறுமலர்ச்சி யுகமொன்றை நோக்கி எடுத்துச் செல்வதாகும். ஏன் என்றால் சிறிய சிறிய மறுசீரமைப்புகளால் இதற்கு தீர்வுகாண முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.
எவ்வளவு சிறிய சிறிய மறுசீரமைப்புக்களை செய்ய நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். அவற்றின் பெறுபேறு நெருக்கடி மீண்டும் மீண்டும் தலைதூக்கி கட்டி வளர்க்கப்பட்டு வருவதாகும். அதனால் பிரஜைகள் என்ற வகையில் ஒரு தேசம் என்ற வகையில் நாங்கள் இந்த சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன? இந்த ஒட்டுமொத்த முறைமையுமே மீள்நிறுவுகின்ற பொறுப்பினை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ள தயார். ஒரு இடத்திலல்ல. ஒரு பகுதியில் அல்ல. ஒரு துறையில் அல்ல. ஒரு பிரஜைக்கு மாத்திரமல்ல. ஒட்டுமொத்தமும் சீர்குலைந்த நாடு. அதாவது ஆரம்பத்திலிருந்து புதிய கடிதமொன்றை நாங்கள் எழுதவேண்டியிருக்கிறது.
சில வேளைகளில் தோன்றியுள்ள பதற்றம் தோன்றியுள்ள குழப்பம் என்பவற்றை பார்த்தால் எங்கிருந்து ஆரம்பிப்பது என நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இந்த சிக்கல் அழிவுமிக்கது. ஆனால் எங்களுடைய இந்த வேலைத்திட்டத்தில் தோன்றியுள்ள இந்த சிக்கலை படிப்படியாக தீர்ப்பதற்கு அவசியமான பலம்பொருந்திய செயற்பாடுகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து நோக்கினால் எந்த இடத்தில் ஆரம்பிப்பது எந்த இடத்தில் முடிப்பது எங்கே சிக்கல் இருக்கிறது என்பதை தீர்த்து வைக்கவேண்டிய ஒரு நிலையே காணப்படுகிறது.
எனவே நாங்கள் ஒழுங்கமைத்த நிலையில் கட்டம் கட்டமாக இந்த நாட்டை வளமிக்க நாடாக மாற்றுகின்ற, எமது பிரஜைகளுக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இது உள்ளடக்கியிருக்கிறது. முதலில் எமது வேலைத்திட்டத்தில் எமது நாடு முன்னோக்கி நகரவேண்டுமானால் சட்டத்தின் ஆதிக்கம் முறைப்படி நிலவவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறோம். சட்டத்தில் நிலவுகின்ற பிரதான கோட்பாடான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற கோட்பாட்டுக்கு மீண்டும் புத்துயிரளிக்கவேண்டும் இந்த சட்டத்தின் ஆட்சி இந்த அளவிற்கு சீரழிய காரணமாக அமைவது சட்டங்களின் குறைபாடுகள் காரணமாக அல்ல. நிறுவன கட்டமைப்புக்களின் பலவீனங்களுமல்ல. பலம் வாய்ந்த ஸ்தாபன கட்டமைப்புக்கள் நிலவுகின்றன. பலம் பொருந்திய சட்ட முறைமைகள் நிலவுகின்றன. பிரச்சினை எங்கே தோன்றியுள்ளது. அரசியல் கலாச்சாரத்தில் தான். நாங்கள் மீண்டும் எமது நாட்டின் பிரஜைகளுக்கு சட்டம் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமா? இல்லையா? சிந்தித்துப் பாருங்கள். பாரதூரமானதொரு தாக்குதலை நடத்தி அந்த தாக்குதலை திட்டமிடுவோருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியுமென்ற நம்பிக்கை சமூகத்தில் உருப்பெற்றால் என்ன செய்வது? பாரியளவிலான கொள்ளைகளை மேற்கொண்ட ஒருவரை ஜனாதிபதி ஆக்க முடியுமென்ற கருத்தியல் சமூகத்தில் உருவாகினால் இந்த சமூகம் எங்கே போய் நிற்கும்? குற்றச் செயல்களுக்கு ஊழல்களுக்கு சட்டம் சீர்குலைய ஒரு ஊக்கியாக அமையும்.
பாரிய அளவிலான சான்றுகளை சேகரித்து புலனாய்வுகளை செய்திருக்காவிட்டாலும் சமூகத்தில் தமது வாழ்க்கையில் கண்டு அனுபவித்துள்ள குற்றச் செயல்கள். என்றாலும் இந்த குற்றச்செயல்கள் சுதந்திரமாக வளர்ச்சியடைந்து வருமானால் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் இந்த சமூகம் எங்கே போய் நிற்கும்? எனவே நாங்கள் நிச்சயமாக எமது நாட்டிலே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வோம். இந்த நிறுவனங்களை விழுங்கிக் கொண்டுள்ள அரசியலிலியிருந்து நாங்கள் இந்த நிறுவனங்களை மீட்டெடுப்போம். நாட்டுக்கு தேவை ஒரு பொலிஸ் மா அதிபரேயன்றி ஒரு பெயர் அல்ல. எங்களுக்கு பொலிஸ் மா அதிபர் பதவி தேவை. ஆனால் அவர்களின் தேவை பொலிஸ் மா அதிபர் ஒருவரின் பெயர். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் சட்டத்தை பேணிவர முடியுமா? எனவே நாங்கள் இந்த நிலைமையை மாற்றியமைப்போம்.
இரண்டாவது விடயம் எமது நாட்டில் நீண்டகாலமாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியாமற்போயுள்ளது. எமது நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்புமே அடுத்தவருக்கு எதிரானதாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தெற்கிற்கு எதிராக வடக்கின் அரசியலும் வடக்கிற்கு எதிராக தெற்கின் அரசியலும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள அரசியலும் சிங்களவர்களுக்கு எதிரான முஸ்லிம் அரசியலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எமது நாட்டின் அரசியல் என்பது பிறருக்கு எதிரான அரசியலாகும். அத்தகைய அரசியலால் ஒருபோதுமே ஒற்றுமையை நிறுவ முடியாது. ஒற்றுமையை ஏற்படுத்துதல் சட்டத்தின் வாசகங்களுக்குள்ளே சட்டத்தின் பிரிவுகளுக்குள்ளே உரிமைகளுக்குள்ளே மாத்திரம் இருப்பதொன்றல்ல. ஒற்றுமையை உருவாக்குவதற்கான பிரதான காரணி அரசியலுக்குள்ளே நிலவுகின்றது என நாங்கள் நினைக்கிறோம். ஏனைய காரணிகளையும் நாங்கள் நிறைவு செய்ய வேண்டும். பிரதான பங்கு அரசியலில் தான் இருக்கிறது. நோ்ந்துள்ளது என்ன? ஒட்டுமொத்த அரசியலுமே மற்றவருக்கு எதிரான அரசியல் என்றால் அத்தகைய அரசியலால் மற்றவரின் நன்மதிப்பு மற்றவரின் பெறுமதி மற்றவரின் பாதுகாப்புக் கொண்ட தேசத்தை உருவாக்கிவிட முடியாது. எனவே நாங்கள் முதல் முதலில் செய்வது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் மற்றருக்கு எதிரான அரசியலுக்கு பதிலாக ஒற்றுமையின் அரசியல் தான் நிலவும்.
அதன் பின்னர் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பு. குறிப்பாக எங்களுக்கு தெரியும் 2015 – 19 காலப்பகுதியில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அரசியலமைப்பொன்றினை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அது இடைநடுவில் செயலற்றுப்போயுள்ளது. நாங்கள் அந்த செயற்பாட்டினை சீக்கிரமாக நிறைவு செய்து எமது நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளை ஏற்றுக்கொள்கின்ற புதிய அரசியல் அமைப்பொன்றினை உருவாக்குவோம். அத்துடன் நின்றுவிடாமல் தமிழ்மொழி, சிங்கள மொழி பேசுகின்ற பிரஜைகளுக்கு தமது மொழியில் தமது அரசுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கான உரிமையை நாங்கள் யதார்த்தபூர்வமானதாக்குவோம். அரசியல் அமைப்பில் அது இருக்கிறது. தமிழ் பிரஜையொருவர் தமது மொழியில் அரசுக்கு கடிதமொன்றை அனுப்பினால் அரசிடமிருந்து அதே மொழியில் பதில் கிடைக்கவேண்டும். பொலிசுக்குச் சென்று தமிழ் மொழி பேசுகின்ற பிரஜையொருவர் தனது மொழியில் முறைப்பாட்டினை செய்வதற்கான உரிமை இருக்கவேண்டும். எனவே மொழிக்கான உரிமை அரசியலமைப்பின் உறுப்புரைக்குள் மாத்திரம் இருந்து விட்டால் போதாது. அதனை யதார்த்தமாக நிலைநாட்டுவதற்கான வேலைத்திட்டத்தை கொண்டதாக எங்களுடைய முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
அதுமாத்திரமல்ல அனைத்து மதங்களினதும் சுதந்திரம் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் அவர்களுடைய வழிபாட்டுமுறைகளுக்கு கலாச்சாரங்களுக்கு மதிப்பளித்து முன்னெடுத்து செல்வதற்கான உரிமையை பாதுகாத்து நீண்ட காலமாக எமது நாட்டில் தோல்வி கண்டுள்ள தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கான மாபெரும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி கைவைத்துள்ளது.
அடுத்ததாக சாதகமான அரசாளுகை எமக்கு தேவையாகும். எமது அரசாளுகை தொடர்பிலே ஒவ்வொருவருக்கும் அருவருக்கத்தக்க உணர்வே இருக்கிறது. விமர்சன உணர்வே இருக்கிறது. எனவே முதலில் இந்த அரசாளுகையை கபளீகரம் செய்துள்ள அரசியலை அதிலிருந்து விலக்கி வைக்கவேண்டும். ஆட்சோ்ப்பு, பதவியுயர்வு, இடமாற்றம் என்பவை சீரழிந்துள்ளது. நியமனம் பெறுகின்ற ஒருவர் இதற்கு அப்பால் நான் பயணிக்கவேண்டுமானால் எனக்குள்ள ஒரே பாதை அமைச்சரின் பின்னால் செல்வது மாத்திரமே என நினைக்கிறார். ஒருவருக்கு நியமனம் கொடுத்து அதன் பின்னர் இன்னுமொருவருக்கு நியமனம் கொடுப்பதல்ல இப்போது அரச பொறியமைப்பின் எல்லாக் கட்டமைப்புகளுமே சீரழிந்து விட்டன. அவர்கள் சுயமாக எந்தவிதமான அழுத்தமுமின்றி அரசியல்வாதிக்கு எந்தளவிற்கு அடிபணிகின்றோம் என்பதிலேயே நம்பிக்கை வைக்கிறார்கள். அது பற்றி பேசுவதில் பயனில்லை. எனவே இந்த அரசாளுகையை அரசியலிலிருந்து முற்றாகவே மீட்டெடுக்க வேண்டும். இந்த அரசசேவையை நெறிப்படுத்துவதற்கான எந்த விதமான தனிப்பட்ட தேவையும் எமக்கு கிடையாது. சாதகமான அரசாளுகைக்கு அவசியமான ஜனாதிபதியின் அதிகாரங்களை நாங்கள் கட்டுப்படுத்துவோம். புதிய அரசியலமைப்பில் அதனை இல்லாதொழிக்கவும் நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கிறோம்.
உலகம் முன்னோக்கி நகர்வது தனிமனிதனின் அடிப்படையில் அல்ல. அது அந்தக்காலம் பழங்குடியினர் பழங்குடித் தலைவரிலேயே தங்கியிருக்கிறார்கள். ஆனால் நாகரிகமடைந்த சமூகத்தில் அது கூட்டுமுயற்சியிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் நாங்கள் பயணித்துக் கொண்டிருப்பது கூட்டு முயற்சியில் தீர்மானத்தை மேற்கொள்கின்ற அடிப்படையில் அல்ல. சட்டமுறைமையே தனியாள் ஒருவரின் ஆதிபத்தியத்தின் கீழேயே இருக்கிறது. எனவே இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் எங்களுடைய கொள்கைப்பிரகடனத்தில் உள்ளடக்கியிருக்கிறோம் அதைப்போலவே நாங்கள் அமைச்சுப் பதவிகளை கட்டியெழுப்புதல் என்பது அரசாளுகையும் ஒரு முக்கியமான அம்சமாகும்.
அமைச்சுப்பதவிகளை தமது எண்ணம்போல் தமக்கு நெருக்கமானவர் என்றால் அவருக்கு அதிக எண்ணிக்கை கொண்ட அமைச்சுக்களை கொடுப்பதன் மூலம் தான் வெட்டவேண்டிய ஒருவர் என்றால் அவருக்கு குறைந்தளவையும் கொடுப்பதன் மூலம் அதிகமான கருத்திட்ட அசைவுகள் இடம்பெறுமானால் அதனை தமது கைகளில் குறித்து வைத்துக்கொண்டு இருக்கின்ற அமைச்சரவை வரலாறுதான் எங்களுக்கு இருக்கிறது. எனக்கு ஞாபகமிருக்கிறது ஒரு காலத்திலே காணியமைச்சு ஒருவரிடம் இருக்கிறது. ஆனால் அதிலிருந்து LRC யை ஜனாதிபதி எடுத்துக்கொள்கிறார். ஏனென்றால் காணிகள் அங்குதான் இருக்கின்றன. சுற்றாடல் அமைச்சு சுற்றாடல் அமைச்சரிடம் இருக்கிறது. அதில் பெறுமதிமிக்க காணிகள் இருக்கின்ற கரையோர பாதுகாப்பு காணிகள் ஜனாதிபதியிடம் இருக்கிறது. தொலைத்தொடர்பு அமைச்சு ஒன்றிருக்கிறது. ஆனால் அதன் முக்கிய அங்கமான TRC ஜனாதிபதியிடமே இருக்கிறது. அதாவது ஒவ்வொரு அமைச்சிலும் பலம்பொருந்திய நிறுவனங்களை தனது கைக்குள் எடுத்துக்கொள்கிறார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உச்ச அளவில் 25 அமைச்சுக்கள்; 25 அமைச்சர்கள்; அவை முறைசார்ந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அமைச்சுக்களாகும். இந்த இராஜாங்க அமைச்சர் என்கின்ற பைத்தியக்கார வேலையை நிறுத்தவேண்டும் . அது ஒரு பொய்ப்பித்தலாட்டம்.
இராஜாங்க அமைச்சுக்கும் கெபினட் அமைச்சுக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் இராஜாங்க அமைச்சர் அமைச்சரவைக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமை மாத்திரமாகும். அதேவேளையில் அதனோடு தொடர்புடைய அமைச்சரவை பத்திரமொன்று இருந்தால் அமைச்சரவைக்கு செல்ல முடியும். எனவே இந்த இராஜாங்க அமைச்சுப்பதவிகளை உருவாக்குவதென்பது தமக்கு எதையாவது ஈட்டிக்கொள்ள வேண்டுமானால் அதற்காக நிறுவனங்களை பகிர்ந்து கொள்ளல் ஆகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் இல்லை. 25 அமைச்சுக்களுக்கு 25 பிரதியமைச்சர்கள். பொதுப்பணத்தை நாசமாக்கி அனுபவிக்கின்ற இந்த சுகபோகங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்திவிடும். சாதகமான அரசாளுகையே எமது நாட்டுக்கு அவசியமாகின்றது.
நான்காவதாக பலம்பொருந்திய வெளியுறவுக்கொள்கையொன்று அவசியமாகும். எங்களுக்கு தெரியும் உலகம் புவி அரசியல் முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. ஒரு காலகட்டத்திலே உலகம் தெளிவான இரண்டு துருவங்களாக பிரிந்திருந்தது. நிகழ்கால உலகம் இன்று பல துருவங்களாக பரந்திருக்கிறது. எங்களுடைய அண்டைநாடான இந்தியா அந்த புவி அரசியலில் ஒரு போட்டியாளனாக மாறியிருக்கிறது நாங்கள் அதற்கு அருகில் உள்ள ஒரு நிலப்பரப்பாக மாறியிருக்கிறோம். ஏனைய பலம்பொருந்திய நாடுகளில் புவி அரசியல் கேந்திர நிலையமாக எமது நாடு மாறியிருக்கிறது.
எனவே எமக்கு பலம் பொருந்திய நிலையான வெளியுறவுக் கொள்கையொன்றின் தேவை முன்னொருபோதும் இருந்திராத வகையில் இப்பொழுது அதிகரித்திருக்கிறது என நாங்கள் நினைக்கிறோம். நான் தெளிவாக கூறுகிறேன் எமது பிராந்திய பாதுகாப்பிற்காக பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் இலங்கையின் தரையும் கடலும் வானும் பயன்படுத்திக்கொள்ளப்பட தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இடமளிக்கமாட்டாது. அது எங்களுடைய வெளியுறவுக் கொள்கையின் பிரதான கோட்பாடு அதுவாகும். கொடுக்கல் வாங்கலின்போது அதிலிருந்து எங்களுக்கு கிடைக்கின்ற சாதகங்கள் பாதகங்கள் பற்றியே நாங்கள் முக்கிய கவனம் செலுத்துவோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப சிறந்த வெளியுறவுக் கொள்கை அவசியமாகும்.
அடுத்த விடயம் ஊழலும் மோசடியுமற்ற நாடு. அதற்கான நிர்வாகம் எமக்கு தேவையாகும். எங்களுடைய பிரார்த்தனை எதிர்பார்ப்பு அதுவாகும். அந்த எதிர்பார்ப்பினை ஈடேற்றுவதற்கான விடயங்களை இந்த கொள்கைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. எதிர்காலத்தில் இடம்பெற போவதை தடுப்பதற்காக மாத்திரமல்ல இறந்தகாலத்தில் இடம்பெற்றவைக்கும் தண்டனை வழங்கி கையகப்படுத்துவது எங்களுடைய முதன்மை செயற்பொறுப்பாகும். அதற்கான அத்திவாரத்தை நாங்கள் இடவேண்டும். எமது நாட்டை எடுத்துக்கொண்டால் அத்திவாரம் இல்லாத ஒரு நாடாகும். எனவே இந்த நாட்டை கட்டியெழுப்புவதைப் பற்றி சிந்திப்போமேயானால் இந்த அத்திவாரத்தை நாங்கள் இடவேண்டும். வலுவான வெளியுறவுக் கொள்கை, சாதகமான அரசாளுகை, தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, ஊழல் மோசடி, விரயமற்ற நிர்வாகம். இது தான் எங்களின் அத்திவாரம். இந்த அத்திவாரத்தின் மீது தான் நாங்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தின் திசையைப் பற்றிய சிந்திக்க முடியும்.
எனவே எங்களுடைய அத்திவாரம் மிகவும் தெளிவானது. அது மூன்று கோட்பாடுகளை கொண்டதாகும். ஒன்று நாங்கள் எமது நாட்டின் உற்பத்தியை முன்னெடுத்துச் செல்லவேண்டும். உங்களுக்கு தெரியும் எங்களுடைய அயல் நாடுகள் எண்பதாம் தசாப்தத்தின் இறுதிப்பகுதியில் எங்கே இருந்தது என்று. அந்த நாடுகள் எந்தளவிலான உற்பத்தியில் இன்றளவில் கை வைத்திருக்கின்றன என்பதை நாங்கள் காண்கிறோம். எளிமையான மொழிநடையை எடுத்துக் கொண்டால் இந்தியா மருந்து தயாரிக்கின்றது நாங்கள் அவற்றை கொண்டு வந்து குடிக்கிறோம். இந்தியா முட்டையை உற்பத்தி செய்கிறது. நாங்கள் அவற்றை கொண்டு வந்து சமைக்கிறோம். இந்தியா ஆடைகளை தயாரிக்கிறது நாங்கள் அவற்றைக் கொண்டு வந்து அணிகிறோம். இந்தியா உணவுகளை உற்பத்தி செய்கிறது. நாங்கள் அவற்றை கொண்டு வந்து உண்ணுகிறோம். இந்தியா பைசிக்கள் உற்பத்தி செய்கிறது நாங்கள் கொண்டு வந்து ஓட்டுகிறோம். இந்தியா திரீவீல் உற்பத்தி செய்கிறது நாங்கள் கொண்டு வந்து ஓட்டுகிறோம். எங்களுக்கு என்ன நோ்ந்துள்ளது? எமது சாத்திய வளங்கள் எமது தோற்றுவாய்கள் சர்வதேச சந்தையின் நடத்தைப்போக்குகள் இவை எல்லாவற்றை பற்றியும் சிந்தித்த உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி எமது நாட்டை மாற்றியமைப்போம். அப்படியில்லாமல் எப்படி பயணிப்பது?
எல்லாவற்றையும் இங்கே உற்பத்தி செய்யவேண்டுமென நாங்கள் கூறப்போவதில்லை. அது கற்காலக்கருத்து. உலகில் எந்தவொரு நாடும் எல்லாவற்றையும் உற்பத்தி செய்வதில்லை. ஆனால் எமது சாத்திய வளங்கள், எமது தோற்றுவாய்கள், சர்வதேச சந்தை, எம்மிடமுள்ள தொழில்நுட்பம், எமது மனித வளம், எமது நாட்டின் இட அமைவு. இவை எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்து நாங்கள் எமக்கு ஒத்துவரக்கூடிய உற்பத்தி மாதிரியை தெரிவு செய்து கொள்ளவேண்டும். இந்த வேலைத்திட்டம் பூராவிலும் நாங்கள் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?எங்களுடைய உற்பத்தியை எவ்வாறு இயக்குவது? என்பதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறோம். அது தான் முதலாவது விடயம்.
இரண்டாவதாக, இந்த உற்பத்தியுடன் மக்கள் தொடர்புபட வேண்டும். வெளியே இழுத்துப்போடப்பட்ட மக்களுடன் எந்த விதமான தொடர்புமற்ற உற்பத்தியால் பயனில்லை. அதனால் நாங்கள் எங்களுடைய உற்பத்திகளை கிராமிய பிரதேசங்களை நோக்கி தள்ளிவிடவேண்டும். கிராமிய மக்களை கொழும்புக்கு கொண்டு வந்து பொருளாதாரத்துடன் இணைப்பதல்ல. அவர் ஊரிலேயே இருந்துகொண்டு பொருளாதாரத்துடன் தொடர்பு கொள்கின்ற சமூக வாழ்க்கையொன்றை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சமூக ரீதியாகவும் பொருளாதாரா ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். அதனால் என்ன இடம்பெறவேண்டும்? உற்பத்தி இடம்பெற வேண்டும். பொருளாதாரம் விரிவடைய வேண்டும். மக்கள் பொருளாதாரத்துடன் தொடர்புபடவும் வேண்டும்.
மூன்றாவது விடயம், அடைகின்ற பொருளாதாரத்தின் வெற்றி நியாயமான வகையில் மக்களிடம் பகிர்ந்து செல்ல வேண்டும். இதைக்கூறினால் சில வேளைகளில் அதோ இரண்டு வீடுகள் இருந்தால் ஒரு வீட்டை எடுத்துக்கொள்ள இரண்டு கார் இருந்தால் ஒரு காரை எடுத்துக் கொள்ள அப்படியொன்றுமல்ல. நியாயம் என்பது அதுவல்ல நியாயம் என்றால் என்ன? எமது நாட்டின் தேசிய உற்பத்தியில் உயர் மட்டத்தில் இருக்கின்ற நூற்றுக்கு பத்து வீதமானவர்கள் தேசிய செல்வத்தில் நூற்றுக்கு 38.1 வீதத்தை அனுபவித்து வருகிறார்கள். அடிமட்டத்திலிருக்கின்ற நூற்றுக்கு பத்து வீதமானவர்கள் ஒட்டுமொத்த தேசிய செல்வத்தை 1.1 வீதத்தை அனுபவித்து வருகிறார்கள். அதன் அர்த்தமென்ன? அடிமட்டத்திலிருக்கின்ற அடுக்கைச் சோ்ந்தவர்களுக்கு மருந்துவாங்க முடியாது. உணவு வாங்க முடியாது. காற்றோற்றமுள்ள வீட்டில் வசிக்கமுடியாது. பிள்ளைகளுக்கு கல்வி புகட்டமுடியாது. முகத்தில் சிரிப்பே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு அடுக்கு எங்களுடைய சமூகத்திலே இருக்கின்றது. நாங்கள் நாட்டின் அபிவிருத்திப் பற்றி, பொருளாதார அபிவிருத்தி பற்றி பேசுவதில் பயனுண்டா? எமது நாட்டு பிரஜைகள் பட்டினியாக இருப்பார்களேயானால், எமது நாட்டின் பிள்ளைகளுக்கு கல்வி வசதிகள் இல்லாவிட்டால், எமது முதியோர்களால் மருந்து வாங்க முடியாவிட்டால், அது கொடூரமான பொருளாதாரமாகும். எங்களுடைய முன்மொழிவு என்ன? அடிமட்டத்தில் இருக்கின்ற பிரஜை வரை பொருளாதார நன்மைகள் நியாயமான வகையில் பாய்ந்து செல்ல வேண்டும். அது நீதி பற்றிய ஒரு பிரச்சனையாகும். அது மனிதத்துவம் பற்றி ஒரு பிரச்சினையாகும். ஆனால், இதற்கு எவ்வாறு வியாக்கியானம் கொடுக்கிறார்கள். இரண்டு வீடுகள் இருந்தால் ஒரு வீட்டை அபகரிப்போமாம். அவையெல்லாம் பொய்க் கதைகள். நாங்கள் கோட்பாட்டின் அடிப்படையில் தான் செயற்படுகிறோம். எங்களுடைய உற்பத்தியை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம். பொருளாதாரத்தின் அரச பங்கு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். பொதுவாக எடுத்துக்கொண்டால் திறைசேரிக்கு பணம் வரும்போது அரசாங்கம் வழங்குகின்ற சேவைகளில் இருந்தும் அரசாங்கத்திற்கு வருமானம் வருகின்றது. பார் லைசன் ஒன்று கொடுக்கும்போது அரசாங்கத்திற்கு ஒரு தொகை பணம் வருகிறது. ஆனால், இப்பொழுது யாருக்கு போகிறது? பார் லைசன் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுகிறது. அவர் அதனை விற்கிறார் . ஆனால் பொதுவாக எடுத்துக்கொண்டால் பார் லைசன் ஒன்றை பெற அரசாங்கத்திற்கு ஒரு தொகையை செலுத்த வேண்டும். மணல் அகழ்வதற்கான பேர்மிட் வழங்கும்போது அரசாங்கத்திற்கு வருமானம் வருகிறது. வாகனத்தை பதிவு செய்யும்போது அரசாங்கத்திற்கு வருமானம் வருகிறது. ஆனால் எங்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தைப் பார்த்தால் அரசாங்கம் வழங்குகின்ற சேவைகளுக்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களில் இருந்து கிடைக்கின்ற வருமானம் மிகவும் குறைவானதாகும். அரச வருமானத்தின் பெரும் பங்கு வரி அறவீடு மூலமாகவே கிடைக்கின்றது. அதாவது, பொருளாதார செயற்பாட்டில் இருந்துதான்.
அப்படியானால் அரசாங்க வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டுமானால் பொருளாதார செயற்பாட்டினை விரிவாக்க வேண்டும். அதனை விரிவாக்காமல் திறைசேரிக்கு பணத்தை ஈட்டிக்கொள்ள முடியாது. அரசாங்கம் கூறுவது பணத்தை பிறப்பித்துக்கொள்வதில்லை என்றுதான். அதாவது, வெளியில் உற்பத்தி செய்யப்படுகின்ற செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து செலவு செய்து வருகிறது. அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும். எனவே, நாங்கள் வெளியில் உள்ள பொருளாதாரத்திற்கு உச்ச அளவிளான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதாவது, வெளியில் உள்ள கைத்தொழில்கள், தொழில் முயற்சியாளர்களை புதிதாக உருவாகுவதற்கான ஒத்துழைப்பினை நாங்கள் செய்துகொடுக்க வேண்டும். ஆகவே, எங்களுடைய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. அரசாங்கம் வெளியில் உள்ள சிலவற்றை ஒழுங்குறுத்தி, தொழில்நுட்பத்தை வழங்கி, மூலதனத்திற்கான உதவிகளை வழங்கி, இலங்கைக்கு வெளியில் செல்லக்கூடிய சந்தைகளை தேடி கண்டுபிடித்து எங்களுடைய கைத்தொழில் முனைவோருக்கு, தொழில் முயற்சியாளருக்கு உதவி வழங்குவோம். அதுமாத்திரமல்ல, உலக எதிர்காலம் பற்றிய எதிர்வுகூறல்கள் பற்றி சிந்தித்து எம்மால் எந்த இலக்கினை நோக்கி செல்லமுடியும் என்பது பற்றிய திட்டங்களை ஆக்கவேண்டும். அது அரசாங்கத்தின் செயற்பொறுப்பாகும். சுற்றுலா கைத்தொழிலைப் பொருத்தமட்டில் உலகில் இடம்பெறுகின்ற அசைவுகள் அதைப்போலவே எம்மிடம் இருக்கின்ற சாத்திய வளங்களுக்கு எந்த இலக்கிற்கு எம்மால் செல்லமுடியும். அதனை தயாரிப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கே உண்டு. தனிப்பட்ட ஹோட்டல் சொந்தக்காரரால் அதனை தயாரிக்க முடியாது. அந்த பொறுப்பாணை அரசாங்கத்திற்கே இருக்கின்றது. என்ன செய்வது? ஒவ்வொரு துறைக்கும் இலக்கினை கொண்ட நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்படும். சுற்றுலாத்துறை இந்த இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு. அதாவது, ஆகக்குறைந்த வருடகாலத்திற்குள் 4 மில்லியன் சுற்றுலா பயணிகளை அழைப்பிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். IT தொழிற்றுறையில் தற்போது 1.2 பில்லியன் டொலர் வருமானமே இருக்கிறது. அதனை 5 பில்லியன் டொலர் வரை கொண்டுபோவதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். மெராயன் இண்டஸ்ட்றீயில் பாரிய சாத்திய வளம் நிலவுகிறது. அதிலிருந்து 5 பில்லியன் டொலர் வரையான பொருளாதாரத்திற்கு செல்ல நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.
அதற்கான திட்டங்களை அரசாங்கமே வகுக்கும். அவ்வாறு ஆக்கப்பட்ட திட்டங்களுக்கு நாங்கள் பிரத்தியேக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்போம். பிரத்தியேக தொழில்முயற்றியாளர்களுக்கு அழைப்பு விடுப்போம். இதோ எங்களுடைய இலக்கு. நீங்கள் பயமின்றி அதில் முதலீடு செய்யுங்கள். அரசாங்கம் இந்த இலக்கை நோக்கி இந்தத் துறையை நெறிப்படுத்துவதில் இடையீடு செய்யும். அதற்காக எங்களுக்கு இத்தனை ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகள் தேவை. இத்தனை சமையற்காரர்கள் தேவை. வழிகாட்டிகள் இத்தனைபேர் தேவை. சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்காக இத்தனை வாகனங்கள் தேவை. நீங்கள் பயப்படாமல் அந்த துறையில் முதலீடு செய்யுங்கள். அவ்வாறு முதலீடு செய்தவர் ஏதேனும் விதத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால் மீண்டும் அரசாங்கம் இடையீடு செய்ய வேண்டும். ஏனென்றால், அந்த இலக்கினை அடைந்தே தீர வேண்டும். எமது நாட்டில் என்ன நடக்கிறது? தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கிறார்கள். வங்கிகளுக்கு சொந்தமாகிறது. ஆதனங்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவர்கள் திக்கற்றுப் போகிறார்கள். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அவர்களை நாங்கள் பொருளாதாரத்தில் இழுத்துக்கொண்டால் எங்களுடைய இலக்கினை அடைய அவர்கள் தேவை. அவர் வீழ்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் அவருக்கு தோள்கொடுத்து அவரை துறையில் தக்கவைத்துக்கொள்ள உதவும். கைத்தொழில் முனைவோர், தொழில் முயற்சியாளர்கள், தொழில்வாண்மையாளர்கள் இந்த பொருளாதாரத்தை சீராக்க செய்கின்ற முயற்சிக்காக நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.
நீங்கள் அவற்றில் இருந்து ஈட்டுகின்ற செல்வத்தில் நியாயமான ஒரு பங்கினை அரசாங்கத்திற்கு கொடுங்கள். அது நீங்கள் செலுத்துகின்ற வரியாகும். நீங்கள் செலுத்துகின்ற ஒவ்வொரு சதத்திற்கும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இவ்வாறு செலவுசெய்யப்படுகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுவோம். நாங்கள் நினைக்கிறோம், இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பின்னர் ஒரு வருடத்தில் தாம் செலுத்திய வரியின் அளவு, அந்த வரி எதற்காக செலவிடப்பட்டது போன்ற விபரங்களும் SMS செய்தி மூலமாக உங்களுடைய அலைபேசிக்கு வரும். கல்விக்காக இவ்வளவு, சுகாதாரத்திற்கு இவ்வளவு, உட்கட்டமைப்பு அபிவித்திக்காக இவ்வளவு என்ற விடயங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம். நாங்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம், உங்களுடைய வரிப்பணத்தை கோயில் சொத்தினை பாதுகாப்பதை போல நாங்கள பாதுகாத்து ஒவ்வொரு சதத்திற்கும் பிரஜைக்கு பொறுப்பு கூறுவோம். எனவே, பொருளாதாரம் அவ்விதமாக அசைவடையும்.
ஒருசில துறைகளை கைப்பற்றிக் கொள்வதற்கான தொழில்நுட்பம் எம்மிடம் கிடையாது. இன்னும் சில துறைகளுக்கு பாரிய மூலதனம் அவசியமாகும். ஒருசில துறைகள் இருக்கின்றன எம்மால் சந்தையை கைப்பற்றிக்கொள்ள முடியாது. அப்படியானால், என்ன செய்யவேண்டும்? ஒரு சில துறைகளுக்காக நாங்கள் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பிக்க வேண்டும். ஏன்? எம்மிடம் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் அந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட கம்பனிகளை நாங்கள் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். ஆனால், ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் பெற்றோல் ஷெட்களில் பெற்றோல் அடிப்பதற்காக முதலீட்டாளர்களை வரவழைக்க மாட்டோம். அதனை எங்களால் செய்யமுடியும்தானே. இப்போது 200 நிலையங்களை கொடுத்தார்கள் அல்லவா? எதற்காக? அவர்கள் கொண்டு வருகின்ற தொழில்நுட்பம் என்ன? ஆனால், தொழில்நுட்பத் தேவைகளுக்காக முதலீடுகளுக்கு அழைப்பு விடுப்போம். ஒருசில துறைகள் இருக்கின்றன. இப்போது நாங்கள் அதனை செய்தேயாகவேண்டும். வின்ட் பவர் என்பதை எடுத்துக்கொண்டால் 40 கிகா வோட் கொள்திறன் கொண்ட வின் பவர் இருக்கிறது. எங்களிடம் மூலதனம் இல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்யவேண்டும்? மூலதனத்தை தேடிக்கொள்ளும் வரை காற்றாலை கருத்திட்டத்தை அமுலாக்காமல் இருப்பதா? முடியாது. ஏனென்றால், காற்று வீசிக்கொண்டே இருக்கும். இப்பொழுது அங்கே கொள்ளளவு இருக்குமென்றால், இப்போதே முதலீடு செய்ய வேண்டும்.
ஒரு சில துறைகள் இருக்கின்றன சந்தைப்பற்றிய பிரச்சினை. அது ஞாயிறு சந்தை போன்றதல்ல. நாங்கள் பண்டங்களை உற்பத்தி செய்து எங்களுக்குத் தேவையான இடத்தில் போய் விற்பனை செய்ய முடியாது. சந்தை சங்கிலித்தொடர் உருவாகியிருக்கிறது. எனவே, ஒருசில முதலீட்டாளர்களை கொண்டுவந்தேயாக வேண்டும். எங்களால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மார்கெட்டுக்கு செல்ல முடியாது. எனவே, மார்கெட்டை கைப்பற்றியுள்ள முதலீட்டாளர்களை நாங்கள் கொண்டுவர வேண்டும். அதனால், நாங்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதற்கான கொள்கையுடன் இணங்குகிறோம். அதற்கு அவசியமான உட்கட்மைப்பு வசதிகள், அதற்கு அவசியமான சட்டத் திருத்தங்கள், அதற்கான ஒழுங்கமைப்புகைளை எங்களுடைய வேலைத்திட்டத்தில் உள்ளடக்கியிருக்கிறோம். அதைப்போலவே, நாங்கள் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு விடயத்தை கூறிவைக்க விரும்புகிறோம். நீங்கள் முதலீடுகளை எடுத்து வாருங்கள். எங்களால் பகிரங்கமாக கூற முடியும். உங்களிடம் நேரடியாகவும் கூறமுடியும். எங்களுக்கு உங்களிடம் இருந்து ஒரு முடக்கு பச்சைத் தண்ணீர்கூட வேண்டாம். நாங்கள் பார்ப்பது கருத்திட்டம் நாட்டுக்கு நல்லதா? மக்களுக்கு நல்லதா? என்பதைப் பற்றி மாத்திரம்தான். கடந்த பல தசாப்தங்களாக எமது நாட்டுக்கு வந்த எத்தனை கருத்திட்டங்கள் திரும்பிப் போய்விட்டன.
சிறிய ஒரு உதாரணத்தை நான் கூறுகிறேன், இதன் பாரதூரத்தன்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். எங்ளுடைய களனிதிஸ்ஸ, கெரவலபிட்டிய போன்ற மின்நிலையங்களை எம்மால் LNG ஆக மாற்ற முடியும். கெரவலபிட்டிய மின்நிலையம் அந்த தொழில்நுட்பத்தினுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் தற்காலிகமாக நெப்தாவில் இருந்து, டீசல் வழி மூலமாக அதனை ஓட்டி வருகிறோம். ஒரு லீட்டர் டீசலில் இருந்து 3 யுனிற்களை மாத்திரமே எங்களால் உற்பத்தி செய்ய முடியும். ஒரு லீட்டர் டீசல் 360 ரூபாவானால் ஒரு யுனிட்டுக்கான செலவு 120 ரூபாய். ஒரு லீட்டர் நெப்தாவில் இருந்து, அதாவது உலை எண்ணெயில் இருந்து 3 யுனிற்களை உற்பத்தி செய்ய முடியும். அதன் விலை 210 ரூபாவாகும். எனவே, ஒரு லீட்டருக்கான செலவு 70 ரூபாவாகும். ஆனால், இந்த மின்நிலைய தொகுதிகளை LNGக்கு மாற்றினால் ஒரு யுனிற்றுக்கான செலவு 30 ரூபா. நாங்கள் என்ன செய்கிறோம், 70 ரூபாவுக்கு 120 ரூபாவுக்கு 14 வருடங்களாக உற்பத்தி செய்து வருகிறோம்.
LNG இற்கு மாற்றுவதற்கு எங்களுக்கு ஒரு குழாய்த் தொகுதி தேவை. களஞ்சியப்படுத்த ஒரு களஞ்சிய முனையம் தேவை. என்ன நடந்தது? மஹிந்தவின் அரசாங்கம் இதனை இழுத்தடித்துக்கொண்டு வந்தது. 2015 இல் மைத்திரி வந்தார். ரணில் இதற்கு ஜப்பான் கம்பனியொன்றை கொண்டுவந்தார். மைத்திரி கொரியன் கம்பனியொன்றை கொண்டுவந்தார். ஜப்பான் கம்பனிக்கும் கொரியன் கம்பனிக்கும் இடையில் சண்டை மூண்டது. மைத்தரிக்கும் ரணிலுக்கும் இடையிலான முரண்பாடு அங்கிருந்துதான் உருவாகியது. ஐந்து வருடங்கள் சண்டை போட்டுக்கொண்டார்கள். நாங்கள் டீசல் மூலமாகவே, உலை எண்ணெய் மூலமாகவோ மின்சாரத்தை உற்பத்தி செய்தோம். மீண்டும் மின்சார சபை முனையத்தொகுதிக்கான டெண்டர் கோரியது. குழாய்த் தொகுதிக்கான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டெண்டர் கோரியது. டெண்டரை திறக்க அதோ இதோ என்று இருக்கையில் பசில் ராஜபக்ஸ நியு போர்ட்ரஸ் எனும் கம்பனியை கொண்டுவந்தார். இன்னமும் தொடங்கவில்லை. இன்றும் நாங்கள் ஒரு யுனிற்றை 120 ரூபாவுக்கும் 70 ரூபாவுக்கும் உற்பத்தி செய்கிறோம். 30 ரூபாவுக்கு ஒரு யுனிற்றை உற்பத்தி செய்யலாம். பிரச்சினை என்ன? கொரியன் கம்பனியை யாருக்கு கொடுக்கும்? ஜப்பான் கம்பனி யாருக்கு கொடுக்கும்? நியு போட்ரஸிடம் இருந்து எவருக்கு கிடைக்கும்? அதுதான் பிரச்சினை.
இதுதான் எமது நாட்டில் உள்ள பிரச்சினை. நேரடி வெளிநாட்டு முதலீடு இலங்கைக்கு வரமாட்டாது. வரவேண்டியதும் இல்லை. 1978 இல் இருந்து 2022 வரை 44 வருடங்களாக 22 பில்லியன் டொலர்தான் நேரடி வெளிநாட்டு முதலீடாக கிடைத்துள்ளது. வியட்நாம் ஒரு வருடத்தில் மாத்திரம் அதனை பெற்றுள்ளது. எனவே, எங்களுடைய நேரடி வெளிநாட்டு முதலீடு வரவேண்டுமானால் எங்களுக்கு ஒரு முடக்கு பச்சைத் தண்ணீர் கூட வேண்டாம் என்பதுதான் எமது கொள்கை. எனவே, பொருளாதாரம் அந்த இடத்தை நோக்கி செல்லும்போது கல்வியில் புதிய மறுசீரமைப்புகள் உருவாக வேண்டும். நாங்கள் நினைக்கிறோம், எமது நாட்டிலே கல்விக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு நிலவுகிறது. வறுமைக்கும் கல்விக்கும் இடையில் தொடர்பு நிலவுகிறது. போதைப்பொருள் பாவனைக்கும் கல்விக்கும் இடையில் தொடர்பு நிலவுகிறது. எனவே, எங்களுடைய நாட்டை மீள் நிறுவும்போது கல்விக்கு பாரிய செயற்பொறுப்பு வழங்கப்படுகிறது. எனவே, நாங்கள் எங்களுடைய கல்வியை எடுத்துக்கொண்டால் எங்களது பாடசாலை முறைமையில் பல பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. ஒரு சில வருடங்களில் ஏறக்குறைய 500 பாடசாலைகளுக்கு ஒரு எப்ளிகேசன்கூட கிடைக்கவில்லை. ஒரு பிள்ளை கூட விண்ணப்பிப்பதில்லை. ஒரு சில பாடசாலைகள் இருக்கின்றன ஒரேயொரு எப்ளிகேசன்தான் கிடைத்திருக்கிறது. 1200 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் இருக்கின்றன. அங்கே மாணவர்களின் எண்ணிக்கை 50 ஐ விட குறைவாகும். எனவே, இந்த பாடசாலை முறைமைக்குள் பாரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
எனவே, அது பெற்றோருக்கும் சுமையாகிவிட்டது. பிள்ளைகளுக்கும் சுமையாகிவிட்டது. இன்று பிள்ளை கல்வி கற்பதை விட காலையில் எழுந்திருப்பது, பாடசாலைக்குச் செல்வதில் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாங்கள் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஒரு சில நாடுகளில் தமது வதிவிடத்தை மாற்றினால் புதிய வதிவிடத்திற்கு அருகில் உள்ள பாடசாலை கிடைக்கும். அந்த இடத்தில் இருந்து மாறினாலும் அங்கேயுள்ள பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பலாம். நாங்கள் பாடசாலையை தேடிக்கொள்வதற்காக வதிவிடத்தை மாற்றிக்கொள்கிறோம். எனவே, நாங்கள் ஒரு பிள்ளைக்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்லமுடியாத வகையில் ஒவ்வொரு பாடசாலையிலும் நிலவுகின்ற இந்த ஏற்றத் தாழ்வினை இல்லாதொழிப்போம்.
பாட முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம். கல்வி என்பது ஒற்றை நேர்கோட்டு பாதையல்ல. விரிவடைந்த பல பாதைகளை கொண்டதாகும். உலகத்தின் தேவை முன்னேற்றமடைந்த மனிதனை உருவாக்குவதாகும். எளிமையாக எடுத்துக்கொண்டால், மதிநுட்பம் வாய்ந்த பிள்ளை, ஆரோக்கியமான பிள்ளை, துணிச்சல் மிக்க பிள்ளை, நெஞ்சில் ஈரமுள்ள பிள்ளை அவர்களைத்தான் நாங்கள் உருவாக்க வேண்டும். ஆனால், இப்போது அறிவுப்படைத்த பிள்ளை இருக்கிறது. அவர்கள் ஆரோக்கியமானவர்கள் அல்ல. அறிவுப்படைத்த பிள்ளை இருக்கிறது. சிலவேளை அந்தப் பிள்ளையிடம் தாக்குப்பிடிக்க்க்கூடிய ஆற்றல் கிடையாது. அறிவுப்படைத்த பிள்ளை இருக்கின்றது ஆனால் நெஞ்சில் ஈரமில்லை. மனசாட்சி இல்லை. ஆன்மீகம் கிடையாது. எமது கல்வி அந்தப் பிள்ளையை இயந்திரமயமாக்கிவிட்டது. எனவே, இந்தக் கல்வியை நாங்கள் மீள்நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தை அமுலாக்குவோம்.
அத்துடன், போக்குவரத்து போன்ற பல துறைகள் மீது நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம். எனவே, நாங்கள் இவற்றை கட்டம் கட்டமாக ஈடேற்றும் வரை எங்களுடைய சாதாரண பிரஜைகளை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். உணவு கிடைக்காத, பிள்ளைகளுக்கு கல்வி புகட்ட முடியாத, முதியோர்களுக்கு மருந்து வாங்க முடியாத பல குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றினைக் கொடுக்க நாங்கள் முன்மொழிகிறோம். அதைப்போலவே, உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான வற் வரியை நாங்கள் நீக்குவோம். மிகவும் குறுகிய காலத்தில் மின்சார விலையையும் எரிபொருள் விலையையும் நாங்கள் குறைப்போம். எனவே, நாங்கள் பொருளாதாரத்தில் ஒரு பாய்ச்சலை எடுக்கும் வரை பிரஜைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள வலதுகுறைந்த பிரஜைகளை நாங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். எவரையும் பால்நிலை அடிப்படையில், நகரம் கிராமம் என்ற அடிப்படையில், தேசியத்துவத்தின் அடிப்படையில், தமது இயலாமை நிலையின் அடிப்படையில் ஓரங்கட்டப்படவோ, பாரபட்சம் காட்டப்படவோ இடமளிக்கக் கூடாது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்பது அத்தனை பிரஜைகளையும் நியாயமான வகையில் நடத்துகின்ற அரசாங்கமாகும். மனிதம் நிறைந்த அரசாங்கமாகும். வளமான நாடு. ஒவ்வொரு பிரஜையின் முகத்திலும் புன்னகை மலர்கின்ற அழகான வாழ்க்கை. அதற்காகவே நாங்கள் மல்லுக்கட்டுகிறோம். இதனை நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் கட்டம் கட்டமாக முன்னோக்கி எடுத்துச் சென்றால் நிச்சயமாக இந்த நாட்டை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்ற முடியும். எமது மக்களுக்கு அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியும். அதற்காக ஒன்றுசேர்வோம். முன்னணிக்கு வருவோம் என அழைப்பு விடுத்து விடைபெறுகிறேன்.
நன்றி