அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து முடிவெடுக்க சகல அதிகாரங்கள் கொண்ட ஆணைக்குழு; திகன கூட்டத்தில் சஜித் பிரேமதாச
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்பதோடு அரச ஊழியர்களுக்கான வரியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்டதை போன்று 15 வீத வட்டியை சேமிப்பு வட்டி வீதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 15 வீத வட்டியுடன் கூடிய இலட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் உரிமை இன்று பறிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் ஏமாற்றப்பட்டாலும் தாம் அவர்களை ஏமாற்றப் போவதில்லை. 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்போம் என்று கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2016 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த சலுகையை கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் ஆக்கி உள்ளார். அதனை மீண்டும் வழங்குவோம். ஓய்வு பெற்றவர்களின் சலுகைகளை உயர்ந்த தரத்தில் பேணும் பொருட்டு, 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதன் மூலம் புதியதொரு சட்ட மூலமொன்று கொண்டு வரப்படும். சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கப்படுகின்ற 3000 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பன்னிரெண்டாவது மக்கள் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று(24) காலை கண்டி திகன பிரதேசத்தில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு இராணுவ வீரர்களுக்காக One rank one pay வேலை திட்டத்தையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார். இவை பொய்யான வாக்குறுதிகள் அல்ல இது முன்மொழிவும் திட்டங்களும் ஆகும். பிரேமதாசாக்கள் செய்வதாகச் சொன்ன விடயங்களை செய்யாமல் இருந்ததில்லை. எனது தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் நாமத்தால் நான் சொல்வதை செய்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
🟩 தேவையற்ற அரச செலவினங்கள் நிறுத்தப்படும்.
இவற்றை செய்வதற்கான பணம் இருக்கின்றது. தேவையற்ற அரச செலவினங்கள் நிறுத்தப்படும். ஜனாதிபதியின் செலவுகள் நிறுத்தப்படும். தான் நாட்டுக்குப் பாரமான ஜனாதிபதியாக இருப்பதில்லை. அந்தப் பணத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். அத்தோடு ஊழலையும் நிறுத்துவோம். அமைச்சரவை அமைச்சுகள் என்பது ரோஜா பூக்கள் அல்ல, அவை முட் செடிகள். வங்கரோத்து அடைந்துள்ள நாட்டை வங்கரோத்து நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
🟩 அனைத்து கொடுக்கல் வாங்கலும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்.
அரசாங்கத்தின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் டிஜிட்டல் மயப்படுத்தி மக்களை அறியச் செய்வோம். நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் சூறையாடிய பணத்தை நாட்டுக்கு மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தாம் உள்ளிட்ட குழுவினர் திருடர்களுடன் எந்த டீலையும் வைத்துக் கொள்ளவில்லை என்று எதிரக்கட்சித் மேலும் தெரிவித்தார்.
🟩 வரி செலுத்தாத செல்வந்தர்கள் மாட்டிக்கொள்வார்கள்.
அரச வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு அதனை திருப்பிச் செலுத்தாத செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சரியான முறையில் வரியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற போது சமூகத்தில் உள்ள செல்வந்தர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அரச நிதியல் கொள்கையின் மூலம் தேவையான பணத்தை ஈட்டிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 மக்கள் நன்மை பயக்கும் IMF இணக்கப்பாட்டுக்கு செல்வோம்.
தற்போது வறுமை அதிகரித்து மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரிக்கு மேல் வரிவிதித்து வரையறையற்ற விதத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் ஏமாற்றுக்களுக்கு ஏமாறாமல் IMF உடன் செயற்பட்டு மக்களின் எல்லையற்ற சுமையை குறைத்து, வறுமையை போக்குவதற்கு சிறந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.
🟩 எம்மிடம் டீல்கள் இல்லை.
மக்கள் அபிப்பிராயத்தோடு பாராளுமன்றத்திற்கு வருகை தந்த சிலர் சலுகைகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் ஏலம் போய் இருக்கிறார்கள். நம்மிடம் இருக்கின்ற உறுப்பினர்கள் அவ்வாறு பணத்துக்காக சோரம் போகின்றவர்கள் அல்லர். ஞானம் உள்ளவர்களும் சிறந்த புத்திஜீவிகளும் தம்மோடு இணைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.