வரி செலுத்துபவருக்கு தான் செலுத்திய வரிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான நியாயமான உரிமை இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க
(வங்கிகள் மற்றும் நிதித்துறை மன்ற தொழில்வாண்மையாளர்களின் தேசிய மாநாடு – மொனாக் இம்பீரியல் ஹோட்டல் வளாகத்தில் – 25.08.2024)
இத்தகைய நிதி மற்றும் வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களை சந்திக்க எங்களுக்கு கிடைத்த முதலாவது வாய்ப்பு இதுவாகும். அதனால் கட்டாயமாக நாங்கள் வலியுறுத்த வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நான் முன்வைக்கிறேன்.
எங்களுக்குத் தெரியும் எமது நாடு ஒரு வறிய நாடு. தரவுகள் எங்களுடைய வாழ்க்கை நாங்கள் வறியவர்கள் என்பதை எடுத்துக் கூறுகின்றன. ஒரு நாடு என்ற வகையில் எங்களால் கடனை மீளச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறே எங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியாமல் போயுள்ளது. அதாவது, ஒரு வறிய நாடுதான். இளைஞர்களுக்கு நாட்டிலே தொழிலை தேடிக்கொள்ள முடியாமல் போயுள்ளது. அதனால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. நாடு மாத்திரமா வறுமைபட்டுள்ளது. இல்லை. அரசாங்கமும் வறுமைப்பட்டதே. பொதுவாக எடுத்துக்கொண்டால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் 4168 பில்லியன் ரூபாவாகும். மதிப்பிடப்பட்ட செலவு, இந்தக் கடன் தவணை செலுத்துதல், வட்டித் தவணையை செலுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் செலவு 11,277 பில்லியன் ரூபாவாகும். நான் நினைக்கிறேன் மக்களை விட அரசாங்கமே வறுமைப்பட்டுள்ளது.
மறுபுறத்திலே எடுத்துக்கொண்டால் மக்களும் வறியவர்களே. உணவை பெற்றுக்கொள்ள முடியாமல், காற்றோட்டமுள்ள ஒரு வீட்டில் வசிக்க முடியாமல், தனது பிள்ளைக்கு கல்வியை வழங்க முடியாமல், சிறந்த சுகாதார சேவையை பெற்றுக்கொள்ள முடியாமல், சிறந்த போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்ற மக்களே இருக்கிறார்கள். ஆகவே, மக்களும் வறியவர்களே.
எனவே நாடு, அரசாங்கம், மக்கள் என நாங்கள் வேறுவேறாக எடுத்துக்கொண்டாலும் இவை ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்துள்ளன. எங்களுடைய வசதிக்காக இவற்றை தனித்தனியாக எடுத்துக் கூறினாலும் இவற்றுக்கு இடையிலே இடைத்தொடர்பு நிலவுகின்றது. 1950 ஐ நோக்கி நாங்கள் திரும்பிப் பார்த்தால் எங்களின் ஏற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவின் ஏற்றுமதி வருமானம் 25 மில்லியன் டொலர்களாகும். அதாவது, தென்கொரியாவை விட 12 மடங்கு அதிகமான ஏற்றுமதி வருமானம் எமக்கு கிடைத்துள்ளது. இப்பொழுது எமது நாட்டில் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவின் ஏற்றுமதி வருமானம் 685 பில்லியன் டொலர்களாகும். அதாவது, தற்போது எமது ஏற்றுமதி வருமானத்தை விட 50 மடங்கு அதிகமானதாகும். 1980 இல் வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 400 மில்லியன் டொலர்களாகும். எங்களுடைய ஏற்றுமதி வருமானம் 1500 மில்லியன் டொலர்களாகும். அது எங்களுக்கு ஞாபகத்தில் இருக்கின்ற காலமாகும். இப்போது வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 350 பில்லியன் டொலர்களை நெருங்கியிருக்கிறது. எங்களின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். இதற்கு காரணம் என்ன? உலகம் ஒரே இடத்தில் நின்றுவிட மாட்டாது. பொருளாதாரம், சிந்தனைகள், சந்தை இவை மாறிவருகின்றன. அந்த மாற்றங்களில் மிகப்பெரியவை 20 ஆம் நூற்றாண்டிலேயே இடம்பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் விவசாயத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் இடம்பெற்றிராவிட்டால் இன்றைய உலகிற்கு உணவு வழங்க முடியாது. 20 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத் துறையில் குறிப்பாக மருத்துவத்துறையிலான முன்னேற்றம் காரணமாக ஒருசில நோய்கள் இந்த உலகத்தில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டில் மக்களின் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டது. ஆனால், இந்த 20 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற தொழில்நுட்பத்தின், விஞ்ஞானத்தின் புதிய சந்தையின் மாற்றங்களை நாங்கள் கைப்பற்றிக்கொள்ள தவறிவிட்டோம். தென்கொரியா அதில் வெற்றிபெற்றது. வியட்நாம் வெற்றிபெற்றது. எமது அயல்நாடான இந்தியா வெற்றிபெற்றது.
உங்களுக்குத் தெரியும் 1987 ஆம் ஆண்டில் தான் இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமாக இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. இந்திய இராணுவம் தெற்கில் இருக்கவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தான் இருந்தது. அந்தக் காலத்திலே தெற்கிலே ஒரு வதந்தி பரவிச் சென்றது, இந்திய இராணுவத்தினர் சவர்க்காரம் சாப்பிடுகிறார்கள் என்று. அதாவது, இங்கே வந்த இந்தியப் படையினர் சவர்க்காரம் சேகரிக்கிறார்கள். தேங்காய் எண்ணெய் குடிப்பதாக பேசிக்கொண்டார்கள். சாதாரண பொதுமக்கள் நினைப்பார்கள் குளிப்பதற்காக இவ்வளவு சவர்க்காரம் தேவைப்பட மாட்டாதே. எனவே அவர்கள் உணவாக உட்கொள்கிறார்கள் என நினைத்தார்கள். அது நியாயமானதுதானே. தேங்காய் எண்ணெய் பருகுவதாக நினைத்தார்கள். ஏனென்றால், விடுமுறைக்காக இந்தியாவுக்குச் செல்லும்போது இந்தியப் படையினர் சவர்க்காரத்தையும் தேங்காய் எண்ணெயையும் எடுத்துச்செல்வார்கள். இது 1987 இல். இன்று அந்த இந்தியாக எங்கே இருக்கிறது? சந்திரனுக்குப் போய்விட்டது. இந்தப் பிராந்தியத்திற்கு மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்கின்ற இந்தியா. துணிமணிகளை உற்பத்தி செய்கின்ற இந்தியா. உணவை உற்பத்தி செய்கின்ற இந்தியா. இந்தப் பிராந்தியத்திற்கு விதையினங்களை உற்பத்தி செய்கின்ற இந்தியா. ஔடதங்களை உற்பத்தி செய்கின்ற இந்தியா. இது 40 வருடங்களுக்குள் ஏற்பட்ட மாற்றமாகும். ஏனென்றால், உருவாகிய மாற்றங்களை கைப்பற்றிக்கொள்ள அந்த ஆட்சியாளர்களுக்கு முடியுமாயிற்று. நாங்கள் அதில் தோல்விகண்டோம். எங்களுடைய பொருளாதாரத்தை விரிவாக்கிக் கொள்வதில் தோல்வியடைந்தோம். உலகச் சந்தையில் எங்களுடைய பங்கினை வளர்த்துக்கொள்வதில் தோல்விக் கண்டோம். விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பயன்படுத்தி எங்களுடைய உற்பத்திச் செலவினை குறைத்துக் கொள்வதில் நாங்கள் தோல்வி கண்டோம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக எங்களுடைய பண்டங்களின் தரத்தை மேம்படுத்துவதில் நாங்கள் தோல்வி கண்டோம். அதனால், நேர்ந்ததென்ன? உலகில் தனிமைப்படுத்தப்பட்ட, உலகத்திற்கு ஒத்துவராத ஒரு நாடாக நாங்கள் மாறினோம். அப்படியானால், இப்பொழுது எங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால் வறுமையின் அடிமட்டத்திற்கே சென்றுள்ள, உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு நேரொத்ததாக பொருளாதாரம், கல்வி ஆகிய எல்லாவற்றையும், விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் முன்னேற்றங்கள் இவை எதையுமே உலகத்துடன் இணைத்துக் கொள்வதில் தோல்விகண்ட ஒரு நாடாக மாறியிருக்கிறோம்.
எங்களுக்கு பொறுப்பளிக்கப்படுவது இந்த நிலைமையில் இருந்து நாங்கள் விடுபடுவது எப்படி என்பதுதான். முதலாவது, நாங்கள் திட்டமிட வேண்டும். எமது நாட்டை எப்படி ஒரு செல்வந்த நாடாக மாற்றுவது. அத்தகைய ஒரு நாடே எமக்குத் தேவை. நாடு வளமடைந்தால் அது படிப்படியாக அரசாங்கத்தின், மக்களின் பொருளாதார சிக்கல்களை தீர்த்துவைக்கும். அவ்வாறு இடம்பெற்றால் நாடும் செழிப்படையும். மக்களும் வளமடைவார்கள். எனவே, நாங்கள் இந்த அரசியல் அதிகாரத்தை கோரி நிற்பது, இந்த பரிமாற்றத்தை கோரிநிற்பது வெறுமனே ஒரு அரசாங்க மாற்றத்திற்காகவோ அல்லது ஆட்களின் மாற்றங்களுக்காகவோ அல்ல. இதோ இந்த நாட்டை வளமாக்குகின்ற சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார்.
நிகழ்கால உலகத்தை நாங்கள் எடுத்துக்கொண்டால் ஒரு காலகட்டத்திலே உலகத்தை ஆதிக்கம் செலுத்தியவர்கள் மிகுந்த கடற்பலத்தை கொண்டிருந்தவர்கள் ஆவர். அடுத்ததாக மிக அதிகமான ஆயுதப் பலம் பொருந்தியவர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அடுத்ததாக எங்களுக்கு ஞாபகத்தில் இருக்கின்ற காலகட்டத்திலே அதிகமான பண பலம் படைத்தவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். ஐக்கிய அமெரிக்காவின் வோல் ஸ்ட்றீட். ஆனால் நாங்கள் நம்புகிறோம் எதிர்கால உலகத்தில் ஆதிக்கம் செலுத்துவது மிக அதிகமான தொழில்நுட்ப பலத்தை கொண்ட நடாகும். அதுதான் எதிர்கால உலகத்தை ஆளப்போகின்றது. உங்களுக்கு நான் ஒரு உதாரணத்தைக் கூறினால், டெஸ்லா மொடல்-3 எனும் காருக்கான மூலப்பொருட்களுக்கும் வழங்குபவர்களுக்கும் அதன் மொத்தப் பெறுமதியில் 4.5 வீதம் செல்கிறது. அந்த இரண்டையும் வழங்குபவர்களுக்கு சந்தையில் நூற்றுக்கு 25 வீதம் செல்கிறது. டெஸ்லா கம்பனியின் வருமானம் பெறுமதியில் நூற்றுக்கு 27 வீதமாகும். அதன் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பம் காரணமாக சந்தை பெறுமதியில் நூற்றுக்கு 27 வீதம் கிடைக்கிறது. எப்பள் போனின் சந்தை விலையில் நூற்றுக்கு 54 வீதம் அதன் நிர்மாணிப்பிற்கும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்குமே கிடைக்கிறது. அப்படியானால் உலகம் எங்கே இருக்கிறது. நாங்கள் எந்த அளவுக்கு உலகிலே விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியைக் கைப்பற்றிக்கொண்டு புத்தாக்கங்களைச் செய்ய நாங்கள் தாயரா என்கின்ற காரணியிலேயே எங்களுடைய முன்னேற்றம் தங்கியிருக்கிறது. நாங்கள் மின்சார கார் உற்பத்தி செய்வதில் தள்ளப்பட வேண்டுமென நான் கூறப் போவதில்லை. நாங்கள் மிகவும் பின்னாலேயே இருக்கிறோம் எனவே எங்களால் இப்போது அந்தப் போட்டியில் பிரவேசிக்க முடியாது. வேகமாகச் சென்று செலியூலர் ஃபோன் சந்தையை கைப்பற்ற வேண்டுமென்று நினைத்தால் எங்களால் அது முடியாது. நாங்கள் ஏற்கெனவே தாமதித்துவிட்டோம். தென்கொரியா சிறிய கையடக்க தொலைபேசி வந்தபோதிலே அதை உற்பத்தி செய்தார்கள். ஸ்மார்ட் ஃபோன் வரும்போது அதை உற்பத்தி செய்தார்கள். இப்போது எங்களால் முடியாது. எனவே, நாங்கள் புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை தெரிவு செய்ய வேண்டும். எந்தத் துறையில் எங்களுடைய பொருளாதாரம் புத்தாக்கங்களுக்குச் செல்லவேண்டும் என்ற விடயங்களை அறிந்து கட்டாயமாக நாங்கள் அந்த இடத்திற்கு செல்லவேண்டும். எனவே, நாங்கள் அண்மையில் எங்களுடைய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான கொள்கையை முன்வைத்து ஒரு சில துறைகளை இணங்கண்டோம். குறிப்பாக எமது நாட்டில் ஆயுர்வேதத் துறையில் விருத்தி செய்வதற்கான வாய்ப்பு வசதி எமக்கு இருக்கின்றது. எமது சுற்றுலாத்துறை ஊடாக எங்களால் முன்னேறிச் செல்ல முடியும். எமது கனிம வளங்கள் ஊடாக எங்களால் அபிவிருத்திப் பாதையில் செல்ல முடியும். ஆனால், அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான செலவினை ஏற்க நேரிடும். விஞ்ஞானிகளைத் தேடிக்கொள்ள வேண்டும். அது எங்களுடைய பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கான ஒரு பாதையாகும். உலகச் சந்தையில் ஒரு பங்கினை கைப்பற்றிக் கொள்வதற்கான ஒரு துறைதான் இந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையாகும்.
எமது நாட்டில் இயற்கை இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன. அதில் முதலாவது விடயம்தான் எமது நாட்டின் இடஅமைவு. அது மிக முக்கியமான இடஅமைவாகும். இந்த இடஅமைவுடன் எங்களுடைய கப்பற் தொழிற்றுறையை இணைக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்குத் தெரியும், கொழும்புத் துறைமுகம் உலகில் 25 வது இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுகம் 34 ஆவது இடத்தை வகிக்கிறது. நாங்கள் 12 பில்லியன் டொலர் ஏற்றுமதி செய்கிறோம். 20 பில்லியன் டொலரை இறக்குமதி செய்கிறோம். ஆனால், எங்களுடைய துறைமுகம் 25 ஆவது இடம். இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் உலகில் 34 ஆவது இடத்தை வகிக்கிறது. எனவே, கப்பற் பயணத்துறையிலே மிகச் சிறந்த கேந்திரநிலையமாக மாறுவற்கான சாத்தியவளம் எமக்கு இருக்கிறது. அதுமாத்திரமல்ல, இலங்கையை கப்பலுக்கு அவசியமான சேவைகளை வழங்குகின்ற கேந்திர நிலையமாக மாற்ற வேண்டும். கப்பல்களுக்கு அவசியமான பணியாளர்களை உருவாக்குகின்ற இடமாக இலங்கையை மாற்ற முடியும். எனவே, நாங்கள் எங்களுடைய கொள்கையிலே மெராயன் இன்டஸ்ட்ரீ பற்றி விசேடமாக குறிப்பிட்டு இருக்கின்றோம். எனவே, எங்களுடைய இடஅமைவை அடிப்படையாகக் கொண்டு இலங்கையை எவ்வாறு வளமான நாடாக மாற்றுவது என்பதை நாங்கள் கூறியிருக்கிறோம்.
மூன்றாவது விடயம், எப்பாவலையில் உள்ள பொஸ்பேட் படிவுகள். நாங்கள் எங்களுடைய கனிம வளங்களை மூலப்பொருட்களாகவே பல வருடங்களாக ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆனால், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் பாவனையூடாக அவற்றை பெறுமதி மிக்க வளங்களாக மாற்ற முடியும். அதோ அந்த இடத்திற்கு நாங்கள் விஞ்ஞானத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டு செல்ல வேண்டும். நான் இலங்கையின் ஒரு பிரதான தொழில் முயற்சியாளருடன் கலந்துரையாடினேன். அவர் அதற்குத் தயார் எனவும் எம்மிடம் கூறினார். புல்மோட்டையில் கனிய மணல் படிவு இருக்கிறது. அது ஒரு வருடத்தில் இலட்சக்கணக்கான டொன்கள் அலையோடு அடித்து வந்து கரையோரத்தில் குவிக்கப்படுகிறது. ஆனால், எங்களிடம் இருப்பதோ ஆரம்ப மட்ட பகுப்புத் தொழில்நுட்பம் மாத்திரமே. நாங்கள் இவற்றை ஆரம்ப மூலப்பொருளாகவே ஏற்றுமதி செய்கிறோம். இயந்திரம் பழுதாகிவிட்டது எனக் கூறுகிறார்கள். அதனால், தேவையான அளவில் மணல் பகுக்கப்படுவது இல்லை. கடல் அலை மூலமாக கரை சேர்க்கப்படுகின்றது. ஆனால், களஞ்சியப்படுத்துவதற்கு இடமில்லை. அதனால், மணலை விற்போம் எனக் கூறி அப்படியே விற்பனை செய்கிறார்கள். எனவே, அங்கேயும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வளம் இருக்கிறது. ஆகவே, இந்த நாட்டை வளம்கொழிக்கும் நாடாக மாற்ற எங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை நாங்கள் எவ்வாறு பாவிக்கப் போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்.
அடுத்ததாக, எமது நாட்டை வளம்படுத்த எங்களிடம் மனித வளம் இருக்கிறது. என்னதான் கூறினாலும் எங்களிடம் எண்ணெய் கிடையாது. கேஸ் கிடையாது. தங்க வயல்கள் கிடையாது. துத்தநாகப் படிவு கிடையாது. நிலக்கரி படிவுகள் கிடையாது. இப்போதைய நிலை இதுதான். எனவே, எங்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய வளம் மனித வளம் என நாங்கள் நினைக்கிறோம். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பொருளாதாரம், 253 பில்லியன் டொலர்களாகும். சிங்கப்பூர் 233 பில்லியன் டொலரை ஈட்டுகிறது. ஏனைய பெரும்பாலான பொருட்களில் மிக அதிகமான பெறுமதி மூலப்பொருட்களிலேயே இருக்கிறது. ஆனால், IT உற்பத்தி மிகப்பெரிய பெறுமதி இருப்பது மூலப்பொருட்களில் அல்ல. அறிவில்தான். அறிவு, விவேகம், கண்டுபிடிப்பு என்பவற்றில்தான். எனவே, ஐ IT மென்பொருள் முறையொன்றை உற்பத்தி செய்வதும், அந்த மென்பொருள் முறைமையின் மிகப் பெரிய பங்கு மனிதனின் பங்காகும். ஆனால், வேறொரு பொருளை எடுத்துக்கொண்டால் மூலப்பொருள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மனித வளம் காரணமாகவே இந்தியாவால் 253 பில்லியன் டொலர் வருமானத்தை பெற முடிகிறது. எங்களுடைய அளவு 1.2 பில்லியன் டொலர்களாகும். இங்கு முழுமையாகவே மனித வளத்திலேயே தங்கியிருக்கிறது. எனவே, இந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறுவதற்கான சாத்திய வளம் எமக்கேயிருக்கிறது. குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறுவதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். அதாவது, எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இலங்கை IT தொழிற்றுறையில் இருந்து 5 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற முடியும்.
அதைப்போலவே, உலகில் இருப்பது பண்டங்கள் சந்தை மாத்திரம் அல்ல. உழைப்புச் சந்தையும் இருக்கிறது. நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யதார்த்தம் அதுதான். எனினும், உலகில் பண்டங்கள் சந்தையும் நிலவுகிறது. உழைப்புச் சந்தையும் நிலவுகின்றது. ஆனால், நாங்கள் உலகில் கைப்பற்றிக் கொண்டிருப்பது ஆரம்ப நிலை உழைப்பைதான். 2017 ஆம் ஆண்டில் வெளிநாடு சென்றவர்கள் பற்றிய ஒரு ஆவணம் எம்மிடம் இருக்கின்றது. 3 இலட்சத்து மூவாயிரம் பேர் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். அதில் ஆறாயிரம் பேர்தான் தொழில்சார் உழைப்பாளிகளாக சென்றிருக்கிறார்கள். 2 இலட்சத்து 97 ஆயிரம் பேர் பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத, பகுதியளவில் பயிற்றப்பட்ட தொழில்களுக்காகவே சென்றிருக்கிறார்கள். வீட்டுப்பணிப்பெண்கள் இல்லையென்றால், சிறுவர் பராமரிப்பு, சமைப்பதற்காக, இல்லையென்றால், புற்தரைகளை அமைப்பவர்கள் போன்ற குறைந்த சம்பளம் பெறுகின்ற தொழில்களுக்காகவே சென்றிருக்கிறார்கள். எனவே, நாங்கள் எங்களுடைய கல்வியை மாற்றியமைக்க வேண்டும். முன்னேற்றமடைந்த உழைப்புச் சந்தையின் ஒரு பங்கினை நாங்கள் கைப்பற்றிக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள புள்ளிவிபரங்களின்படி, இப்போது உலகில் 26 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் இருக்கிறார்கள். 2030 ஆம் ஆண்டளவில் 45 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் தேவைப்படுவார்கள் என எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 5 அல்லது 6 வருடங்களுக்குள் புதிதாக 190 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்கள் உலகிற்குத் தேவை. நாங்கள் எத்தனை பேரை உருவாக்குவோம்? இங்கேயிருக்கின்ற பௌதீக வளங்கள், மனித வளங்கள், ஆசிரியர்கள் எல்லாவற்றிலும் எடுத்துக்கொண்டால் நாங்கள் ஒரு சிறிய இலக்கினை அமைத்திருக்கிறோம். அது 2 இலட்சம் ஆகும். ஏனென்றால், அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் எங்களுக்குத் தேவை. ஆனால், 2030 இல் உலகிற்கு 190 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். நாங்கள் அத்தகைய முன்னேற்றமடைந்த உழைப்புச் சந்தையின் ஒரு பகுதியை கையகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது எமது நாட்டை செல்வந்த நாடாக மாற்றும்.
அடுத்ததாக எங்களுடைய சுற்றுலா கைத்தொழில். மிகச் சிறந்த சாத்திய வளம் அதிலே நிலவுகின்றது. எங்களால் 8 பில்லியன் டொலர் பொருளாதாரத்திற்கு செல்ல முடியும். அதற்காக 4 மில்லியன் சிறந்த உல்லாச பயணிகளை நாங்கள் கொண்டுவர வேண்டும். 2018 இல் மிக அதிகமான உல்லாச பயணிகளாக 2.3 மில்லியன் பேர் வந்திருக்கிறார்கள். அந்த வருடத்திலேயே எங்களுடைய வருமானம் 4.3 பில்லியன் டொலர்களாகும். நாங்கள் இந்த 4 பில்லியனுக்கு 4 இலட்சம் பேரை இலக்காக கொண்டிருக்கிறோம். அதனை நாங்கள் சாதித்தால் எங்களுக்கு அதில் 8 பில்லியன் டொலர் இலக்கு அமையும்.
எனவே, நான் உங்களுக்கு கூறுவது இவையெதுவுமே எனது கண்டுப்பிடிப்புகள் அல்ல. என்னுடைய இலக்குகளும் அல்ல. நாங்கள் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அந்தந்த துறைகளை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடி இதற்கான வேலைத்திட்டமொன்றை அமைத்திருக்கிறோம். எங்களுடைய நாட்டை எந்த இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். உண்மையிலேயே எங்களுடைய நாடு ஒரு இலக்கற்ற நாடு. நோக்கமொன்று இல்லாத நாடு. தொழிற்பாடு இல்லாத நாடு. ஏதோவொரு புயலில் சிக்கிக்கொண்ட இன்னமும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்ற மயக்கமுற்று விழுந்தவர்கள் போல் மிதந்துகொண்டிருக்கிறோம். எவரையாவது தற்காலிகமாக எடுத்துக்கொள்கிறோம். கையை நிரப்பிக் கொள்கிறோம். வீடுகளுக்குப் போகிறோம். மீண்டும் எவராவது வருவார்கள். இது கரைசேர வேண்டுமா? இதிலுள்ள மக்களை பாதுகாக்க வேண்டுமா? அதுபற்றிய எந்தவிதமான தேவையும் கிடையாது. ஒரு மோட்டார் வாகனம் என வைத்துக்கொள்வோமே. சில காலத்துக்காசேர்வார்கள். வாரிச் சுருட்டிக்கொள்வார்கள். மாற்றிக்கொள்கிறார்கள். எனவே, இது மிதந்து சென்றுக்கொண்டிருக்கின்ற ஒரு நாடாகும். நாங்கள் இலக்கினை அமைத்திருக்கிறோம். அந்த இலக்கினை அமைத்துக் கொள்வதற்காக அந்தந்த துறைகளைச் சேர்ந்தவர்களுடன் நீண்டகாலம் கலந்துரையாடி இருக்கிறோம். ஆகவே, எங்களுடைய நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய ஒத்துழைப்பு அப்படி இல்லாமல் சுற்றுலாத்துறையின் இலக்கினை நிறைவு செய்வதற்காக அரசாங்கம் சுற்றுலாத் துறை ஹோட்டல்களை அமைப்பதற்காக வரப்போவதில்லை. கனிம வளங்களிலான இலக்கினை அடைவதற்காக அரசாங்கம் கைத்தொழில்களை ஆரம்பிக்க வரமாட்டாது. நாங்கள் அந்த இடங்களுக்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்போம். நாங்கள் முதலில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கே முன்னுரிமை வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் சில வேளைகளில் எங்களிடம் தொழில்நுட்பம் கிடையாதென்பதால் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். துறைசார்ந்த தொழில்நுட்பம் எங்களிடம் இல்லாவிட்டால் அந்த தொழில்நுட்பத்துடனான முதலீட்டாளர்களை வரவழைக்க வேண்டும். இந்தியாவை பாருங்கள். இந்தியாவில் பெருமளவிலான மோட்டார் வாகன தொழில்நுட்பம் இருக்கவில்லை. அவர்கள் ஜப்பானின் ஹொண்டா கம்பனிக்கு அழைப்பு விடுத்து இந்தியாவின் ஹீரோ கம்பனியுடன் ஒன்றுசேர்ந்து ஹீரோஹொண்டாவை உருவாக்கினார்கள். லேலண்ட் கம்பனியை வரவழைத்து இந்தியாவின் அசோக் கம்பனியுடன் ஒன்றுசேருமாறு கூறி அசோக் லேலண்ட் கம்பனியை அமைத்தார்கள். அவர்கள் வெளியில் இருந்த தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்காக முதலீட்டாளர்களை வரவழைத்தார்கள். இன்று மின்சார கார்களை உற்பத்தி செய்கின்ற இந்தியாவாக மாறியிருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் இருக்கவில்லை. எனவே, நாங்கள் தொழில்நுட்பத்துக்கான முதலீட்டாளர்களை அழைப்பிக்கத் தயார். அடுத்ததாக எங்களிடம் ஒருசில துறைகள் இருக்கின்றன. அத்தகைய பாரிய முதலீடுகளை செய்யுமளவிற்கு திறைசேரியிடம் பணம் கிடையாது. அப்படியில்லாவிட்டால் எங்களுடைய உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் இருக்கின்ற பணம் போதாது. அதோ அந்த மூலதனத்திற்கான முதலீடுகளை அழைப்பிக்க வேண்டும். நான் ஒரு உதாரணத்தை கூறுகிறேன். இப்பொழுது நாங்கள் காற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான 40 கிகா வோட்டுக்கு மேற்பட்ட கொள்ளவினைக் கொண்ட மின் நிலயங்களை எம்மால் அமைக்க முடியும். ஆனால், இன்று எமது நாட்டின் மொத்த கொள்ளளவு 4 கிகா வோட் ஆகும். 2040 இல் எங்களுக்கு 8 கிகா வோட் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களிடம் காற்றிலிருந்து மாத்திரம் 40 கிகா வொட் இருக்கிறது. என்ன செய்வது, என்றாவது ஒரு நாள் இது 40 கிகா வொட்டாக மாறும் வரை நாங்கள் வைத்துக்கொண்டு இருப்பதா? எங்களால் அப்படி வைத்துக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், காற்று வீசிக்கொண்டே இருக்கும். பொஸ்பேட் படிவுகளை எங்களால் வைத்துக்கொண்டிருக்க முடியும். ஆனால், வீசும் காற்றை எங்களால் தடுத்து நிறுத்த முடியாதே. இப்போது உலகில் எதிர்வுகூறப்பட்டுள்ளது, 2030 ஆம் ஆண்டளவில் உயிர்ச்சுவட்டு எரிபொருளுக்கான கேள்வி உச்சமட்டத்தை அடையுமென்று. நிலக்கரி, மசகு எண்ணெய் இவற்றுக்கான கேள்வி உச்சத்தை அடையும். 2030 இன் பின்னர் இந்த உயிர்ச்சுவட்டு எரிபொருளுக்கான கேள்வி குறைவடையத் தொடங்கும். 2050 ஆம் ஆண்டளவில் உலகின் ஒட்டுமொத்த வலுச்சக்தி தேவையில் நூற்றுக்கு 65 இற்கும் 85 இற்கும் இடைப்பட்ட அளவு புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலமாகவே பிறப்பிக்கப்படும் என தற்போது கணிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்திலே எங்களிடம் ஒரு சாத்திய வளம் நிலவுகிறது. நாங்கள் அந்த இடத்தில் முதலீடு செய்ய தயார். அதானி போல் முடியாது. ஆனால், அதானி போன்றவர்களும் உரிய டெண்டர் நடைமுறைகளை கடைபிடித்தால் மாத்திரம் வரலாம். நாங்கள் அதானியுடன் 450 மெகா வொட்டுக்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டு இருக்கின்றோம். அதானி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார். நாங்கள் கொள்வனவு செய்கிறோம். இதை பவர் பேர்ச்சசிங் எனக் கூறுகிறோம். அதானி எங்களுக்கு ஒரு யுனிட்டை 8.22 சதம் டொலருக்கு கொடுக்கிறார். 50 மெகா வொட்டுக்கு டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. டெண்டர் கோரியதும் டெண்டர் வந்தது. வின்ட் ஃபோர்ஸ் எனும் கம்பனி 4.88 சதம் டொலருக்கு வந்தது. 50 மெகா வொட்டை உற்பத்தி செய்ய கிரயம் அதிகரிக்க வேண்டுமே. நாங்கள் டெண்டர் கோருவதன் மூலம் இங்கு முதலீடு செய்ய தயார். எங்களிடம் பாரிய முதலீட்டினை செய்யுமளவிற்கு மூலதனம் கிடையாது அதனால், நாங்கள் முதலீடுகளை கோருகிறோம்.
மூன்றாவது விடயம், ஒரு சில முதலீடுகளை கொண்டுவர வேண்டும். தற்போதைய உலகச் சந்தை ஞாயிற்றுக் கிழமை சந்தையைப் போல் அல்ல. நாங்கள் தயாரிக்கிறோம். கொண்டுபோய் விற்கிறோம். அப்படியல்ல. இப்போது உலகச் சந்தை ஒரு சங்கிலித் தொடர் போன்றது. சிலவேளை நாங்கள் பண்டங்களை உற்பத்தி செய்தாலும் அந்த சந்தைக்குச் செல்ல முடியாது. எனவே, ஒரு சில முதலீடுகளை நாங்கள் வரவழைக்கத் தயார். உலகச் சந்தையிலே அவர்கள் ஒரு பங்கினை கைப்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இங்கே சந்தைப் பங்கினையும் எடுத்துக்கொண்டு முதலீடு செய்ய வருவார்கள். 1978 இல் இருந்து 44 வருடங்களாக இலங்கைக்கான நேரடியான வெளிநாட்டு முதலீடு 22 பில்லியன் டொலர்கள் தான். வியட்நாமுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 23 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடு கிடைத்திருக்கிறது. இதனை வேறுவிதமாக கூறுவதானால் இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடு வரவேயில்லை. வரமாட்டாது. அதற்கான காரணம் என்ன? ஊழல். வினைத்திறமையீனம், பாதுகாப்பின்மை, உறுதியற்ற நிலை இவை காரணமாக முதலீடுகள் வருவதில்லை. நாங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவருக்கும் வெளியில் வைத்தும் கூறுகிறோம், உள்ளே வைத்தும் கூறுகிறோம், கலந்துரையாடலின்போதும் கூறுகிறோம். எங்களுக்கு உங்களிடம் இருந்து ஒரு குண்டூசி கூட தேவையில்லை. ஒரு கிளாஸ் பச்சைத்தண்ணி கூட தேவையில்லை. நாங்கள் அளவிடுவது நாட்டுக்கு நன்மை விளையுமா இல்லையா என்பதுதான். மக்களுக்கு நல்லதா? இல்லையா? அது எங்களுடைய அளவுகோல். ஆனால், இதுவரை காலமும் எமது நாட்டில் முதலீட்டாளர்களை வரவழைத்துக் கொள்வதற்கான அளவுகோலாக அமைந்தது அமைச்சருக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பது தான். அதற்கு தேவையான அளவு உதாரணங்களை கூறலாம். எயார் போர்ட் கருத்திட்டத்தை தாய்சி கைவிட்டுச் செல்வதற்கான காரணம் அதுதான். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கருத்திட்டத்திடம் இருந்து நிமல் சிறிபால டி சில்வா பகா கேட்டார். அதனால்தான் பெயரைக் கூறினேன். பகா கேட்டார் என்பதை அறிந்துகொண்ட கோட்டா அவரை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கினார். ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதே அமைச்சுப் பதவியைக் கொடுத்தார். எந்த பரிசுத்தமான முதலீட்டாளன் வரப்போகிறான். வரமாட்டான். எனவே, நாங்கள் முதலீட்டாளர்களை வரவழைக்கத் தயார். அது எமது நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே. எங்களிடம் மிகப்பெரிய திட்டங்கள் இருக்கின்றன. நாங்கள் நாட்டை கட்டியெழுப்பி நாட்டை வளமுடையதாக்கும் வரை மக்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே, மக்களுக்கான மானிய வேலைத்திட்டங்களையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். நாட்டை சீராக்கும்வரை பட்டினியாக இருக்கும்படி மக்களை கேட்க முடியாதே. எனவே, அதற்கான மானிய வேலைத்திட்டமொன்றும் எம்மிடம் இருக்கின்றது.
ஆனால், இவை எல்லாவற்றையும் எம்மால் எப்படி சாதிக்க முடியும்? எல்லாவற்றையும் முகாமைத்துவம் செய்ய, வளங்களை முறையாக பயன்படுத்த, உரிய இடத்தில் தமது பணியைச் செய்ய பலம் பொருந்திய முன்னேற்றமடைந்த மனித வளம் இலங்கைக்கு அவசியமாகும். பொசுபேட் படிவு இருந்துவிட்டால் மாத்திரம் பலனில்லை. அதனை முகாமைத்துவம் செய்வதற்கான மனித வளம் தேவை. நாட்டைப் போல் 8 மடங்கு பெருங்கடல் இருந்தாலும் பலனில்லை, அதனை முகாமைத்துவம் செய்வதற்கான மனித வளம் இல்லாவிட்டால்.
அடுத்ததாக நாங்கள் எதிர்நோக்குகின்ற சவால் இந்த திட்டங்கள் எல்லாவற்றையும் வகுத்தாலும் அவற்றை யதார்த்தமானதாக்குவதற்கான கொள்திறனை கொண்ட மனித வளம் எமக்கு அவசியமாகும். சொல்வதற்கு கவலைப்படுகிறேன். நான் அமைச்சுப் பதவி வகித்த காலத்தில் ஒரு சில துறைகளுக்கு ஒரு மனிதனைத் தேடிக்கொள்வது எங்களுக்கு மிகவும் சிரமமானதாக அமைந்தது. நாங்கள் எங்களுடைய கொள்கைப் பிரகடனத்திலே தெளிவாகக் கூறியிருக்கிறோம், உயர் தரத்தில் சித்தியடைகின்ற மாணவர்களை வருடத்திற்கு குறைந்தபட்சம் 200 பேரையாவது அரசாங்கத்தின் செலவில் உலகத்தில் உள்ள முன்னேற்றமடைந்த பல்கலைக்கழகங்களிற்கு புதிய அறிவினையும் ஆற்றல்களையும் எடுத்துக்கொண்டு வருமாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்போம். நாங்கள் இந்த புதிய அறிவு ஆற்றல் பற்றி டெலிகொம் உடன் உரையாடினோம். ஏனென்றால், டெலிகொம் விற்பனை செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். டெலிகொம் என்பது IT தொழிற்றுறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற நிறுவனமாகும். ஆனால், அங்குள்ள பொறியியலாளர்கள் எம்மிடம் கூறினார்கள், டெலிகொம் என்பது ஒரு உயர் தொழில்நுட்ப கைத்தொழிலாகும். இதனை முகாமைத்துவம் செய்வதற்கான கொள்திறன் எமக்குப் போதாது. அதனால், நாங்கள் சில வேளைகளில் வெளிநாட்டுக் கம்பனியொன்றை டெலிகொம்மை முகாமை செய்வதற்காக வரவழைக்க வேண்டி வரும். ஏனென்றால், அது உயர் தொழில்நுட்பத்தை கோரி நிற்கிறது. அடிக்கடி மாறிவருகின்ற ஒரு தொழிற்றுறை ஆகும். அப்படியானால் எங்களிடம் என்ன இருக்க வேண்டும்? இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான முன்னேற்றமடைந்த மனித வளம் தேவை. அதுதான் வேறு நாடுகளில் அழைப்பித்துக் கொள்கிறார்கள். எனக்கு இந்த IT துறையைச் சேர்ந்த ஒருவர் கூறினார், ஒரு மருத்துவரை உருவாக்குவதற்கான செலவு 5 மில்லியன் டொலர் என. அதாவது, எங்களுடைய வளி, இயற்கை வளங்கள், வீதிகள், உணவு எல்லாவற்றையும் சேர்த்தால் அந்த செலவு ஆகின்றது எனக் கூறினார். என்ன செய்கிறார்கள், அவர்களை மாதச் சம்பளத்திற்கு எடுக்கிறார்கள். அந்த நாடுகள் என்ன செய்கின்றன, அவர்களுக்கும் இந்த சவாலை வென்றெடுப்பதற்கான முன்னேற்றமடைந்த மனித வளம் தேவை. அவர்கள் இந்த முன்னேற்றமடைந்த மனித வளத்தை மாதச் சம்பளத்திற்கு, வாடகைக்கு எடுப்பதில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கியெடுப்பதில்லை. வாடகைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். எமது அரசாங்கம் அனுப்புதவற்கு தயாராக இருக்கிறது. அதுதானே இடம்பெறுகிறது. தற்போது, வங்கி முறைமைக்கும் அந்த கதியல்லவா நேர்ந்துள்ளது. பின்னர் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் கைவிட்டுச் சென்றார்கள். IT தொழிற்றுறையில் பெருந்தொகையானோர் பயிற்சி முடிந்ததுமே போய்விடுகிறார்கள். எமது நாட்டின் ஊழியர் படையில் நூற்றுக்கு 15 வீதம் தான் தொழில்வாண்மையாளர்களாக இருக்கிறார்கள். எனவே, இந்த 15 வீதத்தை பாதுகாத்துக் கொள்ளா விட்டால் எஞ்சிய 85 வீதமும் பலனற்றுப் போய்விடும். எனவே, அதுதொடர்பில் நாங்கள் முக்கிய கவனம் செலுத்துவோம்.
இப்பொழுது உங்களுடைய சம்பளத்தில் இருந்து உழைக்கும் போதே செலுத்துகின்ற வரியை ஒரு இலட்சம் ரூபாய் எல்லையில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாய் எல்லை வரை அதிகரிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதைப்போலவே நூற்றுக்கு 36 வீதம் என்கின்ற எல்லைக்கு விரைவில் வருவோம். நாங்கள் நூற்றுக்கு 36 என்பதை நீக்க மாட்டோம். ஆனால், சம்பளம் மிகவும் அதிகமானதாக அமையும்போதான் நாங்கள் அந்த எல்லைக்கு வருவோம். இப்பொழுது 3 இலட்சத்து 8 ஆயிரம் எனும் சம்பளத்தில்தான் 36 வீதம் என்ற எல்லைக்கு வருகிறது. அதில் ஒரு இலட்சம் அதிகரித்தால் எல்லை 4 இலட்சத்து 8 ஆயிரமாக அமையும். நாங்கள் கணிப்பிட்டு இருக்கிறோம், இப்பொழுது எங்களுக்கு அதிலிருந்து 160 பில்லியன் ரூபா வரை கிடைக்கின்றது. அதில் 54 பில்லியன் ரூபா குறைவடையும். அந்த குறைவடைகின்ற தொகையை ஈட்டிக்கொள்ளவும் எங்களிடம் திட்டமொன்று இருக்கிறது. ஆனால், அது ரணில் விக்ரமசிங்கவின் 25,000 ரூபா சம்பள அதிகரிப்பை விட குறைவானதே. ஏனென்றால், அவர் அடிப்படை சம்பளத்தில் 25,000 ரூபாவால் அதிகரிக்க போகிறார். அப்படி பார்த்தால் ஒரு மாதத்திற்கு 37 பில்லியன் ரூபா செலவு அதிகரிக்கும். எனவே, 12 வருடத்திற்கு 400 பில்லியன் ரூபாவை விஞ்சும். எனவே, விருத்தி செய்யப்பட்ட எங்களுடைய மனித வளத்தை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பாகும். இதை அரசாங்கம், நீங்கள், தொழில்முயற்சியாளர்கள் எல்லோருமே ஒன்றுசேர்ந்துதான் சாதிக்க முடியும். பரந்துள்ள நார்களை ஒன்றுசேர்த்து பலம் வாய்ந்த கயிற்றினை உருவாக்குது போல் எமது நாட்டை மிகவும் குறுகிய காலத்தில் செல்வம் மிக்க நாடாக மாற்ற முடியும். நாடு வளமடைந்தால் அரசாங்கமும் வளமடையும். வெளியில் ஈட்டுகின்ற வருமானத்தில் இருந்து ஒரு நியாயமான பகுதியை அரசாங்கம் வரியாக அறவிடும். வரியை அறவிடுவது மாத்திரமல்ல, இரண்டு மூன்று வருடங்களாகும் போது நீங்கள் செலுத்திய வரி எவ்வாறு செலவிடப்பட்டது என்ற விபரத்தை ஆண்டின் இறுதியில் உங்களுடைய மொபைல் ஃபோனுக்கு அனுப்பி வைப்போம். உங்களிடம் இருந்து பெறப்பட்ட மாதாந்த வரியில் இருந்து கல்விக்காக இவ்வளவு, சுகாதாரத்திற்காக இவ்வளவு, பாதுகாப்புக்காக இவ்வளவு என்ற விபரங்கள் மூலம் நீங்கள் செலுத்திய வரிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். வரி செலுத்துபவருக்கு தான் செலுத்திய வரிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான நியாயமான உரிமை இருக்கின்றது. அப்போது எவருமே வரி செலுத்துவதை தவறவிட மாட்டார்கள். எனவே, செலுத்துகின்ற வரிக்கு என்ன நடக்கின்றது என தெரியாததன் காரணமாகவே வரி செலுத்துவதை தவிர்த்து வருகிறார்கள். நீங்கள் செலுத்துகின்ற ஒவ்வொரு சதத்தையும் கோயில் சொத்து போல பராமரித்து பாதுகாப்போம்.
எனவே, இந்த மாற்றம் எங்களுக்கு தேவை எனக் கருதுகிறோம். அந்த மாற்றத்திற்காகத்தான் எதிர்வரும் 21 ஆம் திகதி நாங்கள் வாக்களிக்கப் போகிறோம். இது வெறுமனே ஒரு தலைமையை மாற்றுவது மாத்திரமல்ல, இதுவொரு சவால். ஆனால், கட்டம் கட்டமாக இந்த சவாலை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக 21 ஆம் திகதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த மாற்றத்திற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அயராது உழைப்போம். நன்றி!