உள்நாடு

மத்திய கொழும்பு ஐ.தே.க வின் கோட்டை; மத்திய கொழும்பை ஐ.தே.க நிச்சயம் வெல்லும் – இப்படிக் கூறுகிறார் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா

“மத்திய கொழும்பு என்பது, ஐ.தே.க. வின் கோட்டை. மத்திய கொழும்பை வெல்ல வைப்பது, கொழும்பு வாழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது ” என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஐ.தே.க. வின் மத்திய கொழும்பு தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம், கொழும்பு பெரிய பள்ளிவாசலில், ஐ.தே.க. சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில், இன்று (24) சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பைஸர் முஸ்தபா இவ்வாறு கூறினார். அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனவாதமற்ற ஒரு சிறந்த தலைவர். எல்லா மக்களையும் இன மத பேதமின்றி அரவணைத்துச் செல்லும் ஆளுமையுடையவர்.

பொருளாதார நெருக்கடியில் நாடு அதள பாதாளத்தில் வீழ்ந்து இருந்தபோது, இந்நாட்டை தைரியமாக முன்னின்று பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாபெரும் வீரராகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் குறிப்பிடலாம். நாட்டு மக்களையும் வறுமைக் கோட்டிலிருந்தும் இரண்டு வருடங்களுக்குள் படிப்படியாக மீட்டெடுத்த பெருமையும் இவரையே சாரும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சாதுரியம் மிக்க, உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த முதுகெலும்புள்ள தலைவர். இவ்வாறான ஒரு தலைவரை, மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்வதில் தவறில்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. இத்தேர்தலை மக்கள் தீர்மானமிக்கதாகக் கருதி, ஜனாதிபதியின் கரங்களை மக்கள் ஆணையுடன் பலப்படுத்த வேண்டும்.

ஐ.தே.க., மத்திய கொழும்பின் கோட்டையாக இருப்பதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவது திண்ணம். இந்நிலையில், மத்திய கொழும்பு வாழ் மக்கள் தமது வாக்குப் பலத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணையை வழங்கி, அவரை மீண்டும் ஜனாதிபதி அரியணையில் அமர்த்த முன்வர வேண்டும்” என்றார்.

இதன்போது, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வும் கருத்துரை வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி, முன்னாள் கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் முஹம்மத் இக்பால் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.


( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *