உள்நாடு

பண்பாளர் டாக்டர்.இல்யாஸின் மறைவு வேதனை தருகிறது -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்..!

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர்.ஐதுருஸ் இல்யாஸ் திடீர் மறைவடைந்தமை,  நிலையற்ற உலக வாழ்க்கையை உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

டாக்டர்.ஐதுருஸ் இல்யாஸின் மறைவு குறித்து, அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

“முஸ்லிம் சமூக அரசியலில் புதுமையான அனுபவங்களைக்கொண்ட அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு, மிகக் குறைந்த வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரபின் பாசறையில் வளர்க்கப்பட்டதால், சிறந்த முன்னோடி அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டார்.

அரசியலைக் கடந்து தனிப்பட்ட ரீதியில் எனது நட்பு அவரிடம் நிலைத்தது. வட மாகாணத்திலிருந்து அரசியலுக்கு வந்திருந்த மர்ஹும் இல்யாஸ், முஸ்லிம் அரசியலில் நிலவும் சவால்களைத் தெரிந்திருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் நல்லுறவைக் கொண்டிருந்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிடவிருந்தார். எந்தக் கட்சியில் அரசியலை முன்னெடுத்தாலும் சமூக முனேற்றம் பற்றியே அவர் சிந்தித்ததுடன், அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.

அன்னாரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்! இழப்பைத் தாங்கும் மனதைரியத்தைக் கொடுக்கப் பிரார்த்திப்பதுடன், அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவும் துஆச் செய்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

(ஊடகப்பிரிவு- ரிஷாட் பதியுதீன் பா. உ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *