சட்ட விரோதமாக வைத்திய நிலையம் நடாத்திய ஆயுர்வேத வைத்தியர் கைது
சட்டவிரோதமாக மேற்கத்திய மருத்துவ நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற ஆயுர்வேத வைத்தியர் ஒருவரை அனுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் ஒயாமடுவ பொலிசாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் ரம்பாவ பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆயுர்வேத வைத்தியர் மகாவிலச்சிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட மானின்கமுவ பகுதியில் மேற்கத்திய சட்டவிரோத மருத்துவ மத்திய நிலையம் ஒன்றை நடத்திச்செல்வதாக பிரதேசவாசிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வைத்திய நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு அங்கு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வைத்திய நிலையம் சீல் வைக்கப்பட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாவிலச்சிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளரின் விளக்கவுரை க்குப் பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)