உள்நாடு

மன்னர் அப்துல் அஸீஸ் 44வது சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி

மாபெரும் பரிசளிப்புடன்
மக்காவில் நிறைவு

‘இரு புனித பள்ளிவாசல்களின் காவலரான
மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்
தமது பத்தாவது வயதுக்குள் அல் குர்ஆனை
முழுமையாக மனனம் செய்த ஒரு ஹாபிழாவார்’

‘சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் மாபெரும் பரிசுத் தொகையில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானியினதும் இந்தியப் பிராந்தியத்தின் சவுதி அரேபிய தூதரகத்தின் மத விவகாரங்களுக்கான பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் பின் நாசிர் அல் அனஸியினதும் நேரடி கண்காணிப்பில் இலங்கையிலும் முதல் தடவையாக 2023 இல் அல் குர்ஆன் மனனப் போட்டியை நடாத்திய போது இந்நாட்டின் பல ஹாபிழ்கள் ஒன்றரைக் கோடி ரூபாக்கும் மேற்பட்ட பெறுமதிமிக்க பணப் பரிசில்களை வென்றெடுத்தனர்’.

‘இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி
பங்குபற்றியவருக்கு ஆறுதல் பரிசு’

சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடாவருடம் நடாத்தப்படும் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இம்முறை 44 வது தடவையாவும் புனித மக்காவில் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இப்போட்டி நடாத்தப்பட்டது. போட்டியின் நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கு மிகப் பெறுமதியான பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பரிசளிப்பு விழா புனித மக்கா நகரில் கடந்த 21 ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் நேரடி கண்காணிப்பில் புனித மக்காவின் துணை கவர்னரும் இளவரசருமான ஸஊத் பின் மிஷ்அல் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் இஸ்லாமிய விவகார அழைப்பு மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் ஆகியோரின் தலைமையில் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை உட்பட உலகின் 123 நாடுகளில் இருந்து 174 ஹாபிழ்கள் (அல் குர்ஆனை மனனம் செய்தவர்கள்) இப்போட்டியில் பங்குபற்றினர். அவர்கள் அனைவருக்கும் இரு வழி விமான டிக்கட்டுகள், சகல வசதிகளுடனான தங்குமிட மற்றும் உணவு வசதிகள், போக்குவரத்து வசதிகள் அனைத்தும் சவுதி அரேபியாவினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன. அத்தோடு இப்போட்டியில் பங்குபற்றியவர்கள்  புனித உம்ரா கடமையை மேற்கொள்ளவும் சவுதியிலுள்ள புனித ஸ்தலங்களை தரிசிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டன. குறிப்பாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியில் தொழவும் முழு உலகுக்கும் அல் குர்ஆனை விநியோகித்து வரும் மறைந்த மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் பெயரிலான மதீனா அல் குர்ஆன் அச்சகத்தைப் பார்வையிடவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டன.

குறிப்பாக இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு மிகப் பெறுமதியான பணப்பரிசில்களும் வெற்றி பெறாத போட்டியாளர்களுக்கு பெறுமதியான ஆறுதல் பரிசில்களும் கூட வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இப்போட்டியில் வெற்றியீட்டிய ஹாபிழ்களின் அழகிய கிராஅத் ஓதல்களோடு பரிசளிப்பு விழா 21 ஆம் திகதி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து  இப்போட்டியின் நோக்கம்,  கடந்த 44 தடவைகள் இப்போட்டி நடாத்தப்பட்டமை, இப்போட்டி கடந்து வந்த பாதை, இதன் நிமித்தம் சவுதி ஆட்சியாளர்கள் அளித்துவரும் உதவிகள், ஒத்துழைப்புக்கள் என்பன தொடர்பில் இவவிழாவின் போது தெளிவுபடுத்தப்பட்டன.

குறிப்பாக மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும்  பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும்  இஸ்லாமிய விவகார அழைப்பு மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக்கும் சவுதி அரசாங்கமும் அளித்துவரும் உதவி, ஒத்துழைப்புக்கள் மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தும் காணொளிகள் போட்டியாளர்களும் பார்வையாளர்களும் பார்வையிடவென காண்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் விழாவுக்கு வருகை தந்த மக்காவின் துணை கவர்னரும் இளவரசருமான ஸஊத் பின் மிஷ்அல் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தையும் போட்டியில் வெற்றியீட்டியவர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்றார்.

இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக், ‘சவுதி அரேபியா அதன் அரசியல் யாப்பை அல் குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அமைத்திருப்பது குர்ஆனுக்கும் ஸூன்னாவுக்கும் சவுதி அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.  அத்தோடு உலகிலுள்ள அனைத்து ஹாபிழ்களையும் சவுதி கௌரவிப்பதும் யாவரும் அறிந்த விடயம். அந்த வகையில் தான் புனித மக்காவில் வருடாவருடம் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டிகளை சவுதி  நடாத்துகிறது. இத்தகைய போட்டிகளை உலகின் பல நாடுகளிலும்  கூட சவுதி அவ்வப்போது நடாத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

சவுதி அரேபிய அரசின் ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸின் பெயரிலான இப்போட்டி  இம்முறை 44வது தடவையாக நடாத்தப்படுகிறது. அன்று தொட்டு இன்று வரை அல் குர்ஆனுக்கும் அதை மனனமிட்டவர்களுக்கும் புனித மக்காவில் பாரிய கௌரவத்தை சவுதி அளித்துவருவதன் வெளிப்பாடே இதுவாகும். மக்காவில் நடைபெறும் இது போன்ற குர்ஆன் மனன சர்வதேச போட்டிகள், உலகின் அனைத்து நாடுகளிலும் அல் குர்ஆனை மனனம் செய்யக்கூடியவர்களை உருவாக்கி வருகிறது. அதனால் சவுதியில் தொடர்ந்தும் இப்போட்டி நடாத்தப்படுவது பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஆகவே இப்போட்டியில் பங்குகொண்டுள்ள அனைவரும் தத்தம் நாடுகளில் புனித அல்குர்ஆனை மனனம் செய்யவும் அதை விளங்கவும் அதன் பக்கம் மக்களை அழைக்கவும் உழைக்க வேண்டும்.

இந்த மறைந்த மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப்போட்டியானது, ஹிஜ்ரி 1399ஆம் ஆண்டில், அதாவது இற்றைக்கு 44 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையும் உலகின் பல நாடுகளில் இருந்தும் மொத்தம் 6970 ஹாபிழ்கள்  இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். அதேபோன்று அன்று முதல் இன்று வரை பல பில்லியன் ரியால்களை பணப்பரிசில்களாகவும் வழங்கி இருக்கிறது சவுதி.

அந்த வகையில்  இம்முறை இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு மிகப் பெருந்தொகைப் பரிசில்கள் மாத்திரமல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இம்முறை சுமார் ஒரு மில்லியன் ரியால்களுக்கு மேற்பட்ட (இலங்கை நாணயப்படி எட்டரை கோடி) விஷேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்று  அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு இப்போட்டியைத் தன்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் நடாத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்த மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்துக்கும் பிரதமரும் இளவரசருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்துக்கும் மன்னர் சல்மானுக்கு பதிலாக பரிசில்களை வழங்கி வைக்க வருகை தந்த மக்காவின் பிரதி கவர்னரும் இளவரசருமான ஸஊத் பின் மிஷ்அல் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்துக்கும் இஸ்லாமிய விவகார அழைப்பு மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல ஊழியர்களுக்கும் அமைச்சர் ஆல் ஷைக் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் பெறுமதியான ஆறுதல் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு வெற்றி பெற்ற 21 அதிஷ்டசாலிகளுக்கு இலங்கை நாணயப்படி 35 கோடி ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போட்டியில் முதலாமிடத்தை சவுதி அரேபியாவைச் சேர்ந்த சஃத் பின் இப்ராஹீம் பின் ஹமத் அல் ருவைதிஃ பெற்றுக்கொண்டார். அவருக்கு இலங்கை நாணயப்படி 4 கோடி 25 இலட்சம் ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டது. இப்போட்டியில் இரண்டாம் இடத்தை நைஜீரியாவைச் சேர்ந்த நாசிர் இப்ராஹீம் முஹம்மத் பெற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கை நாணயப்படி 3 கோடி 82 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. இப்போட்டியில் மூன்றாமிடத்தைப்  ஜோர்தானைச் சேர்ந்த லியாஉ தலால் பத்ஹி இப்ராஹீம் பெற்றார்.  அவருக்கு இலங்கை நாணயப்படி 3 கோடி 40 இலட்சம் ரூபா பணப்பரிசிலாக வழங்கப்பட்டது.

இப்போட்டியில் வெற்றியீட்டிய ஏனைய 18 பேரும் சவுதி அரேபியா, நைஜீரியா, அல்ஜீரியா, பங்களாதேசம், பிலிப்பைன்ஸ், லிபியா, யெமன், மாலி,  பங்களாதேசம், பலஸ்தீன், இந்தோனேசியா, மாலி, அமெரிக்கா, லா ரியூனியன், அவுஸ்திரேலியா, மியான்மார், பொஸ்னியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களுக்காக  2 கோடி 55 இலட்சம் தொடக்கம் 38 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரை பணப் பரிசில்களைப் பெற்றக் கொண்டனர். இவர்களில் வெற்றி பெற்ற 21 வது வெற்றியாளருக்கு இலங்கை நாணயப்படி, 38 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. இதன்படி இப்போட்டியில் வெற்றியீட்டிய  21 வெற்றியாளர்களில் சவுதி அரேபியா 2 இடங்களையும் பங்களாதேசம் 2 இடங்களையும் மாலி 2 இடங்களையும் தமதாக்கிக் கொண்டுள்ளன.

புனித அல் குர்ஆனுக்கும் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய அனைத்து கண்ணியங்களையும் கௌரவங்களையும் சவுதி அன்று தொட்டு இன்று வரை வழங்கி வருவதோடு அல் குர்ஆனின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் மகத்தான பணியையும் சவுதி அரசு தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் நிமித்தம் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்ட குர்ஆன் மனனப் போட்டிகளை உலக நாடுகளிலும் புனித மக்காவிலும் தொடர்ந்தும் நடாத்தி வருகிறது. இவ்வாறு சவுதி அல் குர்ஆனுக்கு அளித்துவரும் மகத்தான சேவைகள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவையாகும்.

மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும் அல் குர்ஆனை மனனம் செய்த ஒரு ஹாபிழாவார். சவுதி மன்னர் அப்துல் அஸீஸ், தனது அனைத்து பிள்ளைகளையும் குர்ஆனை மனனம் செய்யவும் குர்ஆன் ஸுன்னாவைப் படிக்கவுமென தனியான கல்விக்கூடமொன்றை “மத்ரஸதுல் உமரா” என்ற பெயரில் ஆரம்பித்தார். அதன் ஊடாகத் தனது பிள்ளைகளை மார்க்கக்கல்வியின் அடிப்படையில் வளர்த்தார்.  அந்த வகையில் தற்போதைய சவுதி மன்னர், தமது பத்து வயதுக்குள் புனித மக்காவின் அன்றைய பிரதம இமாமான அஷ்ஷைக் அப்துல்லாஹ் கய்யாத் மூலம் முழுக் குர்ஆனையும் மனனமிட்டுக் கொண்டார். அன்று தொடக்கம் தற்போதைய மன்னர் சல்மான் புனித அல் குர்ஆனுக்கும் ஹாபிழ்களுக்கும் உயரிய கௌரவத்தை அவர் அளித்து வருகிறார்.

இதேவேளை இலங்கையில் இருந்தும் பல ஹாபிழ்கள் புனித மக்காவில் நடைபெற்ற அல் குர்ஆன் போட்டிகளில் கலந்து கொண்டு பல பெறுமதியான பணப் பரிசில்களை வென்றெடுத்து இந்நாட்டுக்குபெருமை சேர்த்துள்ளனர். இதே போன்றதொரு அல் குர்ஆன் மனனப்போட்டி சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் மாபெரும் பரிசுத் தொகையில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானியினதும் இந்தியப் பிராந்தியத்தின் சவுதி அரேபியத் தூதரகத்தின் மத விவகாரங்களுக்கான பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் பின் நாசிர் அல் அனஸியினதும் நேரடி கண்காணிப்பில் முதல் தடவையாக கடந்தாண்டு (2023) கொழும்பில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் பல ஹாபிழ்கள் ஒன்றரைக் கோடி ரூபாக்கும் மேற்பட்ட பெறுமதியான பணப் பரிசில்களை வென்றெடுத்தமை தெரிந்ததே.

இந்நிலையில் சவுதியின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடா வருடம் புனித மக்கா நகரில் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியை நடாத்தி பல கோடி ரூபா பெறுமதியான பரிசில்களை வழங்கிவரும் இரு புனித பள்ளிவாசல்களின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் ஆகியோர் உலக முஸ்லிம்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் சவுதி அரசுக்கும் எல்லா முஸ்லிம்களும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர்.

அந்த வகையில் அல் குர்ஆனுக்கு அளப்பரிய சேவையாற்றிவரும் சவுதி மன்னர், இளவரசர், இஸ்லாமிய விவகார அமைச்சர் ஆகியோருக்கு இலங்கை ஹிக்மா நிறுவனமும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது. அத்தோடு இம்முறைப் போட்டியில் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

மௌலவி எம்.எச் ஷேஹுத்தீன் மதனி (BA)


பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *