நாம் அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்..! -உலமா சபை சந்திப்பில்t சஜித் பிரேமதாச
அனைத்து இனங்களிலும், அனைத்து மதங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள். அது ஒரு மதத்தோடும் ஒரு இனத்தோடும் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை. நாம் அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக கைகோர்த்து சகோதரத்துவத்துடனும் நட்புடனும் செயற்பட வேண்டும். இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாசவிற்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று(23) கொழும்பிலுள்ள உலமா சபை தலைமையகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில் தானும், தனது குழுவும் முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ரணசிங்க பிரேமதாசவின் கொள்கையுடனே செயற்படுகின்றோம். அந்தப்பழக்கம் தன்னிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதேபோன்று ஒற்றுமை, நல்லிணக்கம், நட்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் ஏனையோர் கருத்து வெளியிட்டாலும், அதனை தாம் இந்தத் தாய் மண்ணின் நிதர்சனப்படுத்தியுள்ளோம், செயல்படுத்தி உள்ளோம். தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் விவகார அமைச்சொன்று இருந்தாலும், இன்று அந்த அமைச்சு இல்லை. அந்தக் குறைபாட்டை உணர்ந்திருக்கிற தான் அரச மட்டத்தில் அதற்காக ஒரு அமைச்சை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் ஆகிய மதங்களை அடிப்படையாகக் கொண்டு அறநெறி பாடசாலைகளை உருவாக்கியிருக்கிறோம். சிசு தஹம் சவிய திட்டத்தின் ஊடாக அதனை முன்னெடுத்தோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் இவ்வாறு அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்தோம். தான் வெறும் பேச்சுக்களுக்கு பதிலாக வேலை திட்டங்களின் ஊடாக தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கொரோனா தொற்று பரவிய காலத்தில் ஒரு துரதிஷ்டமான சூழ்நிலை உருவாகியது. அது மதவாத இனவாத அடிப்படைவாத செயற்பாடாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தாக்கப்பட்ட பள்ளிவாயல்களையும் நாம் புனரமைப்புச் செய்தோம். கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் நல்லடக்கம் செய்வதா? எரிப்பதா ? எனும் பிரச்சினை எழுந்தபோது அது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பாரபட்சமாகவே இருந்தது. அதற்கு இன்று அவர்கள் அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மன்னிப்பு கோரியிருக்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் வாய் மூடி மௌனித்திருந்தார்கள். தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியே வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தான்தோன்றித்தனமாக பலவந்தமாக மேற்கொண்ட இந்த செயற்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக நட்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று நாம் வீதிக்கு இறங்கிய போது அதற்கும் தடை ஏற்படுத்தியவர்கள் இருந்த போதும் அவற்றை பொருட்படுத்தாமல், முஸ்லிம் மக்களின் உரிமைக்காக வீதிக்கு இறங்கினோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
பாலஸ்தீன பிரச்சினை குறித்து, குறித்த நாட்டு தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு முதுகெலும்போடு கதைத்துள்ளேன். ஹிட்லரின் நாசிப்படை ஜெர்மனியில் செய்ததைப் போன்று இன்று இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு செய்து கொண்டிருக்கிறது. இதனை எந்தவித அச்சமும் இன்றி நான் வெளிப்படையாக தெரிவிக்கிறேன்.
பாலஸ்தீன மக்களின் இன வன்கொடுமையை கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இன்று எமது நாட்டுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தொடர்பிருகின்றது. அதேபோன்று எனக்கும் தொடர்பிருகின்றது. எனது தந்தையும் அந்தக் காலத்தில் பலஸ்தீனத்துக்காக குரல் எழுப்பி இருக்கிறார். நானும் எனது தந்தையின் கொள்கையை பின்பற்றி பலஸ்தீன மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்.
இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்து அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பேன். பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அதற்கு காத்திரமான பதில்களை வழங்கி பன்முக கலாச்சார ஒற்றுமையை ஏற்படுத்தும் மத்திய நிலையம் ஒன்றை உருவாக்கி, இன மதங்களுக்கு கௌரவம் அளிக்கின்ற ஸ்மார்ட்
பிரஜைகளுடன் கூடிய ஒரு பரம்பரையை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இந்த சந்தர்ப்பத்தில் மேலும் தெரிவித்தார்