கற்பிட்டியில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசனை கற்கைநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!
கல்வி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் கடந்த மூன்று மாத காலமாக பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசனை கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (20) பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.யூ பரீதா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச செயலாளர் ஜே.எம்.சமில இந்திக ஜயசிங்க மற்றும் விசேட அதிதியாக திறன் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் பீ. காமினி உதயகுமார ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர் தொழில் கல்வி சம்மந்தமான அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பக்கிப்பட்ட இக்கற்கை நெறி ஆங்கிலக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை என்பன உள்ளடக்கப்பட்டு இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களுக்கு ஒரு பாடசாலை வீதம் 299 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு மேற்படி தொழில் வழிகாட்டல் ஆலோசனை கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்ட தாகவும் அதன்படி கற்பிட்டி பிரதேச செயலக பிரிவில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாத கால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த முதலாவது தொகுதி மாணவர்களான சுமார் 100 பேருக்கு இன்று சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதாக இக் கற்கை நெறியின் கற்பிட்டி பிரதேச செயலக இணைப்பாளர் எம் எஸ் எம் அஸ்லம் தெரிவித்தார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)