யூடியூபை மிரளவிட்ட ரொனால்டோ; 90 நிமிடங்களில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இணைந்து சாதனை
சமூக ஊடகமான யூடியூப் தளத்தில் மிக வேகமாக ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களை (subscribers) இணைத்து பிரபல உதைப்பந்தாட்ட நட்சத்திரமான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார்.
புகழ்பெற்ற போர்த்துக்கல் உதைப்பந்தாட்ட அணியின் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் பக்கத்தை கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை தொடங்கினார். இந்நிலையில், வெறும் 90 நிமிடங்களில் ஒரு மில்லியன் பேர் அவரது யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் (subscribe) செய்து இணைந்துள்ளனர். அத்துடன் ஒரு நாளில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று யூடியூப் நிறுவனத்தால் வழங்கப்படும் கோல்டன் பட்டன் விருதையும் பெற்றுக் கொண்டார்.
அது மட்டுமல்லாமல், ரொனால்டோவின் யூடியூப் பக்கம் தொடங்கப்பட்ட ஒரு நாளில் இப்போது 11 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபஸ்கள் (subscribers) இணைந்துள்ளனர். மேலும் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் குறித்து ரொனால்டோ சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.
ரொனால்டோவை மற்றைய சமூக வலைத்தளங்களான X தளத்தில் 112.5 மில்லியன் பின்தொடர்பவர்களும், பேஸ்புக்கில் 170 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர்.
சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக்கில் அல் நாசருக்கு விளையாடுகிறார். 39 வயதான அவர் தொடர்ந்தும் விளையாடி வருகின்றார். எவ்வாறாயினும், விளையாட்டு வாழ்கையில் இருந்து ஓய்வுபெறும் அவர் தனது வணிக நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரபாத் பஹர்தீன்)