மிலான் ரத்ணாயக்கவின் கன்னி அரைச்சதம் கடந்த துடுப்பாட்டத்தால் வலுப்பெற்றது இலங்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு அறிமுக வீரரான மிலான் ரத்ணாயக்கவின் கன்னி அரைச்சதமும், அணித்தலைவரான தனஞ்சய டி சில்வாவின் பொறுப்பான அரைச்சதமும் கைகொடுக்க கௌரவமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டது இலங்கை அணி.
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேற்று (21) மென்செஸ்டரில் ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதற்கமைய முதல் இன்னிங்ஸ்ஸிற்காகக் களம் நுழைந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன (2), நிஷான் மதுஷ்க (4) மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த குசல் மெண்டிஸ் மற்றும் சந்திமால் ஆகியோர் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்று முறையே 24 மற்றும் 17 ஓட்டங்களைப் பெற்று நிலைக்கத் தவறினர். பின்னர் வந்த அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா நிலைத்திருந்து ஓட்டங்களை சேர்க்க , மறுபுறத்தில் கமிந்து மெண்டிஸ் 12 மற்றும் பிரபாத் ஜெயசூரிய 10 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினர். இதனால் இலங்கை அணி 113 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து திண்டாடியது.
இந்நிலையில் களத்திலிருந்து ஓட்டங்களை சேர்த்த அணித்தலைவருடன் இணைந்த அறிமுக வீரரான மிலான் ரத்ணாயக்க அசத்தலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். மிரட்டலான இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சை மிகச் சுலபமாக எதிர்கொண்டு ஓட்டங்களை சேர்க்க மறுபக்கத்தில் தனஞ்சய டி சில்வா அரைச்சதம் கடந்தார். இந்த ஜோடி தமக்கிடையில் 63 ஓட்டங்களைப் பெற்றிருக்க நம்பிக்கை கொடுத்த தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் களத்திலிருந்த மிலான் ரத்ணாயக்க தனது கன்னி டெஸ்ட் போட்டியின் கன்னி இன்னிங்ஸில் கன்னி அரைச்சதம் கடந்து அசத்தினார். அவருக்கு சிறந்த ஒத்துழைப்புக் கொடுத்த விஷ்வ பெர்ணான்டோ 13 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆகி வெளியேறிய சற்று நேரத்தில் மிலான் ரத்ணாயக்க 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 74 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சொகைப் பசீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் முதல் நாளின் இறுதி பகுதியில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களைப் பெற்றிருக்க முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆடுகளத்தில் டுக்கெட் மற்றும் லோவ்ரன்ஸ் ஆகியோர் தலா 13 மற்றும் 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டியின் 2ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)