உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடும்..! -தேர்தல் ஆணையாளர்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கூடி, தீர்மானம் எடுக்கும் என்றார்.
அரசியல் செல்வாக்கு காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரத்நாயக்க, தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இயன்றவரை முயற்சித்ததாக தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
குறிப்பிட்ட காலப்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றது.
தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படாததன் காரணமாகசே இந்த பிரச்சினை எழுந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதால் வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இத் தீர்ப்பு குறித்து விரிவாக கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.