உள்நாடு

அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைக்க கோத்தாபய அச்சமடைந்து பின்வாங்கினார்; சஜித் இக்கட்டான நிலையில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை என்பதற்கு இம்ரான் பதில்

“நாடு நிர்க்கதியாக இருந்தபோது, சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானதாகும். உண்மையில் நடந்தது அதுவல்ல, இன்னும் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்” என, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளருமான இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

“அத்துடன், சஜித் பிரேமதாஸவிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க அச்சம் கொண்டிருந்த கோத்தாபயவும் ராஜபக்ஷாக்களும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே ரணிலைத் தேர்தந்தெடுத்தனர். சஜித் மீது இருந்த பயமே, அவர்களின் இந்தத் தீர்மானத்திற்குக் காரணம்” என்றும், இம்ரான் எம்.பி. மேலும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, திருகோணமலை குச்சவெளி பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான், “2019 இல் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற கோத்தாபய ராஜபக்ஷவின் பிழையான பொருளாதாரக் கொள்கையினால், நாடு அதள பாதாளத்திற்குச் சென்றது. அத்தோடு, கொரோனா பெருந்தொற்றை முறையான ஆலோசனைகளுக்கு அமைய நிர்வகிக்காது, அந்த நோய்த்தொற்று மேலும் வீரியமடைவதற்கும் அவர்களே காரணமாகினர். இந்த விடயங்களில் சிறப்பாகச் செயற்படத் தவறிய கோத்தா அரசாங்கம், முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் இலக்குவைத்து, மிக மோசமான இனவாதச் செயற்பாடுகளை அரங்கேற்றியது. இவர்களின் முறைகேடான அரசியல் நடவடிக்கையினாலேயே, நாடு படுபாதாளத்திற்குச் சென்றது.

ராஜபக்ஷாக்கள் நாட்டைப் பிழையாக வழி நடத்துவதை உணர்ந்த இளைஞர்களும் பெரும்பான்மையின மக்களும் கிளர்ந்தெழுந்து, அவர்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கினர். இந்தப் போராட்டங்களையும், ஐக்கிய மக்கள் சக்திதான் ஆரம்பித்து வைத்தது. நாங்கள் அன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்ட இடத்தில் மேற்கொண்ட போராட்டமே, பின்னாட்களில் “அரகலய” வாக பரிணமித்தது. அதற்கு பலரும் பெயரைப் போட்டுக்கொள்ள முற்பட்டனர்.

இவ்வாறு, நாட்டுமக்கள் ராஜபக்ஷக்களைக் குற்றவாளிகளாக இணங்கண்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்ப முற்பற்றனர். இந்த நிலையிலும் கூட குழப்பமடைந்த ராஜபக்ஷக்கள், அரசாங்கத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. தம்பியோடவும் முடியவில்லை. இதனாலேயே, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, முதலில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினர். பின்னர், கோத்தாவுக்கு இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதனால், அவர் நாட்டை விட்டே தப்பியோடினார்.

அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு கூறியபோது, நாம் கோத்தாபயவின் இராஜினாமா உள்ளிட்டவையுடன், சில நிபந்தனைகளையும் விதித்தோம். ஆனால், உண்மையில் அவர்களே தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு காவலனைத் தெரிவு செய்துகொண்டே, எமக்கு அழைப்பு விடுப்பது போன்று நாடகமாடினர். அந்தக் காவலன், ராஜபக்ஷக்களைப் பாதுகாத்து நாட்டை விட்டும் தப்பிச் செல்லவிருந்த ராஜபக்ஷக்களை, தேர்தலில் போட்டியிடும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

அந்த நேரத்தில், சஜித் பிரேமதாஸ பிரதமராக ஆகியிருந்தால், இன்று ராஜபக்ஷக்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.’சஜித் பிரேமதாஸ, நாட்டை இக்கட்டான நிலையில் பாரம் எடுக்கவில்லை’ என்பது, ரணில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஷக்களும் சேர்ந்து ஆடிய அரசியல் நாடகம். இது வெறும் அரசியல் குற்றச்சாட்டுதான். ஆகவே, இதனை யாரும் நம்புவதாக இல்லை” என சுட்டிக்காட்டினார்.

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் இப் பிரசாரக் கூட்டத்தில், திருகோணமலை ‘பட்டினமும் சூழலும்’ பிரதேச சபை முன்னாள் பிரதித் தவிசாளர் நௌபர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *