உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க ஊடக சந்திப்பு: எதிர்காலத்தைப் பொறுப்பேற்கப் பொருத்தமான ஒரே ஒரு வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே..! – முன்னாள் அமைச்சர் எஸ். பி. நாவின்ன

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க மிகவும் பொருத்தமானவர் என முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்ன தெரிவித்தார்.

இந்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பின்னர், கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காக ஆற்றிய பணிகளை இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் மறந்துவிடக்கூடாது என முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு 07, பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே முன்னாள் அமைச்சர் எஸ். பி. நாவின்ன இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டென்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விளம்பரச் செயலாளர் யு. எல். எம். என். முபீன், ஸ்ரீ டெலோ அமைப்பின் தலைவர் பரராஜசிங்கம் உதயராசா ஆகியோரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினர்.

இங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ். பி. நாவின்ன,

“நான் 1989 முதல் 2020 வரை அரசியலில் ஈடுபட்டேன். நாட்டின் தற்போதைய நிலைமையின் கீழ் இந்நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே 04 வருடங்களுக்குப் பிறகு, நான் மீண்டும் அரசியலுக்கு வந்தேன்.

இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அவர் மிகச் சிறந்த வேட்பாளர். அன்று இந்நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்ல யார் செயற்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதன்போது, நாடு மீண்டும் வரிசை யுகத்திற்குச் சென்றது. இன்று மேடைகளில் சிலர் பல விடயங்களைக் கூறினாலும் அவர்களில் எவரும் அன்று இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கவில்லை.

அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் அன்றிருந்த வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அத்துடன் கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை எந்தவொரு பிரஜையும் மறந்துவிடக் கூடாது.

குருணாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதி என்ற வகையிலும், முன்னாள் அமைச்சர் என்ற வகையிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றுவதற்கு அவசியமான அதிகபட்ச ஆதரவை வழங்குவேன் என்பதை நான் இங்கு தெரிவிக்கிறேன்.“ என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டேன்லி

“கடந்த இரு வருடங்கள் எவ்வாறு இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரிவும். வரிசை யுகத்துக்குள் மக்கள் சிக்கித் தவித்த போது நாட்டை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நம்பிக்கை இழந்திருந்த நாட்டு மக்களுக்குக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் வரிசைகளுக்கு முடிவு கட்டினார்.

தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி பலர் மக்களை ஏமாற்றுவர். எனவே போலியான அலைகளின் பின்னால் சென்று மீண்டும் வரிசை யுகம் தோன்ற வழிவகுக்க கூடாது. அதனால் நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.“ என்றார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன்

மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பர். கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நாட்டு மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். அன்றிருந்த நிலையை விடவும் இன்றைய நிலைமை நல்லதாகவே உள்ளது.

அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த பயணம் தடைப்பட்டால் நாடு மீண்டும் சரிவடையும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் பொருளாதாரம் , சமூக பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட தலைவர். அவருக்கு சரியான அரசியல் நோக்கம் இருப்பதால் அவருக்கு நாம் ஆதரவளிப்போம். ஜனாதிபதியின் வெற்றிக்கும் வழி செய்வோம்.“ என்றார்.

டெலோ அமைப்பின் தலைவர் பரராஜசிங்கம் உதயராசா

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டை காப்பதாக சொன்ன தலைவருக்கு வாக்களித்தோம். ஆனால் அதற்கு மாறாக நாட்டின் பொருளாதாரம் சரிந்து வரிசை யுகம் தோன்றியது. மீண்டும் அந்த நிலை வரக்கூடாது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டின் பொறுப்பை ஏற்க மறுத்த வேளையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டு நிலைத்தன்மையை ஏற்படுத்தினார். சரிவிலிருந்து நாட்டை மீட்ட தலைவர் என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கிறோம். எதிர்காலத்திலும் அவரினாலேயே நாட்டை மீட்டெடுக்க முடியும்.

சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் எங்கள் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் சாத்தியமாக நிறைவு செய்யப்படவில்லை. அப்போதே அமைச்சர் என்ற வகையில் அவர் தோற்றுவிட்டார். போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.“ என்றார்.

 

(ஊடகப் பிரிவு Ranil 2024 – இயலும் ஸ்ரீ லங்கா)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *