கூட்டணிகளும், வேட்பாளர்களும், வாக்காளர் தீர்மானமும்..!
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் இருந்தும் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் 2024.08.15 ஆம் திகதி நன்பகலுடன் நிறைவடைந்தது. 40 பேர் கட்டுப்பணம் செலுத்தி இருந்தாலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ய வரலில்லை. இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜனாதிபதி வேட்பா ளர்களுள் கடந்த இரண்டு வருடங்களாக ஜனாதிபதியாக இருந்து வரும் சுயேட்சை குழுவில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரனில் விக்கிரமசிங்கா, எதிர்க்கட்சி தலைவராக இருந்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியான சமகி ஜனபலவேகய கட்சியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசா, பாராளுமன்றத்தில் 03 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ள கடந்த பொதுத் தேர்தலில் சுமார் 04 இலட்சம் அளவிலான வாக்குகளைப் பெற்றுள்ள ஜே.வி.பி. கட்சியின் தற்போதைய மறு வடிவமாக திசை காட்டி சின்னத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷவிக் குடும்ப கட்சியான பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவின் வாரிசான மொட்டு சின்னத்தில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ உட்பட 39 பேர் அடங்குகின்றனர்.
ஏனைய வேட்பாளர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாக மவ்பிம ஜனதா பக்ஷ என்ற தாய் நாட்டின் மக்கள் கட்சியின் சார்பில் திலிப் ஜயவீர, ஏனைய கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் சார்பாக போட்டியிடும் சரத் பொன்சேகா, விஜேதாச ராஜபக்ஷ, அக்மீமன தயாரத்ன தேரர், சட்டத்தரணி நுவன் போபகே, முன்னாள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக ரத்நாயகா உட்பட பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். இந்த 39 வேட்பா ளர்களுள் ஒவ்வொருவரும் நினைப்பது தாமே இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்து நாட்டை ஆட்சி செய்ய தகுதியானவர் என்பதாகும். இருந்தாலும் இந்தளவுக்கு ஜனாதிபதி அபேட்சகர்கள் களம் இறங்க காரணம் போனால் போகட்டும் என்று 70 இலட்சம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தி விட்டு பிரபல்யம் அடைவது மட்டுமல்லமாமல் இறுதி நேரத்தில் பிரதான வேட்பாளர்களாக இருக்கும் ரனில், சஜித் அல்லது அநுரகுமார திசாநாயக்கா ஆகிய மூவரில் யாருக்காவது ஒருவருக்கு முக்கடித்து ஆதரவளிப்பதாக கூறி பணத்தையும் வாங்கிக் கொண்டு பதவிக்கு வந்தால் பிரதான பதவி ஒன்றையும் வழங்க வேண்டும் என்று பேரம் பேசி அவருக்கே ஆதரவு வழங்குவதாக கூறி போட்டியில் இருந்து வாபஸ் பெறுவது மறைமுக திட்டமாகும்.
1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்காக ஜனாதிபதியாக போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தலில் அம்பந்தொட்டை மாவட்டத்தில் இருந்து ஸ்ரீ லங்கா முற்போக்கு முன்னணி (ஜே.வி.பி) சார்பாக போட்டியிட ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கி நிகால் கலப்பதி நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நடைமுறையில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று சந்திரிகா பண்டாரநாயகா குமாரணதுங்காவிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் சந்திரிகா பதவியில் இருந்த 10 வருடங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படித்தான் அதிகமான வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களம் இறங்கி ஏதாவது பூச்சாண்டி விளையாட்டுக்களை நடத்துவதும் மக்களை ஏமாற்றும் வகையில் அரச சொத்தை வீன் விரயம் செய்து தேர்தல் ஆணைக்குழுவின் காலத்தை விரயம் செய்வது மரபாக இருந்து வருகின்றது. இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கின்றது ஒரே காரணத்தால் போட்டியிட முன்வருபவரை யாராலும் கட்டுப் படுத்த முடியாது.
இவ்வாறான ஒரு நிலையில் ரனில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டி ருக்கின்றது. இந்த மனுவை பிலயந்தலையை சேர்ந்த சட்டத்தரணி சான் ரணசூரிய என்பவர் 2024.08.14 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ரனில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக இருந்துகொண்டு உயர் நீதிமன்றத்தின் உத்தர வுக்கமைய பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வெற்றிடத்திற்கு பதில் பொலீஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்காமை, உயர் நீதிமன்ற நீதியரசர் களை நியமித்தல் உட்பட பல விடயங்களில் அரசியல் அமைப்பை மீறி உள்ளார் என்றும் தொடர்ந்தும் இவர் ஜனாதிபதியாக வந்தால் மேலும் மக்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் ரனிலை ஜனாதிபதியாக போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனாலும் ரனில் விக்கிரமசிங்கா சுயாதீன வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
எதுவானாலும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பாக சிந்திப்பதாக இருந்தால் நாட்டில் ஜனநாயகத்தின் தூன்களாக கருதப்படுவது சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளையாகும். நீதித்துறை சுதந்திரமாக இயங்க வேண்டுமானால் ஏனைய அனைத்து துறைகளும் ஒத்துழைக்க வேண்டும். இந்த விடயத்தில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கா நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த தவறி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நிறைவேற்று அதிகாரம் என்ற வகையில் தாம் ஜனாதிபதியாக இருந்துகொண்டு ஏன் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் என்று கருதி இருக்கலாம். அதன் காரணமாகவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இதுவரையில் ஜனாதிபதி அவருக்கு அரசியல் அமைப்பால் இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி பதில் பொலீஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே அரசியல் அமைப்பு பேரவையை கூட மதிக்காமல் ஜனாதிபதி நடந்துகொண்டமை போன்றே உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறும் வகையில் நடந்துள்ளார்.
ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே பிரதான கேள்வியாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்றில் இருந்து இன்னும் 33 நாட்களே எஞ்சி உள்ள நிலையில் மக்களின் இதயங்கள் படபடக்க ஆரம்பித்திருக்கின்றன. யார் இந்த நாட்டை அடுத்து வரும் 05 வருடங்களுக்கு ஆட்சி செய்வதற்கு தகுதியானவர், அதற்கு எப்படிப்பட்டவரை தெரிவு செய்வது, போட்டியிடும் 39 வேட்பாளர்களில் யார் ஜனாதிபதியாக வர பொருத்தமானவர் என்று சிந்திக்கும் போது இதயத் துடிப்பு மேலும் அதிகரிக்கலாம்.
இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓரளவுக்கு யாரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற ஒரு அரசியல் தெளிவு இருந்தாலும் 1990 ஆம் ஆண்டின் பின்னர் பிறந்த தற்போது 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக இருப்பவர் களுக்கு இந்த தெளிவு இல்லை. அதனால் இத்தகைய இளைஞர்களாக உள்ள வர்களை எடுத்துக்கொண்டால் சுமார் 20 இலட்சம் அளவிலான வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் எந்த பக்கம் திரும்புகின்றார்களோ அந்த வாக்குகளை மிதக்கும் வாக்குகள் என்று கூறலாம்.
இத்தகையவர்கள் பெரும்பாலும் ஜே.வி.பி. யின் மறு வடிவமான தேசிய மக்கள் சக்தியை அல்லது ஜாதிக ஜனபலவேகய கட்சியை ஆதரிக்கும் வகையில் அநுரகுமார திசாநாயக்காவுக்கு வாக்களிப்பதை தெரிவாக கொள்ளலாம் என்று கருதப்படுகின்றது. ஆனாலும் இந்த தேசிய மக்கள் சக்தியான ஜே.வி.பி இந்ந நாட்டில் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் என்ன செய்தது, அதே போன்று 1989 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதே ஜே.வி.பி. இந்த நாட்டில் எப்படிப்பட்ட நாசகார நடவடிக்கைகளை மேற்கொண்டது? எந்தளவுக்கு அரச பொதுச் சொத்துக்களை தீக்கிரையாக்கியது அழித்தது, பாடுகொலைகள், கொல்லைகள் புரிந்தது பொதுமக்களுக்கு துன்பங்களை செய்தது போன்ற பிற்பட்ட கால கசப்பான வரலாற்றை இந்த மிதக்கும் வாக்குகளான 1990 ஆம் ஆண்டின் பின்னர் பிறந்த 35 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தெரியாது.
அத்துடன் இதே ஜே.வி.பியின் அரசியல், பொருளாதார சிந்தனை என்ன? இப்போது பழைய செயற்பாடுகளை மறப்பதற்காக பெயரை மாற்றியமைத்து தேசிய மக்கள் சக்தி என்று மாற்றம் செய்திருந்தாலும் அதன் சமூக உடமைவாத சோசலிச, மாக்சிச சிந்தனை எவ்வாறு இந்த நாட்டிற்கு பொருந்தும், இந்த கொள்கையாலும் சிந்தனையாலும் ஒரு தேசத்தை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியுமா? முக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியுமா? அதன் பொருளாதார கொள்கையின் பின்புலம் எப்படிப்பட்டது என்றெல்லாம் இந்த இளம் வாக்காளர்கள் அறிந்து வைப்பதற்கு வாய்ப்பில்லை. வெறுமனே கடந்த 75 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை நாசமாக்கினார்கள், பாராளு மன்றத்தில் இருக்கின்ற 225 பேர்களும் திருடர்கள் என்றெல்லாம் ஜனாதிபதி அபேட்சகரும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுர குமார திசாநாயக்காக கூறி வருகின்ற கதைகளை நம்பி இருக்கின்றனர்.
இந்த நாட்டிற்கு 75 வருட கால சாபம் என்றால் இந்த 75 வருடங்களும் 400 கிராம் பால்மா பெக்கட்ட 1020 ருபாவுக்கு இருந்ததா? அரிசி ஒரு கிலோ 250 – 340 ரூபாவுக்கு இருந்ததா, பெற்றோல் 344 ரூபாவாக இருந்ததா என்றெல்லாம் சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் தர்க்க ரீதியாக வினா எழுப்பாமல் வெறுமனே வாய் வாhத்தையாக சொல்வதை 225 பேரும் திருடர்கள், 75 வருட கால சாபம் என்று நம்பி புதிய தலைமைத்துவம் தேவை என்ற அடிப்படையில் வாக்களிக்க தயாராகி இருக்கின்றனர். இந்த அநுரகுமார திசாநாயக்காவின் ஜே.வி.பி. யான தேசிய மக்கள் சக்தியானது திறந்த பொருளாதாரத்தினதும் மேற்குலகத்தினதும் எதிரியாகும். ஆனால் இப்போது கனடா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அநுர விஜயங்களை மேற்கொண்டுவிட்டு அதன் அரசியல் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் மாற்றத்தை கடைபிடிப்பது போன்று காட்டிக்கொள்ள முற்படுகின்றது.
அவ்வாறே 75 வருட கால சாபம் என்ற விடயத்தை அல்லது 225 பேரும் திருடர்கள் என்று தர்க்க ரீதியாக நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை. அப்படியாக இருந்தால் 75 வருடங்களாக பொருளாதாரம் இன்று இருப்பது போன்று அதள பாதாளத்தில் விழுந்ததாக இருந்திருக்க வேண்டும். நாடு எந்தவிதமான முன்னேற்றங்களையும் அபிவிருத்தியையும் கண்டிருக்க முடியாது. மக்களின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமும் சுபீட்சமும் ஏற்பட்டிருக்க முடியாது. அதே போன்று 225 பேரும் திருடர்கள் என்றால் இதே அநுரகுமார திசாநாயக்காக கடந்த 05 வருடங்களுக்கு மேலாக இதே ஜே.வி.பியை வழிநடத்தி வருகின்றார். 225 பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரையாவது தகுந்த ஆதாரங்களை தேடி கண்டு பிடித்து ஊழலில் ஈடபட்டாவர் என்ற அடிப்படையில் நிரூபிக்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சட்டத்தின் முன் நிறத்தி தண்டனை வாங்கி கொடுத்திருக்க முடியும். மஹிந்த குடும்பம் நாட்டை சூரையாடியதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
அந்த குடும்பத்தில் இருந்து ஒருவரையாவது அவர்களது திருட்டை நிரூபிக்க ஆதாரங்களை சமர்ப்பித்து வழக்கு தொடுத்திருக்கலாம். இதுவரையில் வெறும் மேடைப்பேச்சுக்காளக சொல்லி வரும் இந்த ஜே.வி.பி. யின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கா ஊழலில் ஈடுபட்டதாக கூறம் எந்த ஒரு உறுப்பினருக்கும் அதிகாரிக்கும் எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முற்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. குற்றம் சுமத்தி மக்களை தவறான வழிநடத்தலுக்கு முற்படாமல் குறைந்தபட்சம் மஹிந்த குடும்பம் ஊழல் புரிந்ததாக கூறும் அநுர கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஒருவரையாவது சட்டத்தின் முன் நிறுத்த திராணி அற்றதாக இருந்து வரும் நிலையில் ஆட்சிக்கு வந்த பின்னரா அதை செய்வது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்த சொசலிச சமூக உடமைவாத சிந்தனை ஒருபோதும் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இவர்கள் இப்போது கூடுதலாக முஸ்லிம்களை பற்றி பேசுகின்றனர். கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது அதனை சாதகமாக பயன்படுத்தி குரல் எழுப்பியமை மற்றும் ஒரு சில இஸ்லமிய மத பக்தர்கள் இணைந்து அநரவின் பாதைதான் சரியானது என்று நினைத்து பிரச்சாரப் பணிகளில் இறங்கி முஸ்லிம்களுக்கு புதிய அரசியல் பாடம் புகட்டி வருகின்றனர். ஆனால் இந்த போக்குகளின் யதார்த்தம் என்னவென்பதை இவர்களால் இன்னும் சரியாக உணர முடிவதில்லை.
அதனால் ஜே.வி.பியின் பின்னால் அணி திரளும் இளம் வாக்காளர்கள் சரியான முறையில் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். உணர்ச்சியூட்டும் பேச்சுக்களுக்கு மயங்கி வாக்களித்தால் அதனால் தக்கு தாமே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதற்கு சமமானதாகவே அமையலாம். அவ்வாறே ஏனைய வேட்பாளர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் மடியில் இருந்த பாராளுமன்ற உறுப்பி னர்கள் புதிய கூட்டணியை அமைத்து ரனிலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி பார்க்கின்றபோது ரனிலுக்கென்று அல்லது அவர்சார்ந்த ஐ.தே.க. வுக்கான வாக்கு வங்கி இருக்கவில்லை. இதன் பின்னர்தான் குறைந்த பட்சம் 75 இலட்சம் வாக்குகளையாவது திரட்ட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது வாக்கு வங்கியின் நிலையை பார்த்தால்
ஆனாலும் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சமகி ஜனபலவேகய கட்சியில் போட்டியிட்டவர் என்ற முறையில் சஜித் பிரேமதாசாவுக்கு சுமார் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் இருக்கின்ற நிலையில் இம்முறை தகுதி பெற்றுள்ள மொத்த வாக்குகளான ஒரு கோடி 70 இலட்சம் வாக்குகளில் இருந்து வெற்றிபெறுவதற்கான வாக்குகளாக எதிர்பார்க்கக்கூடிய உத்தேச வாக்குகளான குறைந்த பட்சம் 75 இலட்சம் வாக்குகளை திரட்டுவது இலகுவான இலக்காக அமையலாம். ஆனாலும் இந்த இலக்கை அடைய ஜே.வி.பி. மேலும் 70 இலட்சம் வாக்குகளை புதிதாக தம் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும். ரனிலின் நிலையும் இதே நிலைதான். ஆனாலும் மொட்டு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னைய கோதாபயவின் வாக்குகளாக இருந்த 69 இலட்சம் வாக்குகளும் இப்போது நான்கு கூறுகளாக உடைந்து சிதறுண்டிருப்பதால் அவரது இலக்கும் கடினமானதாக இருக்கின்றது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரனிலை ஆதரிப்பதற்காக வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் இரண்டாக பிளவுபட்டிருக்கின்றது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலிசப்ரி, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஆகிய மூன்று உறுப்பினர்களும் ரனிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானத்துள்ளனர். மறுபுரமாக ரிசாத் பதியுத்தீன் ஏகமனதாக சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க முன்வந்துள்ளார். விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் இரண்டாக பிளவு பட்டு விமல் வீரவங்சவின் அணி திலிப் ஜயவீரவுடனும் முசம்மிலின் அணி ரனிலுக்கு ஆதரவு வழங்கவும் தீர்மானித்தி ருக்கின்றது. இவ்வாறே பொதுஜன பெரமுணவில் இருந்து பிரிந்தவர்களும் ஸ்ரீ.ல.சு. கட்சியில் இருந்து பிரிந்த நிமல் சிரிபால டி. சில்வா அணியும் இணைந்து புதிய கூட்டணியை ஆரம்பித்து ரனிலை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.
இவ்வாறாக புதிய கூட்டணிகள், கட்சிகள் என்று பிரதான வேட்பாளர்களை அணி சூழ ஜனாதிபதித் தேர்தல் நடை ஆரம்பமானாலும் வாக்களிக்கும் மக்கள் தூர நோக்கமும் தெளிவான அரசியல் ஞானமும் இல்லாமல் எடுக்கும் முடிவுகள் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆதனால் ஆளமாக சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது.
(எம்.எஸ். அமீர் ஹுசைன்)