உலமா சபையின் பணிகள் குறித்து அனுர குமார,குழுவினருக்கு விளக்கம்..!
2024.08.21ஆம் திகதி, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோர் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தரப்பினரால் ஆகஸ்ட் 12ஆம் திகதி சந்திப்பொன்றிற்காக வேண்டி மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய ஜம்இய்யாவின் செயற்குழு கூட்டத்தின்போது குறித்த சந்திப்பிற்கு நேரம் வழங்கப்பட்டது.
இதன்போது, வருகை தந்திருந்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் பிரமுகர்களுக்கு ஜம்இய்யாவின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோரினால் ஜம்இய்யா பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பிலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவானது அரசியல் சார்பற்ற, மக்கள் எல்லா காலங்களிலும் புரிந்துணர்வோடும் சகவாழ்வோடும் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கக்கூடிய அமைப்பு என்பது பற்றிய தெளிவுகளும் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க அவர்களினால் விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு அண்மை காலமாக பொய்யான சித்தரிக்கப்பட்ட வதந்திகள் பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன எனவும், வதந்திகளையன்றி கடந்த கால செயற்பாடுகளை வைத்து கட்சியினை விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.
இதில் தேசிய மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோருடன் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர் , பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப செயலாளர்கள் மற்றும், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.