உள்நாடு

ரணில் மீண்டும் ஜனாதிபதியானால் புத்தளம் புத்தெழுச்சி பெரும் – அலிசப்ரி ரஹீம் எம்.பி நம்பிக்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானால் புத்தளம் மாவட்டம் புத்தெழுச்சி பெரும் என பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது குறித்தும், இம்மாதம் 30 ஆம் திகதி புத்தளத்தில் இடம்பெறவுள்ள எழுச்சி மாநாடு தொடர்பிலும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (20) புத்தளத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் கூறியதாவது,

இந்த நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்குள் இருந்த போது நாட்டை பொறுப்பேற்க பின்வாங்கியவர்கள் , ஆளுமை இல்லாதவர்கள் , தலைமைத்துவத்தை முறையாக செய்யத் தெரியாதவர்கள் இன்று வந்து நாட்டை தங்களிடம் ஒப்படையுங்கள் என்று மக்கள் மத்தியில் கேட்பது வேடிக்கையானதாகும்.

சாதாரணமாக நிகழ்வொன்றைக் கூட முன்னின்று தலைமை தாங்கி வழி நடத்தத் தெரியாதவர்களிடம் இந்த நாட்டை எப்படி நம்பி ஒப்படைக்க முடியும்.

தனி நபராக வந்து தைரியமாக நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறுகிய காலப்பகுதியில் கடினமாக செயற்பட்டு வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததை மக்கள் மறந்துவிடவில்லை.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமின்றி, பொதுமக்களும் ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை, தலைமைத்துவம் என்பனவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு இருப்பவர்களில் மிகவும் பொறுத்தமானவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் தற்போது உணர்ந்திருக்கிறார்கள்.

நிச்சயமாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை விட அதிகப்படியான வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் புத்தளத்தில் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி என்பனவற்றுடன் மக்கள் எதிர்நோக்கி வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்கும்.

நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போது புத்தளம் மாவட்ட மக்கள் சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்தேன்.

அந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கினால் நிச்சயமாக அதனை நிறைவேற்றிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானால் புத்தளம் மாவட்டம் அபிவிருத்தி பணியில் பாரிய அளவில் முன்னேற்றம் அடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும், வரும் ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகளில் 75 வீதமான வாக்குகள் சிலிண்டர் சின்னத்திற்கே கிடைக்கும். ஐக்கிய மக்கள் சக்தி எங்களுக்கு ஒரு சவால் கிடையாது. சஜித் பிரேமதாச புத்தளம் மாவட்டத்தில் படுதோல்வி அடைவார். நாங்கள் செல்லும் முன்னரே நாட்டுக்கு யார் தேவை எனபதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

எனவே, எமது முழுப் பலத்தையும் பிரயோகித்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை அதிக வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேவையான பணிகளை புத்தளத்தில் தற்போது ஆரம்பித்திருக்கிறோம்.

ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள எமது அமைப்பாளர்கள், இணைப்பாளர்களையும், உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் மற்றும் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும் தெளிவுபடுத்துவதற்காகவும், அவருடைய தேவையை உணர்த்துவதற்காகவும் இம்மாதம் 30 ஆம் திகதி புத்தளத்தில் மாபெரும் எழுச்சி மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளோம்.

இந்த எழுச்சி மாநாட்டில் அமைச்சர் அலிசப்ரி, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா , வடமேல் ஆளுநர் நஸீர் அஹ்மட் உட்பட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் , ஆதரவாளர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *