பேருவளையில் நடைபெற்ற இஸ்லாமிய சிந்தனைகளும் நவீன சவால்களும் என்ற தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு
இஸ்லாமிய சிந்தனைகளும் நவீன சவால்களும் என்ற தலைப்பில் மாபெரும் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வொன்று பேருவளை காலி வீதி ஸிமிச் (ZMICH) வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் (18)ம் திகதி மாலை நடைபெற்றது.
கட்டார் ஹம்மாத் பின் கலீபா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக மத ஒப்பாய்வுத்துறை மற்றும் இஸ்லாமிய கற்கைநெறித்துறை பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் (அல்-அஸ்ஹரி) விசேட பேச்சாளராக கலந்து கொண்டார்.
பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் (அல்- அஸ்ஹரி) இஸ்லாமிய தஹ்வா பிரசாரப் பணிக்காக ஆற்றும் மாபெரும் சேவைகளுக்காக சங்கைக்குறிய அஷ் செய்ஹ் அப்துல் ரஸ்ஸாக் ஆலீம்,சங்கைக்குறிய அஷ் செய்ஹ் அப்துர் ரஹீம் ஆலிம்,மௌலவி ஏ.ஸி.ஏ.ஏ.ஸஹில் (அல்-அஸ்ஹரி) அப்துல் ஹாதி முஹம்மத் இஜ்லான் ஹாஜியார் ஆகியோர் இந்த நிகழ்வில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
அத்தோடு சாதனைகளையும் பல்வேறு முக்கிய அடைவுகளையும் அடைந்த மார்க்க அறிஞர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யமன் ஹளரமௌத் தாருல் முஸ்தபா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் சரீஆத் துறையில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்துள்ள அஷ் செய்ஹ் அப்துல் காதர் ஆலிம் பின் அஷ் செய்ஹ் அப்துல் முஹீஸ் ஆலிம் (யமனி) அஷ் செய்ஹ் முஹம்மத் இஸ்மாயில் ஆலிம் பின் அஷ் செய்ஹ் அப்துஸ் ஸமி ஆலிம் (யமனி) அஷ் செய்ஹ் அப்துல் காதர் ஆலிம் பின் முஹம்மத் முஸ்தபா (யமனி) அஷ் செய்ஹ் முஹம்மத் இஸ்மாயில் ஆலிம் அப்துல் ரஷீத் (யமனி) மற்றும் யமன் ஹளரமௌத் ரிபாத் அல் இமாம் முஹாஜிர் இஸ்லாமிய கற்கை நிலையத்தில் இஸ்லாமிய ஷரீஆ துறை கற்கையை பூர்த்தி செய்துள்ள அஷ் செய்ஹ் இஸ்மாயில் ஆலிம் அஹமத் (யமனி) ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களாவர்.
பேராசிரியர் தீன் முஹம்மதின் உரையின் பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.சீனன் கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி எம்.ஜே.எம்.பஸ்லான் (அஷ்ரபி பீ.ஏ.) இதனை நெறிப்படுத்தினார். பேராசிரியர் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளித்தார்.
சங்கைக்குறிய அஷ் செய்ஹ் ஸக்கி அஹமத் பின் அஷ் செய்ஹ் காலிப் அலவி ஹாஜியார் அலவியதுல் காதிரி நன்றியுரை நிகழ்த்தினார்.
சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் ஆசிகுர் ரஸூல் குழுவினரின் கஸீதா இடம் பெற்றதோடு காரி மௌலவி எம்.எஸ்.எம்.ரஸீன் (கபூரி-ஜமாலி)யின் கிராஅத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மௌலவி ஏ.ஸி.ஏ.ஏ.ஸஹில் (அல்-அஸ்ஹரி) தலைமையிலான குழுவினர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
சங்கைக்குறிய ஸாதாத்மார்கள்,உலமாக்கள்,அறிஞர்கள்,அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள்,விரிவுரையாளர்கள்,மாணவர்கள்,பள்ளிச் சங்க உறுப்பினர்கள்,பள்ளிவாசல்களின் இமாம்கள்,வக்பு சபை உறுப்பினர்கள்,தரீக்காக்களின் முரீதீன்கள்,முஹிப்பீன்கள்,இஹ்வான்கள் உட்பட பெருமளவிலானோர் நிகழ்வில் பங்குபெற்றனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)