திகா – வேலுகுமார் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது: ‘சமர்’ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சம்பவம்..!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களுக்கிடையே இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற வாக்குவாதம், இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் ‘சமர்’ என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்த வேளையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அது தொடர்பான காணொளிகளும், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த விவாத நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கிடையிலேயே இக்கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக, காணொளியின் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது. ‘பார் லைஸன்ஸ்’ மற்றும் பணத்திற்காக, சில பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய தரப்பினர்களும் அரசாங்கத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக, இந்நாட்களில் பரவலாக செய்திகள் கசிகின்றன. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சமீபத்தில் அரசு பக்கம் தாவிய வேலுகுமார் எம்.பி. யைப் பார்த்து, ‘பார் குமார்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை, ‘சமர்’ என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பழனி திகாம்பரம் எம்.பி. பிரயோகித்ததினாலேயே, முதலில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )