யுவராஜின் சாதனையை முறியடித்த சமோவா நாட்டு வீரர்
T20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்து சமோவா அணியில் துடுப்பாட்ட வீரர் டேரியஸ் விஸ்ஸர் உலக சாதனைப் படைத்துள்ளார்.
ஐசிசி ஆடவருக்கான T20 உலகக் கிண்ண துணை பிராந்திய கிழக்கு ஆசிய பசிபிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் வனுவாட்டுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் போது வனுவாட்டு வீரர் சீமர் நளின் நிபிகோ வீசிய 15வது ஓவரில் 39 ஓட்டங்களை குவித்து, டேரியஸ் விஸ்ஸர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இதன்போது அந்த ஓவரில் அவர் ஆறு சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதன் மூலம் 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் அடித்த ஆறு சிக்ஸர்கள் என்ற சாதனையும் டேரியஸ் விஸ்ஸர் முறியடித்துள்ளார்.
17 ஆண்டுகளின் பின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தமாக 14 சிக்ஸர்களை விளாசிய டேரியஸ் விஸ்ஸர் 62 பந்துகளில் 132 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன்மூலம் சமோவா அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களை குவித்திருந்தது.
எவ்வாறாயினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வனுவாட்டு 164 ஓட்டங்களை மட்டுமே பெற்று 10 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றி 2026 T20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறுவதற்கான பெரும் நம்பிக்கையை சமோவா அணிக்கு தந்துள்ளது.