ஒரு வாக்காளருக்கு அதிகபட்ச தொகையாக 109 ரூபா மாத்திரமே செலவிட முடியும்– அதி விசேட வர்த்தமானி வெளியானது ; மீறினால் தண்டனை
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், தமது தேர்தல் பிரசாரப் பணிகளின் போது, ஒரு வாக்காளருக்காகச் செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்றிரவு (19) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, “தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்காக ஒரு வேட்பாளர், 109 ரூபாவையே செலவிட முடியும்” என, அந்த வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையே இடம்பெற்ற நிலையிலேயே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவரின் மொத்தச் செலவினமாக, 186 கோடியே 82 இலட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்த குறித்த தொகையை விட, அதிகமாகச் செலவு செய்வது, சட்ட விரோதமான செயல் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வேட்பாளருக்கு, உரிய தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு, சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )