கட்சி எதுவாக இருந்தாலும் மதுசாரம், சிகரெட்டுக்கு எதிராகச் செயற்படும் ஜனாதிபதி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கவேண்டும்
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாக இருந்தாலும், மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிராகச் செயற்படும் வேட்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும்” என்று, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
“அத்துடன், மதுசார உற்பத்தி நிறுவனங்கள், புகையிலை உற்பத்தி நிறுவனங்கள், கஞ்சாவை சட்ட ரீதியாக்க முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளுக்கு எதிரான கொள்கையை, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட, பொதுமக்கள் வலியுறுத்த வேண்டும்” எனவும், குறித்த நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“சிகரெட் பாவனையினால் எமது நாட்டில் வருடத்துக்கு இருபதாயிரம் பேரும், நாளொன்றுக்கு அறுபது பேரும் மரணிக்கின்றனர். மதுசாரப் பாவனையினால், நாளாந்தம் 40 பேர் மரணிக்கின்றனர். இவ்வாறான நிலையில், இவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகளைத் தடுப்பதற்காகச் செயற்படும் நபர்களை மக்கள் தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்யவேண்டும்.
போதைப்பொருள் விற்பனையாளர்கள், சிகரெட் மற்றும் மதுசார நிறுவனங்கள் என்பவற்றுடன், எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளது என்பதை, மக்கள் சரியாக இனங்காண வேண்டும்.
பொதுமக்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் போதைப்பொருள் மற்றும் மதுசார சிகரெட் பாவனைக்கு உட்படாத வகையில் வாழும் சூழலை உருவாக்கக் கூடிய ஒரு சிறந்த தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும்” என்றும், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )