உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இன்பாஸ் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக போட்டி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.எம் இன்பாஸ் இன்று (15) வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

கற்பிட்டி பிரதேசத்தில் பிரபலமான அரசியல்வாதியாகவும், சமூக சேவையாளராகவும் அறியப்பட்டுள்ள இவர், தேசத்தின் குடிமக்களை ஜனநாயக ரீதியாக வலுப்படுத்தி, தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணியில் 2005ம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்துகொண்டிருந்தார்.

அதன் பின் 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது கற்பிட்டி பிரதேச சபைக்குப் போட்டியிட்டு, உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஆற்றிய பொதுச்சேவைகள் காரணமாக கட்சியும் பொதுமக்களும் வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் சபையின் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கொள்கையின் பிரகாரம் அனைத்து மக்களையும் அரவணைத்து, பொதுமக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டதன் காரணமாக தொடர்ச்சியாக கற்பிட்டி பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர்
கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

கற்பிட்டி பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் இவர் ஆற்றிய சேவைகள் காரணமாக கற்பிட்டிய பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், மீனவர் சங்கத்தின் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டு, தனது மக்களுக்கும் பிரதேசத்துக்கும் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.

இந்நிலையில் தனது சேவைகளை புத்தளம் மாவட்டத்துக்கும் அப்பால் விரிவுபடுத்தும் நோக்கிலும், அவர் சார்ந்த கட்சியான ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கொள்கையான ஜனநாயகத்தை வலுப்படுத்தி, இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டை முன்கொண்டுசெல்லவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *