உள்நாடு

பேருவளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு

பேருவளை நகர சபை மற்றும் பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவர்கள்,உப தலைவர்கள்,எதிர்கட்சி தலைவர்களாக பதவி வகித்த பலர் உட்பட முன்னாள் உறுப்பினர்கள், நகர சபை பிரதேச சபை வேட்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்.

பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான அல்-ஹாஜ் இப்திகார் ஜெமீல் தலைமையில் (14)ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டமொன்றின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட அமைப்பாளருமாண எம்.எம்.அம்ஜாத், பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவர்களான ஏ.ஆர்.எம்.பதியுத்தீன்,குஸ்மன் சில்வா, பேருவளை நகர சபை முன்னாள் உப தலைவர்களான அல்-ஹாஜ் ஹஸன் பாஸி,விமலசிறி சில்வா உட்பட நகர சபை பிரதேச சபை, பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள்,வேட்பாளர்கள் என 30 பேர் அளவில் பங்கு பற்றினர்.

இந்தத் தீர்மானத்தின் பின்னர் அவர்கள் ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றையும் நடாத்தி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

யார் என்ன சொன்னாலும் எவர் எதை செய்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு விலகி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் சென்றாலும் நாம் ஒருவரும் கட்சியை விட்டு செல்ல மாட்டோம். ஜனாதிபதி வேட்பாளர் ஸஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக எமது அமைப்பாளர் இப்திகார் ஜமீலுடன் கைகோர்த்து உழைப்போம்.

டொக்டர் ராஜித சேனாரத்ன எம்மை விட்டு பிரிந்து சென்றாலும் பேருவளை மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனே உள்ளனர்.கிராமிய பகுதி வாழ் மக்களும் நகரப் பகுதிவாழ் மக்களும் ஜனாதிபதி தேர்தலில் ஸஜித் பிரேமதாசவுக்கே தமது முழுமையான ஆதரவை வழங்க முன் வந்து உள்ளதாகவும் 25.000க்கு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் பேருவலை தொகுதியை வெற்றியடைய செய்வோம் என்றும் இவர்கள் குறிப்பிட்டனர்.

பேருவளைத் தொகுதி வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஸஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக வாக்களிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும் நாட்டின் எதிர்கால சுபீட்சம் மக்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவர்கள் சிறந்த தீர்மானமொன்றை எடுப்பார்கள் என்றும் இதன் போது தெரிவித்தனர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *