யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் ஜிப்ரியின் நூற்றாண்டு தினம்
யாழ்ப்பாணம், சோனகத் தெருவில் காதர் முஹிதீன் தாஹா பீவி தம்பதியினருக்கு 1924 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அஹமெட் ஜிப்ரி பிறந்தார். ஓகஸ்ட் 20 ஆம் திகதி இவரது நூற்றாண்டு தினமாகும். அஹமெட் ஜிப்ரி தனது ஆரம்பக் கல்வியை யாழ்.மன்பஉல் உலூம் பாடசாலையில் கற்றார். அதன் பின்னர் யாழ். இந்து கல்லூரியில் கற்று உயர் கல்வியில் சித்தியடைந்தார்.
பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகவும், உப அதிபராகவும், அதிபராகவும் பணிப்பாளராகவும் சேவையாற்றியவர் தான் பட்டதாரியான ஸி.எம்.ஏ.ஜிப்ரி ஆவார்.
உயர் கல்வியில் சித்தியடைந்த அஹமெட் ஜிப்ரி 1946 – 1947 இல் ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்றார். அஹமெட் ஜிப்ரி பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் 1948 இல் முதல் நியமனம் பெற்றார்.
அஹமெட் ஜிப்ரி யாழ்ப்பாணம் சோனகத்தெருவைச் சேர்ந்த முஹம்மது முஹிதீன் ஸகீனா தம்பதியினரின் மகளான தூபாவை (கல்வி நிர்வாக அதிகாரி எம்.எம்.மன்சூரின் சகோதரி) திருமணம் செய்தார்.
அஹமெட் ஜிப்ரி – தூபா தம்பதியினருக்கு முத்தான ஓர் ஆணும் (அன்வர்) இரு பெண்களும் (யஸ்மின், ஸீனியா) கிடைத்தனர். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக விளங்கிய அஹமெட் ஜிப்ரி வித்தியாலங்கரா பல்கலைக் கழகத்தில் கற்று 1961 இல் பட்டதாரியானார். 1963 இல் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு முதலாவது அதிபராக நியமனம் பெற்றார். அஹமெட் ஜிப்ரி யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஏறத்தாழ ஒரு வருடம் அதிபராக கடமையாற்றினார்.
அஹமெட் ஜிப்ரி புத்தளம் ஸாஹிரா கல்லூரியிலும் (1956 – 1958 ) யாழ் ஒஸ்மானியா கல்லூரியிலும் (1963) நாவலப்பிட்டி சென்மேறீஸ் கல்லூரியிலும் (1970) அதிபராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1949 முதல் 1978 வரை அஹமெட் ஜிப்ரி அளுத்கம ஸாஹிரா கல்லூரி , யாழ் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி, கொழும்பு இசுபத்தான கல்லூரி, யாழ் ஒஸ்மானியா கல்லூரி, கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனிய்யா கல்லூரி, நாவலப்பிட்டி சென்மேறீஸ் குமார கல்லூரி, இஸ்லாமிய்யா கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகவும், உப அதிபராகவும் கடமையாற்றினார். அஹமெட் ஜிப்ரி 19.08.1978 இல் சேவையிலிருந்து இளைப்பாறினார்.
இளைப்பாறிய அஹமெட் ஜிப்ரி 1979 தொடக்கம் 1981 வரை கம்பியா நாட்டில் முஸ்லிம் உயர் கல்வி நிறுவனத்தில் சேவையாற்றினார். நாடு திரும்பிய அஹமெட் ஜிப்ரி பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலா பீடத்தில் நான்கு வருடங்களும், கல்லேலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் பணிப்பாளராக ஒரு வருடமும் கொழும்பு இக்ரஹ் சர்வதேச பாடசாலையிலும் கடமையாற்றினார். அஹமெட் ஜிப்ரி முஸ்லிம் புலமைப் பரிசில் நிதியத்தில் ஓர் அங்கத்தவராகவும் சேவையாற்றினார்.
ஆங்கில ஆசிரியராகவும், உபஅதிபராகவும், அதிபராகவும், பணிப்பாளராகவும் சேவையாற்றிய அஹமெட் ஜிப்ரி தனது 83 ஆவது வயதில் காலமானார் அன்னார் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்திற்கு நுழைவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
(கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்)