உள்நாடு

சிறப்பாக நடைபெற்று முடிந்த சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் மாநாடு..!

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கட்சியின் நிலைப்பாடு” குறித்த முடிவுகளை எட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் மாநாடு, கடந்த 10.08.2024 (சனிக்கிழமை ) அன்று கிண்ணியாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் தலைவர் நஜா முஹம்மதின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நாடளாவிய ரீதியில் உள்ள கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மாநாட்டினை துவக்கி வைக்கும் முகமாக, சமூக நீதிக் கட்சி தேசிய அமைப்பாளர் அர்க்கம் முனீர் வரவேற்புரையாற்றினார். கட்சியின் பிரதித் தலைவரும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான ஏ.எச்.எம். பஷீர், திருகோணமலை மாவட்டக் குழு சார்பாக அங்கத்தவர்களை வரவேற்றார். கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் ஸைத் அஸ்ஹரின் நெறிப்படுத்தலில் தொடர்ந்த இம்மாநாட்டில் கட்சியின் உதவிப் பொருளாளர் பைஸல் பரீதின் கவிதையோடு, மாநாட்டின் முதலாவது அமர்வு துவங்கியது.

இம் மாநாட்டின் முதலாவது அமர்வில், மாற்று அரசியல் வேலைத்திட்டம் ஏன் அவசியம் என்பது குறித்து கட்சியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் உரையாற்றினார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து ஏன் சமூக நீதிக் கட்சி விலகியது என்பது குறித்த தெளிவான விளக்கங்களை கட்சியின் தலைவர் நஜா முஹம்மத் முன்வைத்தார்.

சமூக நீதிக் கட்சி வகுத்துள்ள, அதன் ’10 அடிப்படைக் கொள்கைகளை’ அங்கத்தவர்களிடம் முன்வைக்கப்பட்டு கருத்துக்களைப் பெற்றுக்கொண்டார் கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்க்கம் முனீர்.

மேலும் 2022 இல் தோற்றுவிக்கப்பட்ட சமூக நீதிக் கட்சி கடந்துவந்த பாதை குறித்து விளக்கங்கள் முன்வைக்கப்பட்டதோடு,கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த திட்டங்கள் அங்கத்தவர்களிடம் முன்வைக்கப்பட்டு, அவர்களுடைய கருத்துக்களும், ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கட்சியின் மகளிர் கட்டமைப்பினை விரிவபடுத்துவது குறித்த ஆலோசனைகளை கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளரும் முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான திருமதி ரிஸ்ரினா இஸ்மாலெப்பை முன்வைத்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி றுடானி ஸாஹிரின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் இரண்டாவது அமர்வில், ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி, தேசிய செயற்குழு உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள், திறந்த கலந்துரையாடல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு, விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, தீர்க்கமான முடிவுகளும் எட்டப்பட்டன.

மாநாட்டில் இறுதியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சமூக நீதிக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை விரைவில் ஊடகங்கள் மூலம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(ஊடக பிரிவு -சமூக நீதிக் கட்சி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *