உள்நாடு

முஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் – தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம்

தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக் கிழமை மாலை (11) காத்தான்குடி எம்.ஆர்.எப் வில்லா மெரின் மண்டபத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் தவிசாளர் யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை உள் வாங்குவதை நோக்கமாகக் கொண்டும் மற்றும் முஸ்லிம் அரசியல் பரப்பில் இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளருடன் ஒப்பந்தங்களை செய்யும்போது முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை பெற்றுக் கொள்வதை அழுத்தம் கொடுக்கும் வகையிலும் தனது கோரிக்கைகளை விளங்கப்படுத்தும் நோக்கில் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலும் கிழக்குமாகாண முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் காணிப் பிரச்சினைகள், அரச நிர்வாக முறைமைகள் தொடர்பிலும் முழுமையாக கவனம் செலுத்துவதோடு பிரதான வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது ஒப்பந்தங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன் வைப்பதோடு அவ் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இச் சந்திப்பில் அமைப்பின் பிரதி தலைவர் எஸ்.எம் .கே.முகம்மத் ஜாபீர் (நளீமி) மற்றும் செயலாளர் எம்.எம்.எம்.நளீம் பொருளாளர் எம்.ஐ.ஆதம் லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.

(எம்.பஹத் ஜுனைட்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *