கட்சித் தாவல்களால் திணரும் பிரதான கட்சிகள்; சூடு பிடிக்கும் தேர்தல் களம்
ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினம் 2024.08.15 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகும். அன்றைய தினம் காலை 9.00 மணிமுதல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதோடு 11.00 மணியில் இருந்து 11.30 மணி வரையான 30 நிமிடங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக் கெடுவாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. வேட்புமனுக்களை பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்துவிடும்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழு விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வேட்பாளர்கள் பற்றியும் அவர்களது சின்னங்கள் பற்றியும் பின்னர் அறிவிக்கும். குறிப்பாக சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்கள் என்ன சின்னத்தில் போட்டியிடுவது என்ற விபரங்கள் சில தினங்களில் தெரிய வரும். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் அமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. இம்முறை மொத்த சனத்தொகையில் ஜனாதிபதித் தேர்தலில் 01 கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் காலத்திற்கு காலம் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கைகளின்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 78 ஆகும். இந்த அரசியல் கட்சிகளில் பிரதான அரசியல் கட்சிகள் உட்பட 09 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 25 அபேட்சகர்களாவது போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது வரையில் 24 அபேட்சகர்கள் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர். 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் 28 அரசியல் கட்சிகள் போட்டியிட்டுள்ளன. அன்றில் இருந்து இன்று வரையில் வளர்ச்சியடைந்து வந்துள்ள அரசியல் கட்சி முறையின் உச்ச கட்டமாக இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 78 ஆகும்.
இவ்வாறு கட்சிகளின் எண்ணிக்கை உயர்வடையக் காரணமாக அமைவது காலத்திற்கு காலம் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படும் தலைமைத்துவ போட்டி, அரசியலில் ஈடுபடுபவர்களிடையில் ஏற்படும் முரண்பாடுகள், உறுப்பினர்கள் பணத்திற்கும் சுகபோக வசதிகளுக்கும் ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்கு மாறுவது போன்ற நிலைமைகளாகும். இருக்கின்ற கட்சியில் தம் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாவிட்டால் அந்த கட்சியை உடைத்துக்கொண்டு வெளியில் போய் புதிய ஒரு கட்சியை பதிவு செய்யும் மரபு இருந்து வருவதால் நாளுக்கு நாள் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தேர்தல் ஆணைக் குழுவுக்கும் தலையிடி ஏற்பட்டிருக்கின்றது. சில அரசியல் கட்சிகளுக்குள் தீராத பிரச்சினைகள் இருந்து வருவதால் அத்தகைய கட்சிகளை பதிவு செய்வதிலும் கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கை அரசியலின் போக்கை அவதானித்தால், பாராளுமன்றத்திற்கான தேர்தல்களில் பிரதான இரண்டு கட்சிகளான ஐ.தே. கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு. கட்சி ஆகிய கட்சிகளே ஆட்சியை கைப்பற்றி வந்தாலும் 1970 ஆம் ஆண்டின் பின்னர் இருந்து ஒரு தனிக் கட்சியால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாமல் பெரும்பான்மை பலம் பெற முடியாமல் போகும் போது கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றி வரும் நிலை உருவாகி இருக்கின்றது. 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 95 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சியாக இருந்த ஐ.தே.கட்சி இந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் பெயரும் இல்லாமல் யானை சின்னமும் இல்லாமல் அக்கட்சியின் வாரிசான ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக போட்டியிடுகின்ற அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. அந்தளவிற்கு அக்கட்சி 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் படு தோல்வி அடைந்து, கட்சியும் பூண்டோடு அழிந்து போன நிலையே ஏற்பட்டது. அக்கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ போட்டி காரணமாக கட்சி பிளவுபட்டு சஜித் பிரேமதாச தலைமையில் சமகி ஜனபலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி) மலர்ந்தது எனலாம்.
அடுத்ததாக இரண்டாவது பலம் பெரும் அரசியல் கட்சியாக இருந்த ஸ்ரீ.ல.சு.கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட முடியாத அளவுக்கு பல கூறுகளாக பிளவுபட்டு ஒரு அணி ரணில் விக்கிரமசிங்கவுடனும் இன்னுமொரு அணி சஜித் பிரேமதாசவுடனும் கூட்டுச் சேர்ந்து இருக்கின்றது. இன்னுமொரு சுதந்திரக்கட்சி அணி விஜேதாச ராஜபக்ஷவுடன் அவரை ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிடச் செய்து பிளபட்டிருக்கின்றது. இதற்கிடையில் 1994 ஆம் ஆண்டின் பின்னர் புதிய கூட்டணிகளாக உருவாகிய பொ.ஐ.முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியனவும் பிளவுபட்டுள்ளன. இடதுசாரி சோசலிச கட்சியான ஜே.வி.பி. யும் பிளவுபட்டு தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சிகளாகி உள்ளன. இந்த கட்சிகளும் அவற்றின் அடையாளங்களை மாற்றியமைத்து புதிய பெயர்களில் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கியுள்ளன. இந்த ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக மாறி இருக்கின்றது. 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி. நாட்டில் மேற்கொண்ட நாசகார நடவடிக்கைகள், படுகொலைகள் காரணமாக அந்த பெயரில் மக்களின் முன்னால் வந்து வாக்கு கேட்க முடியாததால் திசை காட்டி சின்னத்தில் ஜனாதிக ஜன பலவேகய தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கா தலைமையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கின்றது.
2010 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாகிய பொதுஜன பெரமுன கட்சியும் மூன்றாக பிளவுபட்டு ஒரு அணி ரணில் விக்கிரமசிங்கவுடனும், ஒரு அணி சஜித் பிரேமதாசாவுடனும் இன்னும் ஒரு அணி ராஜபக்ஷ குடும்பத்துடனும் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இந்த பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 95 உறுப்பினர்கள் ராஜபக்ஷ குடும்பத்தை விட்டு வெளியேறி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க கூட்டுச் சேர்ந்துள்ளனர். இறுதியாக 2024.08.08 ஆம் திகதி முன்னாள் அமைச்சராகவும் மஹிந்த குடும்பத்தின் பிரதான ஆதரவாளராகவும் இருந்த பவித்ரா வன்னிஆரச்சி ரணிலோடு இணைந்து அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். மஹிந்தவோடு சேர்ந்துகொண்டு மிக மோசமான முறையில் ரணிலை மேடை மேடையாக தூசித்து வந்த ஒரு அரசியல்வாதியே இந்த பவித்ரா வன்னிஆரச்சி ஆவார். 2024.08.06 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவோடு இருந்தவர் 07 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி அபேட்சகராக அறிவித்த பின்னர் 08 ஆம் திகதி ரணிலோடு சேர ஓடிப்போய் விட்டார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு இம்முறை ஜனாதிபதி அபேட்சகர் யார் என்பதை தீர்மானிப்பதில் கடுமையான நெருக்கடி இருந்து வந்தது. பிரபல வர்த்தகரான தம்மிக பெரோவை ஜனாதிபதி அபேட்சகராக நியமிப்பது என்ற தீர்மானத்தில் இருந்த போதும் இறுதி நேரத்தில் கள நிலவரங்களை அவதானித்த தம்மிக பெரேரா பொதுஜன பெரமுன என்ற மொட்டு கட்சியால் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என்று கணிப்பீடு செய்து போட்டியிட முடியாது என்று அறிவித்ததால் இந்த நெருக்கடி மேலும் உக்கிரமடைந்தது. 2019 ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கி 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாலும் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஒரு நாட்டை எவ்வாற ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆட்சி இயல் பற்றிய அறிவும் அனுபவமும் இல்லாமல் இருந்ததால் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய நிலையில் நாட்டில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி காரணமாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் பதவியில் இருந்து துரத்தப்பட்டு அதிகாரத்தை இழக்கும் நிலை எற்பட்டது. இவ்வாறான ஒரு பின்னணியில் யாரை ஜனாதிபதி அபேட்சகராக களம் இறக்குவது என்ற நெருக்கடியான நிலைமைக்கு தீர்வாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த குடும்ப கட்சி அறிவிப்பு செய்திருக்கின்றது.
ஏற்கனவே தம்மிக பெரேராதான் மொட்டு கட்சியின் ஜனாதிபதி அபேட்சகர் என்ற நிலைப்பாட்டால் அதிருப்தியில் அதன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் தஞ்சம் அடைந்தனர். இப்போது நாமல் என்றவுடன் இன்னும் சிலர் ரணிலின் காலில் மண்டியிட உள்ளனர். பவித்ரா வன்னிஆரச்சி போன்ற கட்சியின் மூத்தவர்கள் எதிர் பார்ப்பாக இருந்தது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷதான் வர வேண்டும் என்பதாகும். ஆனாலும் நாமலின் அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவம் என்று பார்க்கும் போது அரசியலில் தம்மை விட குறைந்த தகைமையில் உள்ள ஒருவரை நாட்டின் தலைமைத்துவத்திற்கு நியமித்து அவரின் பின்னால் போவது எவ்வாறு என்ற மானசீக தாக்கம் காரணமாக அரசியலில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட ஒருவரின் பின்னால் செல்வதே சிறந்தது என்ற அடிப்படையில் மொட்டில் இருந்து கட்சித்தாவல்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் 09 ஆவது ஜனாதிபதி தேர்தலை சந்திப்பதற்காக பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜனபலவேகய) சஜித் பிரேமதாச தலைமையில் ‘சமகி ஜன சந்தானய’ (ஐக்கிய மக்கள் கூட்டணி) என்ற புதிய கூட்டணி உருவாக்கி இருக்கின்றது. இந்த கூட்டணி தமிழ் முஸ்லிம் கட்சிகளது ஒத்துழைப்புடன் 2024.08.08 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டின் போது ஏற்படுத்தப்பட்டது. இக்கட்சியுடன் இணைந்துகொள்ளும் சிறிய கட்சிகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. மொட்டில் இருந்து பிரிந்து வந்த டளஸ் அணி, ஸ்ரீ.ல.சு. கட்சியில் இருந்து பிரிந்து வந்த தயாசிரி ஜயசேகர அணி, மனோ கணேஷனின் தமிழ் முற்போக்கு கட்சி, ரவுப் ஹக்கீமின் தலைமையிலான ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் கட்சி, வேலாயுதம் ராசி மாணிக்கம் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி உட்பட 11 சிறிய கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளன. அத்துடன் ரிசாட் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணி உட்பட இன்னும் பல முஸ்லிம் ஆதரவு அணிகளும் இணைய உள்ளன. ஆனாலும் ரிசாட் பதியுத்தீனின் கட்சியின் முடிவை அறிவிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை. ஏற்கனவே சஜித் அணியுடன் இணைந்திருந்தாலும் தற்போதைய நிலையில், தெரிவில் மாற்றம் இருக்குமோ என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இவ்வாறாக பிரதான அரசியல் கட்சிகள் சார்பான ஜனாதிபதி அபேட்சகர்கள் யார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள விடயமாகும். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ ஆகிய நான்கு அபேட்சகர்களுக்கிடையிலும் கடுமையான போட்டி இடம்பெற இருக்கின்றது. இவர்களில் யாருக்கு ஜனாதிபதியாகின்ற வரத்தை மக்கள் வழங்குவார்கள் என்பதே இனி இருக்கின்ற பிரதான எதிர்பார்ப்பாகும். தற்போதைய நிலையில் யார் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவர்கள் அனைவரதும் தேர்தல் பிரச்சார தொனிப் பொருளாக அமையவது ஊழலை ஒழிப்போம், மோசடிகளை ஒழிப்போம், அரச சொத்து சூறையாடல்களை தடுப்போம், ஏற்கனவே உழல்களிலும் அரச சொத்து திருட்டுக்களிலும் ஈடுபட்ட தேசத் துரோகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதாக உள்ளன.
ஆனாலும் 2015 முதல் 2019 வரையில் பதவியில் இருந்த ரணில் மற்றும் மைத்திரிபால சிரிசேன தலைமையிலான நல்லாட்சியிலும் பதவிக்கு வர முன்னரும் வந்த பின்னரும் கூறப்பட்ட விடயம் இதே ஊழல் ஒழிப்பு, ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது என்ற விடயமாகும். ஆனாலும் முன்னைய மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருடகால ஆட்சியில் அமைச்சர் களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் இருந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட எந்தவொரு நபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட 44 பேர்களின் கோப்புகள் அப்போதைய ஜனாதிபதியிடம் இருந்தபோதும் ஒருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை. சூறையாடிய அரச சொத்துக்களை மீட்க முடியவில்லை. இன்றும் அதே ஊழலுக்கு எதிராக பேசினாலும் முன்னைய ஊழல் வாதிகளையும் திருடர்களையும் வாக்குகளுக்காக இணைத்துக் கொண்டுள்ள நிலையில் இனியும் ஒருபோதும் அரச சொத்துத் திருடர்களுக்கு அல்லது ஆட்சியாளர்களாக இருந்த ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியாது.
இந்த ஊழலை எதிர்ப்போம் என்ற விடயம் வெறும் மக்களை ஏமாற்றும் தாரக மந்திரம் மாத்திரமே. இந்நிலையில் வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் களம் இறங்கி உள்ளார். 2024.08.08 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய பொது கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதே தமது இலட்சியம் என்று கூறி போட்டியிடுவதாக அரியநேத்திரன் அறிவித்துள்ளார். டெலோ, புலொட், தமிழ் மக்கள் கூட்டணி உட்பட பல சிறிய அரசியல் குழுக்களும் சிவில் சமூக பிரமுகர்களும் இந்த தமிழ் பொது வேட்பாளருடன் ஒன்று சேர்ந்துள்ளனர். எதுவானாலும் அடுத்த இலக்காக அமைவது ஜனாதிபதித் தேர்தல் ஆகும். வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் முதலாவதாக இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயம் சட்டத்திற்கும் நீதிக்கும் தலைவணங்க வேண்டும் என்பதாகும்.
நிறைவேற்று அதிகாரம் என்ற போர்வையில் சட்டத்தை மீறுபவர்களாக இருந்தால் சர்வாதிகாரமும் அரசியல் அராஜகமும் மலிந்த ஆட்சியே இனியும் மக்களின் வாக்குகளுக்கு கிடைக்கும் சன்மானமாகும். அவ்வாறான நிலை ஏற்படுமானால் ஏற்கனவே கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் தற்போது பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவுக்கு ஏற்பட்டது போன்று மக்களால் ஓட ஓட துரத்தும் நிலை வராது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
(எம்.எஸ். அமீர் ஹூசைன்)