அமெரிக்காவின் ஆதிக்கத்துடன் நிறைவுக்கு வந்தது 33ஆவது ஒலிம்பிக் போட்டி
பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் நடைபெற்றுவந்த 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும்.
சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு இரண்டாவது இடம் பிடித்தது. அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது.
33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அவர்கள் 32 விளையாட்டுகளில் மொத்தம் 329 தங்கப்பதக்கத்துக்கு மோதிக்கொண்டனர். உலகின் கவனத்தை ஈர்த்த பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது.
இறுதியில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடந்தவுள்ள அமெரிக்காவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.