சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் சாதிக்க துடிக்கும் ஷஹ்மி.
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் அலாதியான விஷேட ஆற்றல்களுடனேதான் உலகில் பிறந்து வளர்கிறான். தன்னகத்தே கொண்டுள்ள அத்தகைய ஆற்றல்கள் வெளிக்கொணரப்படும் போதுதான் அம்மனிதன் சாதனையாளனாகிறான். அவரை நாடும், சர்வ தேசமும் போற்றிப் புகழவே செய்கின்றன.
மனிதனிடம் பொதிந்துள்ள ஆற்றல்களை சுயமாக வெளிக்கொண்டு வருவோருமுள்ளனர் மற்றும் சிலரோ பிறரின் தூண்டுதல், ஒத்துழைப்பு அல்லது அனுசரணையோடு வெளிக்கொணர்வோரும் உள்ளனர். இவர்களுக்குப் புறம்பாக ஆற்றல்களை தமக்குள்ளே அடக்கி ஊமைகளாக உள்ளோரும் எங்கள் மத்தியில் உள்ளார்கள் என்பதையும் கவலையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எப்படியோ, தன்னிடமுள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வருவோர் சாதனையாளராக வரலாற்றில் தடம்பதித்து போற்றிப் புகழப்பட்டுக் கொண்டே இருப்பார் என்பதில் ஐயமில்லை.
இத்தகையோர் வரிசையில், சுய முயற்சியோடும், நலன் விரும்பிகளது அனுசரணையோடும் சாதனை ஒன்றை நிலைநிறுத்த முன் வந்திருக்கிறார் ஓர் இளம் வாலிபத் துடிப்பாளர். அவர் தான் பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத் என்ற சாதனை தொடப்போகும் வீரராவார்.
இவர் கிட்டத்தட்ட ஐம்பது நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்வதே இவரால் மேற்கொள்ளப்படவுள்ள சாதனையாகும். இது இலங்கை பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது சாதனை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் கரையோர வழியாக முழு நாட்டையும் சுற்றி வருவதே இவர் மேற் கொண்டு வரும் சாதனை முயற்சியாகும். சாதனையாளர் பேருவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எற்பதால், வரலாற்றில் பல தடங்களைப் பதித்து பேரும் புகழும் பெற்றுள்ள பேருவளை மைக்கல்லை தொடுகிறது.
அரேபியர்களின் வர்த்தக தொடர்போடு, இலங்கையில் முஸ்லிம்களின் ஆரம்பக்குடியேற்றம் தொடர்ந்து நிகழ்வதோடு, பேருவளை முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் முதல் மைக்கல்லை தொட்டு பேரும் புகழோடும் விளங்கிவரும் பிரதேசமாகவுள்ளது.
கி.பி 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கால் பதித்த ஐரோப்பியரான போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்பே நாட்டின் இராணுவ முற்றுகை நடந்த நிகழ்வதோடு சீனங்கோட்டை என்ற நாமம் பூண்ட வரலாற்றுப் புகழும் பேருவளைக்கு உண்டு என்பதை எழுத்தாளர் அஷ்ரப் யூஸுப் எழுதிய “வேர்கள்” என்ற நூல் சான்று பகர்கிறது.
பின்னர், பேருவளை கடற்கரையை வந்தடைந்த யெமன் தேசத்தின் இளவரசர் சுல்தான் ஜெலாலுத்தீனின் வருகையால், இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்ராரின் தோற்றம், முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் என்று பிரசித்தம் பெற்றுள்ள ஊர் என்பதும் வரலாறாகும்.
இதே போன்று, இரத்தினக்கல் வர்த்தகமும், காலத்திற்கு காலம் தோன்றும் கொடைவள்ளல்கள், மேலும் சமூக கலை, கலாசாரம், கட்டிடக் கலைஞர்கள், விளையாட்டு உள்ளிட்ட துறைசார் சாதனையாளர்களின் பங்களிப்புகள் என்று பேருவளை உள்நாட்டிலும், சர்வ தேச மட்டத்திலும் புகழ் பூத்துக்குலுங்கும் நகராகத் திகழ்கிறது. இன்று ஷஹ்மியின் சாதனையால் மேலும் மெருகேற்றப்படுகிறது.
ஷஹ்மி ஷஹீத் தனது 25 ஆவது வயதில் இந்த சாதனையை நிலைநிறுத்தப் போகிறான். பேருவளை, சிமி ஹோல்டிங் நிறுவனத்தின் பிரதான அலுவலக வளாகத்திலிருந்து ,பயணத்தின் பூரண அனுசரணையாளரும்,சிமி மோல்டிங் நிருவன உரிமையாளருமான அல்ஹாஜ் இஜ்லாம் யூசுஃப் அவர்களின் வாழ்த்தோடு,இலங்கையின் தென் முனையை நோக்கி தனது நடை பவனியை 2024, ஜுலை 13 ஆம் திகதி ஆரம்பித்துள்ளார்.
காலி வீதியூடாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, கிழக்கிலங்கையின் பொத்துவில், அம்பாறை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலை, வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை வழியாக கால்நடையாகவே பயணித்து புறப்பட்ட தனது பிறந்தகத்தை வந்தடைந்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 30 கிலோ மீற்றர் வரை நடந்து 50 நாட்களில் தனது 1500 கிலோ மீற்றர் தூரத்தைப் பூர்த்தி செய்வதே இவரின் இலக்காகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து சாதனம் கண்டு பிடிக்கப்பட முன்னரான கற்கால மனிதன் மிகவும் தூர இடங்களுக்கெல்லாம் கால்நடையாகவே சென்றுள்ளதை நாம் கற்கால வரலாற்றேடுகளில் தான் படித்திருக்கிறோம். ஆனால், நவீன யுகத்தில் அத்தகைய செயற்பாடு மனிதனால் நிகழ்த்தப்படும் போது இன்று அது சாதனையாகப் போற்றப்படுகிறது. ஆனால், அன்றும் இன்றும் வித்தியாசம். காடுகள் அடர்ந்த பாரிய மர நிழலிலே தான், அதுவும் மண் பாதையூடாகவே அன்றைய நடை பவனி அமைந்துள்ளது. இன்று மர நிழல்கள் இல்லாத கற்பாதை ஊடாகவே ஷஹ்மி ஷஹீத் சாதித்துக் கொண்டிருக்கிறார். தன்னந்தனியாக தற்துணிவோடு நடைபயிலும் நிலை, மேலே சுட்டெரிக்கும் சூரியனின் சூடு, சூடேற்றப்பட்ட தார் வீதியின் அனல் கக்கும் உஷ்ணம், இவை ஒரு புறம். மறுபுறத்தில் அவ்வப்போது பொழியும் மழை. இப்படி இயற்கையின் தற்ப, வெப்பங்களையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டிய மனோநிலையோடே இவரின் நடை சஞ்சாரம் நகர வேண்டியுள்ளது.
இலங்கையின் பெயர் போன காட்டு வனப் பகுதிகளையும் கடந்தே செல்ல தற்துணிவு இருந்தால் தான் முடியும். அதுவும் இன்று மனிதனை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. காட்டு யானைகளின் நகரப்பிரவேசம். இந்தப் பீதிக்கும் முகங் கொடுக்க வேண்டிய சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. பிறரது நடைப்பயணத்தின் போது ஊண், உறக்கம், இயற்கை உபாதைகள் என்று தன் வழக்கத்திற்கு மாறான புது அனுபவங்களையும் பெற வேண்டிய நிலைக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்திலையில் ஷஹ்மி பிறந்து வளர்ந்து வந்த வாழ்க்கை பின்னணியை சற்று சீர்த்தூக்கி அலசுவோம்.
பேருவளையில் வறிய குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், இளம் பருவத்திலேயே தந்தையை இழந்துள்ளார். இதனால் இவரது குடும்ப வண்டி, மேடு – பள்ளம், மலை – மடு எல்லாம் தாண்டியே பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த கரடு முரடான பயணம் இவரது சாதனை முயற்சிக்கு இப்போது பக்க பலமாக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது என்றே செல்லலாம். தந்தை எனும் துடுப்பறுந்த படகை செலுத்திய அனுபவம் இவருக்கு துணை நிற்கிறது. அத்தோடு நடையின் போது மாகாணம், மாவட்டம், மாநகரம், நகரம், பட்டிணம், கிராமம், குக்கிராமம் என்றெல்லாம் கடந்து செல்கையில் அந்தந்த இடங்களில் வசிக்கும் பல்லின மக்களாலும் மகத்தான வரவேற்புக்கிடைப்பது இவருக்கு மேலும் உந்து சக்தியை கொடுக்கிறதென்பதை அவ்வப்பகுதி ஊடக செய்தியாளர்களின் அறிக்கையூடாக உணர முடிகிறது.
எத்தகைய, இன, மத வேறுபாடுகளையும் தாண்டி இவர் சந்திக்கும் பிரதேச சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இவருக்கான உபசரிப்புக்களை சம்பிரதாய பூர்வமாக வழங்கிக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம் ஊர்களில் எல்லாம் மிகவும் பரந்த உற்சாகத்துடன் முஸ்லிம்களால் நன்கு உபசரிக்கப்பட்டு வருகிறார்.
மேலும், ஐவேளை தொழுகைகளையும் இவர் போகும் இடங்களில் உரிய நேரத்தில் நிறைவேற்றவும் தவறாது ஆண்மீக பலத்தையும் நிலை நாட்டி வருவதும் இவரின் முயற்சியின் மற்றொரு சிறப்பம்சமெனலாம்.
கடந்த காலமெல்லாம் கஷ்டங்கள் மட்டுமே எனவிருந்த இவர் வாழ்க்கையின் திருப்புனையை தேடிக்கொள்ள ,இவரது அனுசரணையாளர் சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் வழியமைத்துக் கொடுத்தமை ,அவரின் தாராளத் தன்மையைப் புடம் போட்டுக் காட்டுகிறது.
மேலும்,இவரது இச்சாதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து,அடுத்தகட்ட பெரும் திட்டமாக ,இதே 1500 KM தூரத்தை வெறும் 25 நாட்களின் கடந்து உலக சாதனை படைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
(பேருவளை : பீ.எம் முக்தார்)