உள்நாடு

அலவி மௌலான மண்டபம் மீண்டும் மக்கள் பாவனைக்கு

கொழும்பு மருதானை பகுதியில் அமைந்துள்ள அலவி மௌலானா வரவேற்பு மண்டபத்தை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு மாநகர சபையை பொறுப்பேற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மாநகர ஆணையாளர் நாயகம் பத்ராணி ஜயவர்தனவுக்கு (5) உத்தரவிட்டது.

இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிசங்க பந்தல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்பிக்க அன்றைய தினம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதிகள் குழாமின் உத்தரவுக்கமைய கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மற்றும் அதன் முன்னாள் உறுப்பினர் கித்சிரி ராஜபக்ஷ ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பயன்பாட்டிற்காக கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் அலவி மௌலானா வரவேற்பு மண்டப கட்டுமானம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் மருதானை அமைப்பாளர் கித்சிறி ராஜபக்பக்ச என்ற அரசியல்வாதி தனது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மண்டபத்தை சுற்றியுள்ள மதில்கள் அப்புறப்படுத்தப்பட்டு பலவந்தமாக அதன் கட்டிடம் அடங்களாக குறித்த காணிப் பகுதி அருகிலுள்ள விகாரைக்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் பிரகாரமும் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஜித் பெரரோ என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்த கொழும்பு மாநகர ஆணையாளர் மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *