மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மக்கா நகரில் இன்று 09 ஆம் திகதி ஆரம்பம்..! இம்முறை இலங்கை சார்பாக புனித மக்காவுக்குச் செல்லும் போட்டியாளர் அல் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக்..!
சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரிலான சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இன்று 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 திகதி வரை மக்காமா நகரில் நடைபெறுகிறது. இப்போட்டி நிகழ்ச்சிகள் தொடராகப் 15 நாட்கள் நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு இறுதி நாளன்று பரிசில்கள் வழங்கிவைக்கப்படும். இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்தும் அல் குர்ஆனை மனனம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றனர்.
இப்போட்டியில் வெற்றியீட்டுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் சவுதி அரேபியா மேற்கொண்டுள்ளது. இலங்கை நாணயப்படி 35 கோடி ரூபாவை பரிசில்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள சவுதி, இப்போட்டியில் முதலாமிடத்தைப் பெறும் அதிஷ்டசாலிக்கு 4 கோடி ரூபாவை வழங்க உள்ளது.
இரு புனித பள்ளிவாசல்களின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுடன் இஸ்லாமிய கலாசார அமைச்சர் அப்துல் லதீப் ஆல் ஷைக்கின் கண்காணிப்பில் இன்று ஆரம்பமாகும் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி 44 வது தடவையாக நடாத்தப்படுகிறது.
அல் குர்ஆன் ஏக அல்லாஹ்விடமிருந்து மனித சமூகத்துக்கு நேர்வழிகாட்ட வந்த இறைவேதமாகும். நேர்வழியை நாடக்கூடியவர்களுக்கு அல் குர்ஆனில் நேர்வழி இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதரும் சான்று பகர்கின்றனர். உலகம் அழியும் வரை இப்புனித குர்ஆன் உலக மக்களுக்கு நேர்வழி காட்டிக் கொண்டே இருக்கும். இதை வாழும் அற்புதமாகவே அல்லாஹ் ஆக்கியிருக்கிறான்.
அந்த வகையில் குர்ஆனுக்கும் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய அனைத்து கண்ணியங்களையும் கௌரவங்களையும் சவுதி அரசாங்கம் வழங்கி வருக்கிறது. அல் குர்ஆனின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் மகத்தான பணியை சவுதி அரசு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. இதன் நிமித்தம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிராந்திய நாடுகளிலும் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் அல் குர்ஆன் மனனப் போட்டிகளை நடாத்துகிறது.
அந்த வகையில் இன்று மக்காவில் சர்வதேச குர்ஆன் மனனப்போட்டி ஆரம்பமாகின்றது. அதேநேரம் சவுதி அரேபியாவின் நீண்ட கால நட்பு நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஊடாக கடந்த வருடம் தேசிய மட்ட அல் குர்ஆன் மனனப் போட்டி முதற்தடவையாக நடாத்தப்பட்டன. சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் மாபெரும் பரிசுத் தொகையிலான இப்போட்டி இந்நாட்டில் நடாத்தப்படுவதற்கான ஒத்துழைப்பையும் ஏற்பாடுகளையும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பங்குபற்றிய அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் ஒன்றரைக் கோடி ரூபாக்கும் மேல் பெறுமதிமிக்க பரிசில்களை வென்றெடுத்தனர்.
இது போன்ற குர்ஆன் மனனப்போட்டிகளை சவுதி அரசாங்கம் தேசிய, சர்வதேச ரீதியில் நடாத்தி உலக மக்களது நன்மதிப்பைப் பெற்றுள்ளது. உலகில் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ளவும் இலவசமாக புனித மக்காவை தரிசிக்கவும் புனித உம்ராவை நிறைவேற்றவும் வெற்றி பெறும் போது பெறுமதியான பரிசுகள் கிடைக்கவும் வழியமைத்துக் கொடுக்கிறது சவுதி அரேபியா. இதனால் சவுதியின் இம்மகத்தான பணியினால் உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் மிக்க மகிழ்ச்சிடைகின்றனர். பலரது நீண்ட நாள் கனவு இதன் மூலம் நிறைவேறுகிறது எனலாம்.
ஆகவே இம்முறை இலங்கை சார்பாக புனித மக்காவுக்குச் செல்லும் போட்டியாளர் அல் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக் முதல் பரிசை வென்று நாட்டுக்கும் நாட்டு முஸ்லிம்களுக்கும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும். அத்தோடு இப்போட்டி புனித மக்காவில் சிறப்பாக நடைபெற வேண்டும். இப்போட்டியை சகல செலவுகளுடனும் நடாத்தும் சவுதி அரேபிய மன்னர், பட்டத்து இளவரசர், இஸ்லாமிய விவகார அமைச்சர் மற்றும் சவுதி அரேபிய அரசுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தனை புரிகின்றேன்.
மௌலவி எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி (பி.ஏ)
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு