உள்நாடு

இலங்கை இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம்..!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆதரவுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து 2024 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கோட்டே ஶ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய சந்தன மர பூங்காவில் இலங்கை இந்திய நட்புறவு வளைவினை அங்குரார்ப்பணம் செய்துள்ளன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்கள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களுடன் இணைந்து இலங்கை இந்திய நட்புறவு வளைவினை திறந்துவைத்த நிலையில் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பதவிதாரிகளான பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம் ஏ சுமந்திரன், கௌரவ கலாநிதி வே. இராதாகிருஸ்ணன், கௌரவ ஜகத் குமார சுமித்ராஆராய்ச்சி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இத்தேசிய சந்தன மர பூங்காவில் பூ மருதம் மரக் கன்றுகளை வளைவு வடிவிலான ஒழுங்கில் நாட்டிவைத்தனர்.

சுற்றுச்சூழலுக்கான உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் 2024 உலக சுற்றாடல் தினத்தன்று பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட #Plant4Mother திட்டத்தின் அங்கமாக இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது. அதனை முன்னிட்டு புது டில்லியில் உள்ள புத்த ஜயந்தி பூங்காவில் 2024 ஜூன் 05 ஆம் திகதி அன்று அரச மரக்கன்று ஒன்றினை நாட்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார். இத்திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும், அதேநேரம் வெளிநாடுகளில் உள்ளவர்களும் இணையவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். முழுமையான அரசாங்கம் மற்றும் முழுமையனா சமூகம் அணுகுமுறையினை பின்பற்றி இந்தியாவில் 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் 800 மில்லியன் மரங்களை நாட்டுவதற்கும் 2025 மார்ச்சிற்குள் 1.4 பில்லியன் மரங்களை நாட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய நட்புறவு வளைவினை அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவிற்கான ஒரு சான்றாக அமைகின்றது. ஸ்திரமான பொருளாதார அபிவிருத்தி மற்றும் பரஸ்பரம் நன்மைதரக் கூடிய இருதரப்பு பங்குடைமையினை மேம்படுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் ஆகியவற்றுக்கான பொதுவான இலக்கினையும் இது குறித்து நிற்கின்றது.

 

(இந்திய உயர் ஸ்தானிகராலயம் -கொழும்பு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *