வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 344 பேர் பலி..! 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை..! 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்கவைப்பு..!
நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் தொலைபேசி ‘ஜிபிஎஸ் சிக்னல்’ வாயிலாக அவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சத்தை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதேபோல் அவரது மனைவி கமலா ரூ.33,000 வழங்கியுள்ளார்.
இந்நிலையில், வயநாடு அருகே முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். ராணுவத்தில் கவுரவ லெஃப்டினண்ட் கர்னல் பதவியில் உள்ள நடிகர் மோகன்லால் ராணுவ சீருடையில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இதையடுத்து, நடிகர் மோகன்லால் தனது விஸ்வசாந்தி ஃபவுண்டேஷன் மூலம் வயநாடு மீட்புப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “நிலச்சரிவினால் வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பை நேரில் கண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்பு மற்றும் பிற அமைப்புகள், உள்ளூர்வாசிகள் என அனைவரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் 344 பிரேத பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதில் 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் குழு ஒன்று வியாழனன்று 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடித்தது. இதன்மூலம், கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல வசதியாக, தேடுதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 91 முகாம்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பேரிடரின் பின்விளைவுகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்காக மனநலப் பேரிடர் மேலாண்மைக் குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது.